திருமுறை 2 · 2.113 · 11

திருச்சிற்றம்பலம்

சீர்காழி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
செவ்வழி
தலம்
சீர்காழி - 10-காழி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

பொடியிலங்குந் திருமேனி யாளர்புலி யதளினர்அடியிலங்குங் கழலார்க்க ஆடும்மடி கள்ளிடம்இடியிலங்குங் குரலோதம் மல்கவ்வெறி வார்திரைக்கடியிலங்கும் புனல்முத் தலைக்குங்கடற் காழியே
சொற்பிரிப்பு
பொடி இலங்கும் திருமேனியாளர் புலியதளினர்அடி இலங்கும் கழல் ஆர்க்க ஆடும் அடிகள் இடம்இடி இலங்கும் குரல் ஓதம் மல்கவ் வெறிவார் திரைக்கடி இலங்கும் புனல் முத்தலைக்கும் கடற்காழியே.
உரை

திருநீறு விளங்கும் திருமேனியாளர்; புலித்தோலினர்; திருவடியில் விளங்கும் கழல்கள் ஒலிக்கக் கூத்தாடும் அடிகள்; அவருடைய இடம், இடிபோல் முழங்கும் கடலோதம் மல்க, மோதும் அலைகள் மிகுதியாக விளங்க, நீர் முத்துக்களை எறியும் கடற்காழியே.

2

மயலிலங்குந் துயர்மா சறுப்பானருந் தொண்டர்கள்அயலிலங்கப் பணிசெய்ய நின்றவ்வடி கள்ளிடம்புயலிலங்குங் கொடையாளர் வேதத்தொலி பொலியவேகயலிலங்கும் வயற்கழனி சூழுங்கடற் காழியே.
சொற்பிரிப்பு
மயல் இலங்கும் துயர் மாசறுப்பான் அருந்தொண்டர்கள்அயல் இலங்கப் பணி செய்ய நின்ற இவ்வடிகள் இடம்புயல் இலங்குங் கொடையாளர் வேதத்து ஒலிபொலியவேகயல் இலங்கும் வயல் கழனி சூழும் கடற்காழியே.
உரை

அறிவை மயக்கும் துயரினையும் மாசினையும் அறுக்க வேண்டிஅருந்தொண்டர்கள், அருகிலிருந்து திருப்பணி செய்ய நின்ற சுவாமிகளுக்கு இடம், யாதெனில், கைம்மாறு கருதாது மழையெனக் கொடுக்கும் கொடையாளர்கள் வாழ்வதும், ' வேதவொலியால் பொலிவுற்றதும் கயல்மீன்கள் விளங்கும் வயல்களும் கழனிகளும் சூழுங்கடற் காழியே.

3

கூர்விலங்குந் திருசூல வேலர்குழைக் காதினர்மார்விலங்கும் புரிநூ லுகந்தம்மண வாளனூர்நேர்விலங்கல் லனதிரைகள் மோதந் நெடுந் தாரைவாய்க்கார்விலங்கல் லெனக்கலந் தொழுகுங் கடற் காழியே.
சொற்பிரிப்பு
கூர் விலங்கும் திரிசூல வேலர் குழைக் காதினர்மார் விலங்கும் புரிநூல் உகந்தம் மணவாளனூர்நேர் விலங்க அல்லன திரைகள் மோதந் நெடுந்தாரைவாய்க்கார் விலங்கல் எனக் கலந்து ஒழுகும் கடற்காழியே.
உரை

கூர்மை விளங்கும் திரிசூல வேலர்; குழையுடைய காதினர்; மார்பில் விளங்கும் முப்புரி நூல் உகந்தவர்; நித்த மணாளர்; மலைபோல் உயர்ந்து விளங்கும் அலைகள் மோத,நீண்ட மழைத் தாரையிடத்து கார்மேகம் மலையெனக் கலந்தொழுகும் கடற்காழியே.

4

குற்றமில்லார் குறைபாடு செய்வார்பழி தீர்ப்பவர்பெற்றநல்ல கொடிமுன் னுயர் த்தபெரு மானிடம்மற்றுநல்லார் மனத்தா லினியார்மறை கலையெலாங்கற்றுநல்லார் பிழைதெரிந் தளிக்குங்கடற் காழியே.
சொற்பிரிப்பு
குற்றம் இல்லார் குறைபாடு செய்வார் பழிதீர்ப்பவர்பெற்ற நல்லகொடி முன் உயர்த்த பெருமானிடம்மற்று நல்லார் மனத்தால் இனியார் மறை கலையெலாம்கற்று நல்லார் பிழை தெரிந்து அளிக்கும் கடற்காழியே.
உரை

குற்றமில்லாதவரது குறையைக் கருதுதல் செய்வார்; அவரது பழியைத் தீர்ப்பவர், நல்ல எருதுக் கொடியினை உயர்த்த பெருமான்; அவருடைய இடம், நல்லவர்கள் மனத்தில் இனியவர்கள், மறை மற்றும் பிற கலைகளெல்லாம் கற்று வல்லவரானவர், அவர்களுடைய குறையை அறிந்து தலையளி செய்யும் கடற்காழியே .

