திருமுறை 2 · 2.116 · 11

திருச்சிற்றம்பலம்

திருநாகைக்காரோணம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
செவ்வழி
தலம்
நாகைக்காரோணம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

கூனல்திங்கட் குறுங்கண்ணி கான்றந்நெடு வெண்ணிலாஏனற்பூத்தம் மராங்கோதை யோடும்விரா வுஞ்சடைவானநாடன் அமரர் பெரு மாற்கிட மாவதுகானல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
சொற்பிரிப்பு
கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்றந் நெடுவெண்ணிலாஏனல் பூத்தம் மராங் கோதையோடும் விராவும் சடைவான நாடன் அமரர் பெருமாற்கு இடம் ஆவதுகானல் வேலி கழிசூழ் கடல் நாகைக்காரோணமே.
உரை

வளைந்த பிறையாகிய தலைமாலையின் வெண்மையான ஒளியுடன், வேனிற் காலத்தில் பூத்த கடம்ப மலர்களையும் கலந்த சடையுடையவன்; வானநாடன்; அமரர் பெருமான்; அவனுக்கு இடமாவது, நெய்தலங் கானலாகிய வேலி சூழ்ந்த கடல் நாகைக் காரோணமே.

2

விலங்கலொன்று சிலையாமதில் மூன்றுடன் வீட்டினான்இலங்குகண்டத் தெழிலாமை பூண்டாற் கிடமாவதுமலங்கியோங்கிவ் வருவெண்டிரை மல்கிய மால்கடல்கலங்கலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
சொற்பிரிப்பு
விலங்கல் ஒன்று சிலையா மதில் மூன்றுடன் வீட்டினான்இலங்கு கண்டத்து எழில் ஆமை பூண்டாற்கு இடமாவதுமலங்கி ஓங்கிவரு வெண்திரை மல்கிய மால்கடல்கலங்கல் ஓதம் கழிசூழ் கடல் நாகைக்காரோணமே.
உரை

மலையொன்றை வில்லாகக் கொண்டு மதில்கள் மூன்றனையும் ஒருசேர அழித்தான், விளங்கும் கண்டத்தில் ஆமையைப் பூண்டான்; அவனுக்கு இடமாவது, உயர்ந்து அலைந்து வருகின்ற வெள் அலைகள் மல்கிய கருங்கடலின் கலங்கிய ஓதமுடைய கழிகள் சூழ்ந்த கடல்நாகைக் காரோணமே.

3

வெறிகொளாருங் கடற்கைதை நெய்தல்விரி பூம்பொழில்முறிகொள்ஞாழல் முடப்புன்னை முல்லைம்முகை வெண்மலர்நறைகொள்கொன்றைந் நயந்தோங்கும் நாதற் கிடமாவதுகறைகொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
சொற்பிரிப்பு
வெறி கொள் ஆரும் கடற் கைதை நெய்தல் விரி பூம்பொழில்முறி கொள் ஞாழல் முடப்புன்னை முல்லைம் முகை வெண்மலர்நறை கொள் கொன்றைந் நயந்தோங்கு நாதற்கு இடமாவதுகறை கொள் ஓதம் கழிசூழ் கடல் நாகைக்காரோணமே.
உரை

தேனுடைய கொன்றை மலர்மாலையை விரும்பும் உயர்ந்த தலைவருக்கு இடமாவது, நாற்றம் மிகவும் உடைய கடல்தாழை, நெய்தல், தளிர் மிக்க ஞாழல் மரங்கள், வளைந்த புன்னை, முல்லை வெண்மலரின் முகைகள் பரந்த பூம்பொழில்களும் கரிய ஓதக் கழிகளும் சூழ்ந்த கடல்நாகைக் காரோணமே.

4

வண்டுபாடவ் வளர்கொன்றை மாலைம்மதி யோடுடன்கொண்டகோலங் குளிர்கங்கை தங்குங்குருள் குஞ்சியுள்உண்டுபோலும் மெனவைத்து கந்தவ்வொரு வற்கிடம்கண்டல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
சொற்பிரிப்பு
வண்டு பாட வளர் கொன்றை மாலைம் மதியோடு உடன்கொண்ட கோலம் குளிர்கங்கை தங்கும் குருள்குஞ்சியுள்உண்டு பேரலும் என வைத்து உகந்த ஒருவற்கிடம்கண்டல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.
உரை

வண்டு பாட வளரும் கொன்றை மலர்மாலையை மதியுடன் குளிர் கங்கை தங்கும் கொண்ட கோலம், 'குருள் குஞ்சி உள் உண்டு போலும்' என வைத்து உகந்தவர்க்கிடம் ஆவது, கண்டல் வேலியும் கழியும் சூழ்ந்த கடல்நாகைக்காரோணமே.

