திருமுறை 2 · 2.111 · 11

திருச்சிற்றம்பலம்

திருவாய்மூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
நட்டராகம்
தலம்
வாய்மூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

தளிரிள வளரென உமைபாடத் தாள மிடவோர் கழல்வீசிக்கிளரிள மணியர வரையார்த் தாடும் வேடக் கிறிமையார்விளரிள முலையவர்க் கருள்நல்கி வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல்வளரிள மதியமொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.
சொற்பிரிப்பு
தளர் இளவளர் என உமை பாடத் தாளம் இட ஓர்கழல் வீசிக்கிளர் இளமணி அரவரை ஆர்த்தாடும் வேடக் கிறிமையார்விளர் இளமுலை அவர்க்கு அருள் நல்கி வெண்ணீறு அணிந்தோர் சென்னியின்மேல்வளர் இளமதியமொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.
உரை

வளரும் இளங்கொம்பு போன்ற உமை பாடவும் தாளம் இடவும் ஒருதாளை எடுத்து வீசி, கிளர்ந்தெழும் மணியுடைய பாம்பினை அரையில் கட்டி ஆடும் வேடமுடைய பொய்ம்மையார்; பசை கொண்ட இளமுலையருக்கு அருள் நல்கி, வெண்ணீறணிந்து, சென்னியின்மேல் வளரும் இளமதியமொடு, 'அன்புடையீர்! (அப்பரே)' திருவாய்மூர் அடிகள் வருவாரே.

2

வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி விரிதரு கோவண வுடைமேலோர்பந்தஞ்செய் தரவசைத் தொலிபாடிப் பலபல கடைதொறும் பலிதேர்வார்சிந்தனை புகுந்தெனக் கருள்நல்கிச் செஞ்சுடர் வண்ணர்தம் மடிபரவவந்தனை பலசெய இவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.
சொற்பிரிப்பு
வெந்தழல் வடிவினர் பொடிப் பூசி விரிதரு கோவண உடை மேலோர்பந்தம் செய்து அரவசைத்தொலி பாடிப் பலபல நடைதொறும் பலிதேர்வார்சிந்தனை புகுந்து எனக்கு அருள்நல்கிச் செஞ்சுடர் வண்ணர் தம் அடிபரவவந்தனை பல செய இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.
உரை

செந்தழல் போலும் வடிவினர்; திருநீற்றினைப் பூசியவர்; விரிந்த கோவண ஆடையர்; அதன்மேல் இறுக்கிப் பாம்பினைக் கச்சாகக் கட்டியவர்; இசையுடன் பாடிக் கொண்டு வாயிற்கடைகள்தொறும் பிச்சை தேர்வார்; என்சிந்தனையுட் புகுந்து எனக்கு அருள் செய்தவர்; செஞ்சுடர் வண்ணர்; அவருடைய திருவடிகளைப் பரவவும், வந்தனைகள் பல செய்யவும் 'அன்புடையீர்! (அப்பரே)'திருவாய்மூர் அடிகள் வருவாரே.

3

பண்ணிற் பொலிந்த வீணையர் பதினெண் கணமு முணராநஞ்சுண்ணப் பொலிந்த மிடற்றினார் உள்ள முருகி லுடனாவார்சுண்ணப் பொடிநீ றணிமார்பர் சுடர்பொற் சடைமேல் திகழ்கின்றவண்ணப் பிறையோ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.
சொற்பிரிப்பு
பண்ணிற் பொலிந்த வீணையர் பதினெண் கணமும் உணரா நஞ்சுஉண்ணப் பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகில் உடனாவார்சுண்ணப் பொடி நீறணி மார்பர் சுடர் பொற்சடை மேல் திகழ்கின்றவண்ணப் பிறையோடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.
உரை

பண்ணிசையில் சிறந்த வீணையர்; தேவர் கூட்டத்தால் அறியப்படாதவர்; நஞ்சுண்டதனால் பொலிந்த மிடற்றினர்; உள்ளம் உருகி நினைக்கின் உடன் ஆவர்; திருநீற்றுப் பொடி அணிந்த மார்பினர்; பொன்போலச் சுடரும் சடையின்மேல் விளங்குகின்ற அழகிய பிறையுடன், 'அன்புடையீர்! (அப்பரே)'திருவாய்மூர் அடிகள் வருவாரே.

