திருமுறை 2 · 2.119 · 11

திருச்சிற்றம்பலம்

திருநாகேச்சரம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
செவ்வழி
தலம்
நாகேச்சுரம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

தழைகொள்சந் தும்மகி லும்மயிற் பீலியுஞ் சாதியின்பழமும்உந் திப்புனல் பாய்பழங் காவிரித் தென்கரைநழுவில்வா னோர்தொழ நல்குசீர் மல்குநா கேச்சரத்தழகர்பா தந்தொழு தேத்தவல் லார்க்கழ காகுமே.
சொற்பிரிப்பு
தழைகொள் சந்தும் அகிலும் மயிற்பீலியும் சாதியின்பழமும் உந்திப் புனல் பாய் பழங்காவிரித் தென்கரைநழுவில் வானோர் தொழ நல்கு சீர்மல்கு நாகேச்சரத்துஅழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே.
உரை

தழைத்த சந்தனம், அகில், மயிற்பீலி, சாதியின் பழம் முதலியவற்றை உந்திக் கொண்டு வெள்ளம் பாய்கின்ற பழங்காவிரியாற்றின் தென்கரையினில் வழுவுதல் இன்றி வானோர்கள் தொழ அவர்களுக்கு அருளும் பெருமை நிறைந்த திருநாகேச்சுரத்து அழகருடைய திருப்பாதங்களைத் தொழுது ஏத்த வல்லாருக்கு அது அழகாகும்.

2

பெண்ணொர்பா கம்மடை யச்சடை யிற்புனல் பேணியவண்ணமா னபெரு மான்மரு வும்மிடம் மண்ணுளார்நண்ணிநா ளுந்தொழு தேத்திநன் கெய்துநா கேச்சரம்கண்ணினாற் காணவல் லாரவர் கண்ணுடை யார்களே.
சொற்பிரிப்பு
பெண் ஒர்பாகம் அடையச் சடையில் புனல்பேணியவண்ணம் ஆன பெருமான் மருவும் இடம் மண் உளார்நண்ணி நாளும் தொழுது ஏத்தி நன்கு எய்து நாகேச்சரம்கண்ணினால் காண வல்லார் அவர் கண் உடையார்களே.
உரை

பெண்கோலம் ஒருபாகத்தில் பொருந்த, சடையில் கங்கைப் புனலை வைத்த  அழகன் ஆகிய பெருமான் எழுந்தருளும் இடம் உலகில் உள்ளவர்கள் வந்து நாளும் தொழுது ஏத்தி நன்மை எய்தும் திருநாகேச்சுரம். அதைக் கண்ணினால் காண வல்லவர்கள்கண்ணுடையவர்களே.

3

குறவர்கொல் லைப்புனங் கொள்ளைகொண் டும்மணி குலவுநீர்பறவையா லப்பரக் கும்பழங் காவிரித் தென்கரைநறவநா றும்பொழில் சூழ்ந்தழ காயநா கேச்சரத்திறைவர்பா தந்தொழு தேத்தவல் லார்க்கிட ரில்லையே.
சொற்பிரிப்பு
குறவர் கொல்லைப் புனம் கொள்ளை கொண்டும் மணிகுலவுநீர்பறவை ஆலப் பரக்கும் பழங்காவிரித் தென்கரைநறவ நாறும் பொழில் சூழ்ந்த அழகாய நாகேச்சரத்துஇறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே.
உரை

குறிஞ்சிக் குறவர்களின் கொல்லையில் தினைப் புனம் முதலியவற்றைக் கொள்ளை கொண்டும், ஒளி குலவும் வெள்ளநீரில் வண்டுகள் மொய்க்கவும்; பரந்து வரும் பழங்காவிரியின் தென்கரையில் தேன் மணக்கும் பொழில்கள் சூழ்ந்ததுவும் அழகாயதும் ஆகியது திருநாகேச்சுரம். திருநாகேச்சுரத்து இறைவருடைய திருப்பாதங்களைத் தொழுது ஏத்த வல்லார்க்கு இடரே இல்லை.

4

கூசநோக் காதுமுன் சொன்னபொய் கொடுவினை குற்றமும்நாசமாக் கும்மனத் தார்கள்வந் தாடுநா கேச்சரம்தேசமாக் கும்திருக் கோயிலாக் கொண்டசெல் வன்கழல்நேசமாக் குந்திறத் தார்அறத் தார்நெறிப் பாலரே.
சொற்பிரிப்பு
கூச நோக்காது முன் சொன்ன பொய் கொடு வினை குற்றமும்நாசம் ஆக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சரம்தேசம் ஆக்கும் திருக்கோயிலாக் கொண்ட செல்வன் கழல்நேசம் ஆக்கும் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே.
உரை

கூசச் சொன்ன பொய், நோக்காது சொன்ன பொய், கொடு வினை குற்றம் முதலாய பாவங்களை நாசமாக்கும் கருத்தினர்கள் வந்து தீர்த்தமாடும் தலம் திருநாகேச்சுரம் .திருநாகேச்சுரத்தைத் திருக்கோயிலாகக் கொண்ட செல்வனின் திருவடிகள்மேல் அன்பு கொளும் திறத்தார் சிவதன்மமுடையார்; அவர்கள் நன்னெறிப் பாலரே ஆவர்.