5

விருதிலங்குஞ் சரிதைத்தொழி லார்விரி சடையினார்எருதிலங்கப் பொலிந்தேறும் எந்தைக்கிட மாவதுபெரிதிலங்கும் மறைகிளைஞர் ஓதப்பிழை கேட்டலாற்கருதுகிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்குங்கடற் காழியே.
சொற்பிரிப்பு
விருது இலங்கும் சரிதைத் தொழிலார் விரிசடையினார்எருது இலங்கப் பொலிந்து ஏறும் எந்தைக்கு இடமாவதுபெரிது இலங்கும் மறைகிளைஞர் ஓதப் பிழை கேட்டலாற்கருது கிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்கும் கடற்காழியே.
உரை

பிறருக்கு இல்லாத சரிதைச் சிறப்பு உள்ளவர்; விரிந்த சடையினை உடையவர்; எருது பொலிய அதன்மீது ஏறும் எந்தையார்; அவருக்கு இடமாவது, பெருமையுடன் விளங்கும் மறைகளைக் கிளைஞர் ஓத, அவ்வோதலில் பிழை கண்டு கிளிக்கூட்டம் அப்பிழைகளைத் தீர்க்கும் கடற்காழியே.

6

தோடிலங்குங் குழைக்காதர் வேதர்சுரும் பார்மலர்ப்பீடிலங்குஞ் சடைப்பெருமை யாளர்க்கிட மாவதுகோடிலங்கும் பெரும்பொழில்கள் மல்கப்பெருஞ் செந்நெலின்காடிலங்கும் வயல்பயிலும் அந்தண்கடற் காழியே.
சொற்பிரிப்பு
தோடு இலங்கும் குழைக்காதர் வேதர் சுரும்பார் மலர்ப்பீடு இலங்கும் சடைப் பெருமையாளர்க்கு இடமாவதுகோடு இலங்கும் பெரும்பொழில்கள் மல்கப் பெரும் செந்நெலின்காடு இலங்கும் வயல் பயிலும் அந்தண் கடற்காழியே.
உரை

ஒருகாதில் தோடு விளங்குங் குழைக் காதர்; வேதத்தை உடையவர்; வண்டுகள் மொய்க்கும் மலர்கள் பீடுற விளங்கும் சடைப் பெருமையாளர்; அவருடைய இடமாவது, கிளைகள் கொம்புகள் விளங்கும் பெரிய பொழில்கள் மல்கப் பெருகும் செந்நெல்லின் பெருங்காடுடன் விளங்கும் வயல்கள் நிறைந்திருக்கும் அழகும் குளிர்ச்சியும் உடைய கடற்காழியே.

7

மலையிலங்குஞ் சிலையாக வேகம்மதில் மூன்றெரித்தலையிலங்கும் புனற்கங்கை வைத்தவ்வடி கட்கிடம்இலையிலங்கும் மலர்க்கைதை கண்டல்வெறி விரவலால்கலையிலங்குங் கணத்தினம் பொலியுங்கடற் காழியே.
சொற்பிரிப்பு
மலை இலங்கும் சிலையாக வேகம் மதில் மூன்று எரித்தலை இலங்கும் புனல் கங்கை வைத்த அவ்வடிகட்கு இடம்இலை இலங்கும் மலர்க் கைதை கண்டல் வெறி விரவலால்கலை இலங்கும் கணத்தினம் பொலியும் கடற்காழியே.
உரை

மேருமலை விளங்கும் வில்லாக திரிபுரம் மூன்றும் தீயில் வேவ எரித்தவர்; தலையில் விளங்கப் புனற் கங்கையை வைத்தவர் ஆகிய சிவனுக்கு இடமாவது, இலைகள் விளங்கும் தழை கைதை கண்டல் ஆகியவற்றின் மலர்மணம் விரவுவதும் கலைகள் விளங்கும் கூட்டம் பொலிவதும் ஆகிய கடற்காழியே.

