திருமுறை 2 · 2.120 · 11

திருச்சிற்றம்பலம்

திருமூக்கீச்சரம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
செவ்வழி
தலம்
மூக்கீச்சரம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்காந்தளாரும் விரலேழை யொடாடிய காரணம்ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோவேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.
சொற்பிரிப்பு
சாந்தம் வெண்ணீறு எனப்பூசி வெள்ளம் சடை வைத்தவர்காந்தளாரும் விரல் ஏழையோடு ஆடிய காரணம்ஆய்ந்து கொண்டாம் அறிய நிறைந்தாரவர் ஆர்கொலோவேந்தன் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.
உரை

சாந்தம் ஈது என வெண்ணீறு பூசி, கங்கை வெள்ளத்தைச் சடையில் வைத்தவர்; செங்காந்தளை ஒத்த விரல்களை உடைய ஏழையுடன் மகிழ்ந்தவர்; அவ்வாறு மகிழ்ந்து ஆடியதற்குக் காரணம் ஆய்ந்து அறியத் தக்கது; வேந்தன் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்ற மெய்ம்மையை ஆராய்ந்து அறிய அறிவு நிறைந்தவர் யார்கொல்?

2

வெண்டலையோர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக்கொண்டலாரும் புனல்சேர்த் துமையாளொடுங் கூட்டமாவிண்டவர்தம் மதிலெய்த பின்வேனில் வேள்வெந்தெழக்கண்டவர்மூக் கீச்சரத்தெம் அடிகள்செய் கன்மமே.
சொற்பிரிப்பு
வெண் தலையோர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக்கொண்டல் ஆரும் புனல் சேர்த்து உமையாளொடும் கூட்டமாவிண்டவர் தம்மதில் எய்தபின் வேனில்வேள் வெந்தெழக்கண்டவர் மூக்கீச்சரத்து எம்மடிகள் செய் கன்மமே.
உரை

பிரம கபாலமாகிய வெளிறிய தலையைக் கலனாகக் கொண்டு பிச்சை தேர்வார்;விரிந்து பரந்த சடையில் நிறுத்த அரிய கங்கைப் புனலைச் சேர்த்தவர்; உமையாளொடும் கூடியவர்; பகைத்தவர்களின் மதில்களை எய்து அழித்தார்; பின் வேனில் வேளும் எரியில் வேவச் செய்து பின் எழக்கண்டார்; இவை மூக்கீச்சரத்து அடிகள் செய்த செயல்கள்.

3

மருவலார்தம் மதிலெய்த துவும்மான் மதலையைஉருவிலாரவ் வெரியூட்டி யதும்முல குண்டதால்செருவிலாரும் புலிசெங் கயலானை யினான் செய்தபொருவின்மூக் கீச்சரத்தெம் அடிகள் செயும்பூசலே.
சொற்பிரிப்பு
மருவலார் தம்மதில் எய்ததுவும் மான் மதலையைஉருவிலார் அவ் எரியூட்டியதும் உலகு உண்டதால்செருவில் ஆரும்புலி செங்கயல் ஆனையினான் செய்தபொருவின் மூக்கீச்சரத்து எம்மடிகள் செயும் பூசலே.
உரை

சேர பாண்டியர்களை வென்று தமிழ்கூறும் நல்லுலகை ஆண்ட கோச்செங்கட்சோழன் சமைத்த நிகரிலாத மூக்கீச்சரத்து எம் சுவாமிகள் தன்னொடுபொருந்தாத அசுரர்களின் முப்புரங்களை அழித்ததுவும், திருமாலின் மகனை உருவில்நிறைய எரியூட்டியதும் ஆகிய பூசலை ஆராய்ந்து மெய்ம்மையை அறிவர் யார்?

4

அன்னமன்னந் நடைச்சாய லாளோ டழகெய்தவேமின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணம்தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்குசெங் கோலினான்மன்னன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோர்மாயமே.
சொற்பிரிப்பு
அன்னம் அன்னந் நடைச் சாயலாளோடு அழகு எய்தவேமின்னை அன்ன சடைக் கங்கையாள் மேவிய காரணம்தென்னன் கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான்மன்னன் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றது ஓர் மாயமே.
உரை

அன்னப் பறவை போன்ற மென்னடைச் சாயல் கொண்ட உமையம்மையை இடப்பாகத்திற் கொண்ட அழகுடன் மின்னலைப் போல ஒளிதிகழும் சடையில் கங்கையாளைப் பொருந்திய காரணம் பாண்டிய, சோழ சேர மண்டலங்களில் ஓங்கிய செங்கோலினை உடைய வேந்தன் கோச்செங்கணான் சமைத்த திருமூக்கீச்சரத்து அடிகளாகிய சிவபிரான் செய்யும் மாயமே, இதன் மெய்ம்மையை யாரறிவார்?