5

வம்புநா றும்மல ரும்மலைப் பண்டமுங் கொண்டுநீர்பைம்பொன்வா ரிக்கொழிக் கும்பழங் காவிரித் தென்கரைநம்பன்நா ளும்அமர் கின்றநா கேச்சரம் நண்ணுவார்உம்பர்வா னோர்தொழச் சென்றுட னாவதும் உண்மையே.
சொற்பிரிப்பு
வம்பு நாறும் மலரும் மலைப் பண்டமும் கொண்டு நீர்பைம் பொன் வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரைநம்பன் நாளும் அமர்கின்ற நாகேச்சர நண்ணுவார்உம்பர் வானோர் தொழச் சென்று உடனாவதும் உண்மையே.
உரை

புதுமணம் கமழும் மலர்களும் மலைப்பண்டங்களும் கொண்டு வெள்ளநீர் பசும்பொன்னை வாரிக் கொழிக்கும் பழங்காவிரியின் தென்கரையில் நம் விருப்பத்திற்குரியவன் நாளும் விரும்பி அமர்கின்ற திருநாகேச்சுரத்தை அடைவார் மேலுலகத்து வானவர்கள் தொழச் சென்று அத்தேவர்களுடன் வாழ்வதும் உண்மையே.

6

காளமே கந்நிறக் காலனோ டந்தகன் கருடனும்நீளமாய் நின்றெய்த காமனும் பட்டன நினைவுறின்நாளுநா தன்அமர் கின்றநா கேச்சரம் நண்ணுவார்கோளுநா ளுந்தீய வேனும்நன் காங்குறிக் கொண்மினே.
சொற்பிரிப்பு
காளமேகம் நிறக் காலனோடு அந்தகன் கருடனும்நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவு உறின்நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சர நண்ணுவார்கோளும் நாளும் தீயவேனும் நன்கு ஆம் குறிக்கொண்மினே.
உரை

காளமேக நிறக்காலன்; அந்தகன், கருடன், தூரத்தே நின்று மலரம்பு எய்த காமன் முதலியோர் அழிந்த காரணத்தை நினைவுற்றால் தலைவனாகிய சிவன் நாளும் விரும்பிஅமர்ந்துள்ள திருநாகேச்சுரத்தை நண்ணுவார்; திருநாகேச்சுரத்தைச் சரணாக நண்ணியவர்களைக் கோளும் நாளும் தீயவேனும் தீய செய்யா; நன்மையே செய்யும்; இவ்வுண்மையைக் கருத்தில் கொண்மின்.

7

வேயுதிர் முத்தொடு மத்தயா னைமருப் பும்விராய்ப்பாய்புனல் வந்தலைக் கும்பழங் காவிரித் தென்கரைநாயிறுந் திங்களுங் கூடிவந் தாடுநா கேச்சரம்மேயவன் றன்அடி போற்றியென் பார்வினை வீடுமே.
சொற்பிரிப்பு
வேய் உதிர் முத்தொடு மத்த யானை மருப்பும் விராய்ப்பாய் புனல் வந்தலைக்கும் பழங்காவிரித் தென்கரைநாயிறும் திங்களும் கூடி வந்தாடு நாகேச்சரம்மேயவன் தன்னடி போற்றி என்பார் வினை வீடுமே.
உரை

மூங்கில் உதிர்த்த முத்துக்களுடன் யானையின் தந்தங்களும் கலந்து பாய்கின்ற வெள்ளம் கொண்டுவந்து அலைக்கும் பழங்காவிரியின் தென்கரையில், சூரியனும் சந்திரனும் கூடி வந்து தீர்த்தம் ஆடும் திருநாகேச்சுரத்தில் எழுந்தருளியிருப்பவனின் திருவடிகளைப் போற்றி என வழிபடுவோருடைய வினைகள் அனைத்தும் அழியும்.