8

முழுதிலங்குங் பெரும்பாருள் வாழும்முரண் இலங்கைக்கோன்அழுதிரங்கச் சிரமுர மொடுங்கவ்வடர்த் தாங்கவன்தொழுதிரங்கத் துயர்தீர்த் துகந்தார்க்கிட மாவதுகழுதும்புள்ளும் மதிற்புறம தாருங்கடற் காழியே.
சொற்பிரிப்பு
முழுது இலங்கும் பெரும் பொருள் வாழும் முரண் இலங்கைக் கோன்அழுது இரங்கச் சிரம் உரமொடுங்கவ்வடர்த்து ஆங்கவன் தொழுது இரங்கத் துயர் தீர்த்து உகந்தார்க்கு இடமாவதுகழுதும் புள்ளும் மதிற்புறம் அதாரும் கடற்காழியே.
உரை

அனைத்துமாக விளங்கும் பரம்பொருள் வாழும் இடமாவது; முரண்பட்ட இலங்கையர்கோன் அழுது வருந்த, அவனுடைய பத்துச் சிரங்களும் மார்பும் ஒடுங்குமாறு அடர்த்தவர்; ஆங்கு அவன் தொழுது இரக்க, அவனுடைய துயரைத் தீர்த்து அருள்புரிந்து உயர்ந்த சிவபிரான்; அவருக்கு இடமாவது கழுதும் புள்ளும் மதிற் புறத்தில் விளங்கும் கடற்காழியே.

9

பூவினானும் விரிபோதின் மல்குந்திரு மகள்தனைமேவினானும் வியந்தேத்த நீண்டாரழ லாய்நிறைந்துஓவியங்கே யவர்க்கருள் புரிந்தவ்வொரு வர்க்கிடம்காவியங்கண் மடமங்கையர் சேர்கடற் காழியே.
சொற்பிரிப்பு
பூவினானும் விரிபோதின் மல்கும் திருமகள்தனைமேவினானும் வியந்து ஏத்த நீண்ட ஆரழலாய் நிறைந்துஓவியங்கு ஏயவர்க்கு அருள்புரிந்த அவ்வொருவர்க்கு இடம்காவியங் கண் மட மங்கையர் சேர் கடற்காழியே.
உரை

தாமரைப் பூவில் இருப்பவனாகிய பிரமனும் செந்தாமரை மலரானாகிய திருமகளை விரும்பும் திருமாலும், வியந்து போற்ற நீண்ட ஆரழலாக நிறைந்து, பின்னர் அவர்களுக்கு அருள்புரிந்த அவ்வொப்பற்றவருக்கு இடமாவது, கருங்குவளை நிகர்த்த கண்ணினை உடைய இளமங்கையர் சேரும் கடற்காழியே.

10

உடைநவின் றாருடைவிட் டுழல்வார் இருந் தவத்தார்முடைநவின் றம்மொழி யொழித்துகந்தம் முதல்வன்னிடம்மடைநவின்ற புனற்கெண்டை பாயும்வயல் மலிதரக்கடைநவின்றந் நெடுமாடம் ஓங்குங்கடற் காழியே.
சொற்பிரிப்பு
உடை நவின்றார் உடைவிட்டு உழல்வார் இருந்தவத்தார்முடை நவின்றம் மொழி ஒழித்து உகந்தம் முதல்வன் இடம்மடை நவின்ற புனற்கெண்டை பாயும் வயல் மலிதரக்கடை நவின்ற நெடுமாடம் ஓங்கும் கடற்காழியே.
உரை

உடை உடுத்தவராகிய தேரர், உடைவிட்டு உழல்வாராகிய சமணர் பெருந்தவத்தினர்போல் காட்சியளிக்கும் அவர்களுடைய முடை நாற்றம் எடுத்த மொழிகளை ஒழித்து உயர்ந்தவன் இடம் யாதெனின், மடைகளில் ஓடும் நீரில் கெண்டை மீன்கள் பாயும் வயல்கள் நிறைந்ததும் நெடுமாடங்கள் நிறைந்ததுமாகிய கடற்காழியே.

11

கருகுமுந்நீர் திரையோத மாருங்கடற் காழியுள்உரகமாருஞ் சடையடிகள் தம்பாலுணர்ந் துறுதலாற்பெருகமல்கும் புகழ்பேணுந் தொண்டர்க்கிசை யார்தமிழ்விரகன்சொன்ன இவைபாடி யாடக்கெடும் வினைகளே.
சொற்பிரிப்பு
கருக முந்நீர் திரைஓதம் ஆரும் கடற்காழியுள்உரக ஆரும் சடையடிகள் தம்பால் உணர்ந்து உறுதலாற்பெருக மல்கும் புகழ் பேணும் தொண்டர்க்கு இசையார் தமிழ்விரகன் சொன்ன இவை பாடியாடக் கெடும் வினைகளே.
உரை

கரிய நிறக் கடலின் அலையோதம் ஆர்க்கும் கடற்காழியுள் பாம்பு தங்கும் சடையடிகள் ஆகிய சிவபிரானிடத்தில் அவரே புகலிடம் என்று அறிந்து அடைந்த புகழை விரும்பும் தொண்டர்கள் இசையினால் தமிழ் விரகன் ஞானசம்பந்தன் சொன்ன இத்திருப்பதிகத்தைப் பாடி ஆடக் கெடும் வினைகளே.

திருச்சிற்றம்பலம்