4

எரிகிளர் மதியமொ டெழில் நுதன்மேல் எறிபொறி யரவினொ டாறுமூழ்கவிரிகிளர் சடையினர் விடையேறி வெருவவந் திடர்செய்த விகிர்தனார்புரிகிளர் பொடியணி திருவகலம் பொன்செய்த வாய்மையர் பொன்மிளிரும்வரியர வரைக்கசைத் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.
சொற்பிரிப்பு
எரிகிளர் மதியமொடு எழில் நுதன் மேல் எறிபொறி அரவினொடாறு மூழ்கவிரிகிளர் சடையினர் விடையேறி வெருவ வந்திடர் செய்த விகிர்தனார்புரிகிளர் பொடியணி திருவகலம் பொன் செய்த வாய்மையர் பொன்மிளிரும்வரியரவு அரைக்கசைத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.
உரை

அழகிய நெற்றியின் மேல் ஒளிசெய்கின்ற பிறைமதியம், தாக்குதலைச் செய்யும் பாம்பு, கங்கையாறு ஆகியனவெல்லாம் மூழ்கும்படியாக விரிந்த சடையினர்; விடையேறி, யான் மருள வந்து உள்ளத்தைக் கவர்ந்த விகிர்தனார்; பூணூல், திருநீற்று அணி பொலிவு செய்யும் மார்பினர்; சத்திய ரூபர்; பொன்போல ஒளிரும் பாம்பினை அரைக்கு அசைத்து, அன்புடையீர்! (அப்பரே)'திருவாய்மூர் அடிகள் வருவாரே.

5

அஞ்சன மணிவணம் எழில்நிறமா வகமிட றணிகொள வுடல்திமிலநஞ்சினை யமரர்கள் அமுதமென நண்ணிய நறுநுதல் உமைநடுங்கவெஞ்சின மால்களி யானையின்தோல் வெருவுறப் போர்த்ததன் நிறமுமஃதேவஞ்சனை வடிவினொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.
சொற்பிரிப்பு
அஞ்சன மணிவணம் எழில்நிறம் ஆகம் மிடறணி கொள உடல் திமிலநஞ்சினை அமரர்கள் அமுதம் என நண்ணிய நறுநுதல் உமை நடுங்கவெஞ்சின மால் களி யானையின் தோல் வெருவுறப் போர்த்த அன்றி முமஃதேவஞ்சனை வடிவினொடி இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே,
உரை

இருள்நிற நஞ்சினை அமுதமென நண்ணிய அமரர்கள் உடல் அஞ்சன மணிவணம் கொள, தன்னுடைய மிடறிடம் அணிகொள, உமையம்மை நடுங்க வெஞ்சினத்ததாகிய பெரிய களிற்றின் தோலினைப் போர்த்த தன்னுடைய நிறமும், அந்நஞ்சின் கரிய நிறமாய் அவ்வஞ்சனை வடிவுடன், 'அன்புடையீர்! (அப்பரே)' திருவாய்மூர் அடிகள் வருவாரே.

6

அல்லிய மலர்புல்கு விரிகுழலார் கழலிணை யடிநிழ லவைபரவஎல்லியம் போதுகொண் டெரியேந்தி யெழிலொடு தொழிலவை யிசையவல்லார்சொல்லிய அருமறை யிசைபாடிச் சூடிள மதியினர் தோடுபெய்துவல்லியந் தோலுடுத் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.
சொற்பிரிப்பு
அல்லிய மலர் புல்கு விரிகுழலார் கழல் இணையடி நிழலவை பரவஎல்லி அம்போது கொண்டு எரியேந்தி எழிலொடு தொழிலவை இசைய வல்லார்சொல்லிய அருமறை இசைபாடிச் சூடிளமதியினர் தோடு பெய்துவல்லியம் தோல் உடுத்தி இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.
உரை

அகவிதழ்களையுடைய மலர்களைச்சூடிய விரிந்த கூந்தலை உடைய மகளிர் தம்முடைய கழலணிந்த திருவடிகளைப் பரவிப் போற்ற, சந்தியா காலத்தில் எரியேந்தி அழகுடன் மகாசங்காரதாண்டவம் ஆட வல்லார்; தாம் சொல்லிய மறைகளை இசையுடன் பாடியவர்; இளம்பிறையைச் சூடியவர்; ஒரு காதில் தோடும் பெய்து புலித்தோலுடுத்து, 'அன்புடையீர்! (அப்பரே)'திருவாய்மூர் அடிகள் வருவாரே.