5

வார்கொள்கோலம் முலைமங்கை நல்லார்மகிழ்ந் தேத்தவேநீர்கொள்கோலச் சடைநெடு வெண்டிங்கள் நிகழ்வெய்தவேபோர்கொள்சூலப் படைபுல்கு கையார்க் கிடமாவதுகார்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
சொற்பிரிப்பு
வார் கொள் கோலம் முலை மங்கைநல்லார் மகிழ்ந்து ஏத்தவேநீர் கொள் கோலச்சடை நெடுவெண் திங்கள் நிகழ்வெய்தவேபோர் கொள் சூலப்படை புல்கு கையார்க்கு இடமாவதுகார் கொள் ஓதம்கழிசூழ் கடல் நாகைக்காரோணமே.
உரை

முலைக்கச்சு விளங்கும் பொலிவுடைய அழகிய மங்கையர் மகிழ்ந்து வழிபடவும் கங்கை நீர் தங்கும் பொலிவுடைய சடையில் அழியாத வெண்பிறை விளங்கவும் போரில் விளங்கும் சூலப்படை பொருந்திய கையராகிய சிவபிரானுக்கு இடமாவது; கார்மேகம் போலும் கரிய நிறமுடைய கழிகள் சூழும் கடல்நாகைக் காரோணமே.

6

விடையதேறிவ் விடவர வசைத்தவ் விகிர்தரவர்படைகொள்பூதம் பலபாட ஆடும்பர மாயவர்உடைகொள்வேங்கை யுரிதோ லுடையார்க் கிடமாவதுகடைகொள்செல்வங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
சொற்பிரிப்பு
விடையது ஏறி இவ்விட அரவு அசைத்தவ் விகிர்தர் அவர்படை கொள் பூதம் பலபாட ஆடும் பரமாயவர்உடை கொள் வேங்கை உரிதோல் உடையார்க்கு இடமாவதுகடை கொள் செல்வங்கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.
உரை

விடையை ஏறுபவர்; நஞ்சுடைய பாம்பினை அரைக்குக் கச்சாக அசைத்த விகிர்தர். படையாகிய பூதங்கள் பலபாடக் கூத்தாடும் பரமர்; உடையாக வேங்கையினின்றும் உரித்த தோலை உடையவர்; அவருக்கு இடமாவது, மிக்க செல்வமுடையதும் கழிசூழ்ந்ததுமாகிய திருநாகைக்காரோணமே.

7

பொய்துவாழ்வார் மனம்பாழ் படுக்கும் மலர்ப்பூசனைசெய்துவாழ்வார் சிவன்சேவடிக் கேசெலுஞ் சிந்தையார்எய்தவாழ்வார் எழில்நக்க ரெம்மாற் கிடமாவதுகைதல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
சொற்பிரிப்பு
பொய்து வாழ்வார் மனம் பாழ்படுக்கும் மலர்ப்பூசனைசெய்து வாழ்வார் சிவன் சேவடிக்கே செலும் சிந்தையார்எய்த வாழ்வார் எழில் நக்கர் எம்மாற்கு இடமாவதுகைதல் வேலி கழி சூழ் கடல் நாகைக் காரோணமே
உரை

பொய்த்து வாழ்பவர் மனத்தைப் பாழ்படுத்துபவர்; மலரால் பூசனை செய்து வாழ்பவர்; சிவனுடைய திருவடிக்கே செலுத்தும் சிந்தையை உடையவர் ஆகியோர் தன்னை அடையும் பொருட்டு எழுந்தருளிய அழகுடைய நக்கர்; அந்த எம்மானுக்கு இடமாவது தாழைகளாகிய வேலி சூழ்ந்த கடல் நாகைக்காரோணமே.