5

விடமுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை வீக்கியேநடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள்வடமன்நீடு புகழ்ப்பூழி யன்தென்னவன் கோழிமன்அடல்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே.
சொற்பிரிப்பு
விடம் முனார் அவ் அழல் வாயதோர் பாம்பரை வீக்கியேநடம் முனார் அவ் அழல் ஆடுவர் பேயொடு நள்ளிருள்வடம் மன் ஈடுபுகழ்ப் பூழியன் தென்னவன் கோழிமன்அடன் மன் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்ற ஓர் அச்சமே.
உரை

தீயினைப் போலச் சுட்டெரிக்கும் நஞ்சினை வாயில் உடைய கொடிய பாம்பினை அரையில் கட்டி, பேயொடு நள்ளிருளில் ஊழித் தீயில் கூத்தாடுதலையும் உடையர்; வடக்கில் நீண்ட புகழினை உடையவன்; சேரன், பாண்டியன், சோழ மன்னன் போர் வேந்தனாகிய கோச்செங்கட்சோழன் சமைத்த மூக்கீச்சரத்து அடிகள் செய்யும் செயல் பேரச்சமே. இச்செயலின் மெய்ம்மையை அறிவார் யார்?

6

வெந்தநீறு மெய்யிற்பூசு வராடுவர் வீங்கிருள்வந்தெனாரவ் வளைகொள்வதும் இங்கொரு மாயமாம்அந்தண்மாமா னதன்னே ரியன்செம்பிய னாக்கியஎந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரேதமே.
சொற்பிரிப்பு
வெந்த நீறு மெய்யிற் பூசுவர் ஆடுவர் வீங்கிருள்வந்து எனர் அவ்வளை கொள்வது இங்கொரு மாயமாம்அந்தண் மா மானதன் நேரியன் செம்பியன் ஆக்கியஎந்தை மூக்கீச்சரத்தடிகள் செய்கின்றது ஓர் ஏதமே.
உரை

வெந்த சாம்பலை மேனியில் பூசுவர்; வீங்கு இருளில் கூத்தாடுவார்; இங்கு வந்து என்னுடைய கைவளை கொள்வதும் ஒரு மாயமாம்; செந்தண்மை உடையவன்; பகைவரது மானத்தை அழிப்பவன்; நேரியன்; செம்பியன்; கோச்செங்கட் சோழன் உண்டாக்கிய மூக்கீச்சரத்துள் எந்தை; அவ்வடிகள் செய்கின்றது ஒரு ஏதமே.

7

அரையிலாருங் கலையில்லவ னாணொடு பெண்ணுமாய்உரையிலாரவ் வழலாடுவ ரொன்றலர் காண்மினோவிரவலார்தம் மதில்மூன் றுடன்வெவ்வழ லாக்கினான்அரையன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே.
சொற்பிரிப்பு
அரையில் ஆருங்கலை இல்லவன் ஆணொடு பெண்ணுமாய்உரையிலார் அவ் அழல் ஆடுவர் ஒன்றலர் காண்மினோவிரவலார் தம் மதில் மூன்று உடன் வெவ்வழல் ஆக்கினான்அரையன் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே.
உரை

இடையில் பொருந்தும் ஆடையில்லாதவன்; பெண்ணுமாவன்; ஆணுமாவன்; இவ்விரண்டில் ஒன்றாகச் சொல்லப்படுவானல்லன்; தீயாடுவர்; ஒன்றலர்; பகைவருடைய மதில்கள் மூன்றையும் ஒருசேர வெவ்வழல் கொளச் செய்தான்; வேந்தன் செய்த மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே.