7

கடிபடு கொன்றைநன் மலர்திகழுங் கண்ணியர் விண்ணவர் கனமணிசேர்முடிபில்கும் இறையவர் மறுகின்நல்லார் முறைமுறை பலிபெய முறுவல்செய்வார்பொடியணி வடிவொடு திருவகலம் பொன்னென மிளிர்வதொர் அரவினொடும்வடிநுனை மழுவினொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.
சொற்பிரிப்பு
கடிபடு கொன்றை நன்மலர் திகழும் கண்ணியர் விண்ணவர் கனமணிசேர்முடிபில்கும் இறையவர் மறுகினல்லார் முறை முறை பலிபெய முறுவல் செய்வார்பொடி அணி வடிவொடு திருவகலம் பொன் என மிளிர்வதொர் ஆரவினொடும்வடி நுனை மழுவினொடி இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.
உரை

மணமுள்ள கொன்றையாகிய நன்மலர்கள் விளங்கிய கண்ணியர்;      விண்ணவராகிய சூரிய சந்திரர் போல ஒளி சிதறும் முடியணிந்த இறையவர்; தெருக்களில் மகளிர் முறைமுறையே பிச்சையிடப் புன்முறுவல் செய்வார்; திருநீறு பூசிய மார்பகத்தில் பொன்னால் ஆன பூணூலைப் போல் மிளிர்வதொரு பாம்புடையவர்; கூரிய நுனை உடைய மழுவினர், 'அன்புடையீர்! (அப்பரே)' திருவாய்மூர் அடிகள் வருவாரே.

8

கட்டிணை புதுமலர்க் கமழ்கொன்றைக் கண்ணியர் வீணையர் தாமுமஃதேஎட்டுணை சாந்தமொ டுமைதுணையா இறைவனா ருறைவதொர் இடம்வினவில்பட்டிணை யகலல்குல் விரிகுழலார் பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்யவட்டணை யாடலொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.
சொற்பிரிப்பு
கட்டிணை புதுமலர்க் கமழ் கொன்றைக் கண்ணியர் வீணையர் தாமும் அஃதேஎட்டுணை சாந்தமொடுமைதுணையா இறைவனார் உறைவதோர் இடம் வினவில்பட்டிணை அகல அல்குல் வரிகுழலார் பாவையர் பலிஎதிர் கொணர்ந்து பெய்யவட்டணை ஆடலொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.
உரை

இணை இணையாகக் கட்டிய புது மலர்கள் மணங்கமழ்கின்ற கொன்றைக் கண்ணியர்; வீணையர்; அவ்வீணையைப் போலப் பாடிக்கொண்டு, எண்மடங்கு சந்தனம் அணிந்து உமை துணையாக இறைவன் உறையும் ஊர் எது என வினவில், பட்டாடை அணிந்த அகன்ற அல்குலையுடைய மகளிர், விரிந்த குழலை உடையவர், பாவையனையர் பலியினை எதிர்கொண்டு இட, வட்டணை யாடலொடு, 'அன்புடையீர்! (அப்பரே)' திருவாய்மூர் அடிகள் வருவாரே.