8

பத்திரட்டி திரள்தோ ளுடையான் முடிபத்திறஅத்திரட்டி விரலால் அடர்த்தார்க் கிடமாவதுமைத்திரட்டிவ் வருவெண் டிரைமல்கிய வார்கடல்கைத்திரட்டும் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
சொற்பிரிப்பு
பத்து இரட்டி திரள் தோள் உடையான் முடிபத்திறஅத்திரட்டி விரலால் அடர்த்தார்க்கு இடமாவதுமைத்திரட்டி இவ்வரு வெண்திரை மல்கிய மாகடல்கைத்திரட்டும் கழி சூழ்கடல் நாகைக்காரோணமே.
உரை

இருபது தோள்கள் உடையான் ஆகிய இராவணனின் முடிகள் பத்தும் இற்றுப் போகுமாறு தன் சிவந்த விரலால் அடர்த்த சிவனுக்கு இடமாவது, கருமை நிறத்த நீரில் திரண்டு வரும் வெண்மையான அலைகள் நிறைந்த பெரிய கடல் பேரொலி செய்யும் கழிசூழ்கடல்நாகைக் காரோணமே.

9

நல்லபோதில் லுறைவானும் மாலுந்நடுக் கத்தினால்அல்லராவ ரெனநின்ற பெம்மாற் கிடமாவதுமல்லலோங்கிவ் வருவெண்டிரை மல்கிய மாகடல்கல்லலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
சொற்பிரிப்பு
நல்ல போதில் உறைவானும் மாலும் நடுக்கத்தினால்அல்லர் ஆவர் என நின்ற பெம்மாற்கு இடமாவதுமல்லல் ஓங்கி இவ்வரு வெண்டிரை மல்கிய மாகடல்கல்லல் ஓதம்கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.
உரை

தாமரை மலரில் வாழும் பிரமனும், திருமாலும் அறிவு மயங்கி ஐயுற நின்ற பெருமானுக்கு இடமாவது, வளமான வெள் அலைகள் மல்கிய கடல் ஓதம் நிறைந்த கழிசூழ் கடல்நாகைக்காரோணமே.

10

உயர்ந்தபோதின் னுருவத் துடைவிட் டுழல்வார்களும்பெயர்ந்தமண்டை யிடுபிண்ட மாவுண் டுழல்வார்களும்நயந்துகாணா வகைநின்ற நாதர்க் கிடமாவதுகயங்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
சொற்பிரிப்பு
உயர்ந்த போதின் உருவத்துடை விட்டு உழல்வார்களும்பெயர்ந்த மண்டையிடு பிண்டம் அரவுண்டு உழல்வார்களும்நயந்து காணா வகை நின்ற நாதர்க்கு இடமாவதுகயங்கொள் ஓதம்கழி சூழ்கடல் நாகைக்காரோணமே.
உரை

உடலில் ஆடையின்றி அலைகின்ற சமணரும், மண்டையில் பெய்த உணவைப் பிண்டமாக்கி உண்டு உழல்கின்ற தேரரும் விரும்பிக் காணாத வகை நின்ற தலைவருக்கு இடமாவது ஆழமான ஓதக் கழிசூழ் கடல்நாகைக்காரோணமே.

11

மல்குதண்பூம் புனல்வாய்ந் தொழுகும்வயற் காழியான்நல்லகேள்வித் தமிழ்ஞான சம்பந்தன் நல்லார்கள்முன்வல்லவாறே புனைந்தேத்துங் காரோணத்து வண்டமிழ்சொல்லுவார்க்கும் இவைகேட்ப வர்க்குந்துய ரில்லையே.
சொற்பிரிப்பு
மல்குதண் பூம்புனல் வாய்ந்து ஒழுகும் வயற்காழியான்நல்ல கேள்வித் தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன்வல்லவாறே புனைந்து ஏத்தும் காரோணத்து வண்டமிழ்சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயர் இல்லையே.
உரை

குளிர்ந்த நீர் நிறைந்து கால்வழியே பாய்ந்தொழுகும் வயல்கள் மிக்க காழியான், கேள்வி ஞானமுள்ள தமிழ் ஞானசம்பந்தன், நல்ல அடியவர்களின் முன்தான் வல்லவாறு புனைந்து ஏத்திப் பாடிய திருநாகைக்காரோணத்து வளமான இத்திருப்பதிகத்தைச்சொல்லுவார்க்கும் இவை கேட்பவருக்கும் துயரில்லையே.

திருச்சிற்றம்பலம்