8

இலங்கைவேந் தன்சிரம் பத்திரட் டியெழில் தோள்களும்மலங்கிவீ ழம்மலை யால்அடர்த் தானிட மல்கியநலங்கொள்சிந் தையவர் நாடொறும் நண்ணும்நா கேச்சரம்வலங்கொள்சிந் தையுடை யார்இட ராயின மாயுமே.
சொற்பிரிப்பு
இலங்கை வேந்தன் சிரம் பத்திரட்டிஎழில் தோள்களும்மலங்கி வீழ அம்மலையால் அடர்த்தான் இடம் மல்கியநலம் கொள் சிந்தையவர் நாள்தொறும் நண்ணு நாகேச்சரம்வலம் கொள் சிந்தை உடையார் இடர் ஆயின மாயுமே.
உரை

இலங்கை வேந்தன் இராவணனின் தலை பத்தும் இருபது எழிலான தோள்களும் சாய்ந்து வீழக், கயிலை மலையின் அடியில் நசுக்கினான்; அச்சிவன் எழுந்தருளிய இடம், நலம் நல்கும் சிந்தனையை உடையவர்கள் தினந்தோறும் அடையும் திருநாகேச்சுரம். அதை வலம் வரும் கருத்து உடையவர்களின் இடர்கள் ஆயின மாய்ந்தொழியும்.

9

கரியமா லும்அய னும்மடி யும்முடி காண்பொணாஎரியதா கிந்நிமிர்ந் தான்அம ரும்மிட மீண்டுகாவிரியின்நீர் வந்தலைக் குங்கரை மேவுநா கேச்சரம்பிரிவிலா தவ்வடி யார்கள்வா னிற்பிரி யார்களே.
சொற்பிரிப்பு
கரிய மாலும் அயனும் அடியும் முடி காண்பு ஒணாஎரியதாகி நிமிர்ந்தான் அமரும் இடம் ஈண்டுகாவிரியினீர் வந்து அலைக்கும் கரைமேவு நாகேச்சரம்பிரிவிலாத அவ் அடியார்கள் வானிற் பிரியார்களே.
உரை

கரியனாகிய திருமாலும், நான்முகனும் அடியும் முடியும் காண முடியாமல் நெருப்புப் பிழம்பாக உயர்ந்தான் ஆகிய சிவன் விரும்பி அமரும் இடம், காவிரி வெள்ளம் பெருகி மோதி அலைக்கும் கரையில் மேவிய திருநாகேச்சுரம் அதை விட்டுப் பிரிதல் இல்லாத அடியார்கள் சிவலோகத்தைப் பிரியார்.

10

தட்டிடுக் கியுறி தூக்கிய கையினர் சாக்கியர்கட்டுரைக் கும்மொழி கொள்ளலும் வெள்ளிலங் காட்டிடைநட்டிருட் கண்நட மாடிய நாதன்நா கேச்சரம்மட்டிருக் கும்மல ரிட்டடி வீழ்வது வாய்மையே.
சொற்பிரிப்பு
தட்டிடுக்கி உறி தூக்கிய கையினர் சாக்கியர்கட்டுரைக்கும் மொழி கொள்ளலும் வெள் இலங்காட்டிடைநட்டிருட் கண் நடமாடிய நாதன் நாகேச்சரம்மட்டிருக்கும் மலரிட்டடி வீழ்வது வாய்மையே.
உரை

பாயை இடுக்கி உறியைத் தூக்கிய கையினராகிய சமணரும், சாக்கியரும் கற்பனை செய்து உரைக்கும் மொழிகளைக் கொள்ளன்மின். பாடைகள் கிடக்கும் சுடுகாட்டிடை நள்ளிருளில் கூத்தாடிய நாதன் திருநாகேச்சுரத்தானைத் தேனிருக்கும் மலரினை இட்டுத் திருவடிகளில் வீழ்வது மெய்ம்மையான நன்மையைப் பயக்கும்.

11

கந்தநா றும்புனற் காவிரித் தென்கரை கண்ணுதல்நந்திசே ருந்திரு நாகேச்ச ரத்தின்மேன் ஞானசம்பந்தன்நா விற்பனு வல்லிவை பத்தும்வல் லார்கள்போய்எந்தையீ சன்னிருக் கும்முல கெய்தவல் லார்களே.
சொற்பிரிப்பு
கந்த நாறும் புனற் காவிரித் தென்கரைக் கண்ணுதல்நந்தி சேரும் திருநாகேச்சரத்தின் மேல் ஞானசம்பந்தன் நாவில் பனுவல்லிவை பத்தும் வல்லார்கள் போய்எந்தை ஈசன் இருக்கும் உலகெய்த வல்லார்களே.
உரை

மணம் நாறும் புனல் வெள்ளமுடைய காவிரியாற்றின் தென்கரையினில் நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான் எழுந்தருளும் திருநாகேச்சுரத்தின்மேல் ஞானசம்பந்தன் நாவினால் நவின்ற இத்திருப்பனுவல் பத்தினையும் வல்லவர்கள் எந்தை ஈசனாகிய சிவபிரான் இருக்கும் உலகினை எய்த வல்லவர்களாவர்.

திருச்சிற்றம்பலம்