9

ஏனம ருப்பினொ டெழிலாமை யிசையப் பூண்டோ ரேறேறிக்கானம திடமா வுறைகின்ற கள்வர் கனவில் துயர்செய்துதேனுண மலர்கள் உந்திவிம்மித் திகழ்பொற் சடைமேல் திகழ்கின்றவானநன் மதியினொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.
சொற்பிரிப்பு
ஏன மருப்பினொடு எழிலாமை இசையப் பூண்டோர் ஏறு ஏறிக்கானம் அது இடமா உறைகின்ற கள்வர் கனவில் துயர் செய்துதேன் உணமலர்கள் உந்தி விம்மித் திகழ் பொற்சடை மேல் திகழ்கின்றவான நன்மதியினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே..
உரை

பன்றியின் கொம்பு, அழகிய ஆமையோடு இரண்டையும் தம்மில் இசையப் பூண்டவர்; ஒரு எருதினை வாகனமாகவும், கானகத்தைத் தம் உறைவிடமாகவும் கொண்ட கள்வர்; அவர் கனவில் எனக்குத் துயர் செய்து, வண்டுகள் தேனினை உண்ண மலர்கள் உந்தி விம்மத் திகழ்கின்ற பொன்போல் ஒளி வீசும் சடையின் மேல் விளங்குகின்ற தூய நன்பிறைமதியொடு, 'அன்புடையீர்! (அப்பரே)'திருவாய்மூர் அடிகள் வருவாரே.

10

சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர் சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர்பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார் பாம்பொடு நூலவை பசைந்திலங்கக்கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார் குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்யவாடல்வெண் டலைபிடித் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.
சொற்பிரிப்பு
சூடல் வெண்பிறையினர் சுடர் முடியர் சுண்ண வெண்ணீற்றினர் சுடர் மழுவர்பாடல் வண்டிசை முரல் கொன்றையம் தார்பாம்பொடு நூலவை பசைந்திலங்கக்கோட நன்முகிழ் விரல்கூப்பி நல்லார் குறையுறு பலிஎதிர் கொணர்ந்து பெய்யவாடல் வெண்டலை பிடித்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.
உரை

வெண்பிறையைச் சூடியவர்; ஒளிவீசும் சடைமுடியினர்; திருநீற்றுப் பொடி பூசியவர்; சுடர் ஒளி மழுவினர்; வண்டுகள் மொய்த்து இசைபாடுகின்ற கொன்றையந் தாரினைப் பூணூல் பாம்பு ஆகியவற்றினொடு மார்பில் ஆசையுண்டாக அணிந்து, செங்காந்தள் அரும்பு போன்ற விரல்களையுடைய மகளிர், கைகள் கூப்பி பலி ஏற்றுக் கொள்ளுமாறு குறையுற்று எதிர் கொணர்ந்து இட, வறண்ட பிரம கபாலத்தை ஏந்திக் கொண்டு, 'அன்புடையீர்! (அப்பரே)' திருவாய்மூர் அடிகள் வருவாரே.

11

திங்களொ டருவரைப் பொழிற்சோலைத் தேனலங் கானலந் திருவாய்மூர்அங்கமொ டருமறை யொலிபாடல் அழல்நிற வண்ணர்தம் மடிபரவிநங்கள்தம் வினைகெட மொழியவல்ல ஞானசம் பந்தன் தமிழ்மாலைதங்கிய மனத்தினால் தொழுதெழுவார் தமர்நெறி யுலகுக்கோர் தவநெறியே.
சொற்பிரிப்பு
திங்களொடு ஒருவரைப் பொழிற்சோலைத் தேன் நலம் கானல் அம் திருவாய்மூர்அங்கமொடு அருமறையொலி பாடலழல் நிறவண்ணர் தம் அடிபரவிநங்கள் தம்வினை கெடமொழிய வல்ல ஞானசம்பந்தன் தமிழ்மாலைதங்கிய மனத்தினால் தொழுதெழுவார் தமர்நெறி உலகுக்கோர் தவநெறியே
உரை

திங்களுடன், மலைபோல உயர்ந்த பொழிற்சோலை, தேனலங்கானல்களை உடையது திருவாய்மூர்; அங்கு, நால்வேதங்களும் ஆறு அங்கங்களும் பாடல்களும் முழங்க, தீவண்ணராகிய சிவனின் அடியைப் பரவி, நம்முடைய வினைகளெல்லாம் கெட, மொழிய வல்லவர் திருஞானசம்பந்தர்; அவருடைய இந்தத் தமிழ் மாலையை மனத்தில் நிறுத்தித் தொழுது எழுவார் தமராவர்; அவருடைய நெறி உலகுக்குத் தவநெறி.

திருச்சிற்றம்பலம்