8

ஈர்க்குநீர்செஞ் சடைக்கேற்ற துங்கூற்றை யுதைத்ததும்கூர்க்குநன்மூ விலைவேல்வல னேந்திய கொள்கையும்ஆர்க்கும்வாயான் அரக்கன்னுரத் தைந்நெரித் தவ்வடல்மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே.
சொற்பிரிப்பு
ஈர்க்கு நீர் செஞ்சடைக்கு ஏற்றதும் கூற்றை உதைத்ததும்கூர்க்கு நன்மூவிலை வேல்வலன் ஏந்திய கொள்கையும்ஆர்க்கும் வாயான் அரக்கன் உரதை நெரித்த அவ்வடல்மூர்க்கன் மூக்கீச்சரத்து அடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே.
உரை

ஆரவாரிக்கும் வாயான் அரக்கன் இராவணனின் நெஞ்சுரத்தை நெரித்த வலியனாகிய மூக்கீச்சரத்து அடிகள்; தன் ஓட்டத்தில் இழுத்துச் செல்லும் நீரினைச் செஞ்சடையில் ஏற்றதும்; எமனை உதைத்துக் கொன்றதும்; கூர்மையான நல்ல மூவிலை வேலினை வலம் ஆக ஏந்திய கொள்கையும் ஆகிய செயல்கள் அவருடைய வல்லமையை வெளிப்படுத்துவனவே.

9

நீருளாரும் மலர்மேல் உறைவான்நெடு மாலுமாய்ச்சீருளாருங் கழல்தேட மெய்த்தீத்திர ளாயினான்சீரினாலங் கொளிர்தென்ன வன்செம்பியன் வில்லவன்சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் செம்மையே.
சொற்பிரிப்பு
நீர் உளாரும் மலர் மேல் உறைவான் நெடுமாலும் ஆய்ச்சீர் உளாரும் கழல் தேட மெய்த் தீத்திரள் ஆயினான்சீரினால் அங்கு ஒளிர் தென்னவன் செம்பியன் வில்லவன்சேரும் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் செம்மையே.
உரை

நீருள் பூக்கும் மலராகிய தாமரையின் மேல் உறைபவன் பிரமன். நெடுமால் இருவரும் கூடிப் பெருமையுடைய கழல்களைத் தேட ஞானத்திரளாய் நின்ற பெருமான்; பெருமையுடன் ஒளிரும் தென்னவன் செம்பியன் வில்லவன் மூவரும் சேர்ந்து வழிபடும் -மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றது ஒப்பற்ற செம்மையே.

10

வெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை யுழல்பவர்உண்பினாலே யுரைப்பார் மொழியூனம தாக்கினான்ஒண்புலால்வேல் மிகவல்லவ னோங்கெழிற் கிள்ளிசேர்பண்பின்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே.
சொற்பிரிப்பு
வெண் புலான் மார்பிடு துகிலினர்வெற்றரை உழல்பவர்உண்பினாலே உரைப்பார் மொழி ஊனம் அதாக்கினான்ஒண் புலால் வேல் மிக வல்லவன் ஓங்கு எழில் கிள்ளிசேர்பண்பின் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் பச்சையே.
உரை

பகைவரின் உடலைச் சிதைத்த வேலினனாகிய எழில்மிகு கிள்ளி சேரும் மூக்கீச்சரத்து அடிகள் பருத்த உடல்மேல் துகிலைப் போர்ப்பவராகிய தேரர்; ஆடையில்லாமல் அலைபவராகிய சமணர் தன் முன்னை வினைப்பயன் நுகர்வாலே உரைக்கும் பொய் மொழிகளை வெற்றுரையாக்கினான். அவன் செய்கின்ற செயல் என்றும் வாடாது நிற்பதுவே.

11

மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சரத் தடிகளைச்செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்நல்லராய்வாழ் பவர்காழி யுள்ஞானசம் பந்தனசொல்லவல்லா ரவர்வானுல காளவும் வல்லரே.
சொற்பிரிப்பு
மல்லையார் மும்மடி மன்னர் மூக்கீச்சரத்து அடிகளைச்செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்நல்லராய் வாழ்பவர் காழியுள் ஞானசம்பந்தன்சொல்ல வல்லார் அவர் வானுலகு ஆளவும் வல்லரே.
உரை

செல்வம் மிக்க முடிமன்னர்கள் மூவரும் வந்து வணங்க நின்றவர் மூக்கீச்சரத்து அடிகள். அவரைச் செல்வராக நினையும்படி காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழில் சொன்னது இத்திருப்பதிகம். அன்புடையோராய் இத்திருப்பதிகப் பாடல்களைச் சொல்ல வல்லவர் இவ்வுலகத்தை மட்டுமன்றி வானுலகாளவும் வல்லர்.

திருச்சிற்றம்பலம்