திருமுறை 2 · 2.109 · 11

திருச்சிற்றம்பலம்

திருக்கோட்டூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
நட்டராகம்
தலம்
கோட்டூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

நீல மார்தரு கண்டனே நெற்றியோர் கண்ணனே யொற்றைவிடைச்சூல மார்தரு கையனே துன்றுபைம் பொழில்கள்சூழ்ந் தழகாயகோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்சால நீள்தல மதனிடைப் புகழ்மிகத் தாங்குவர் பாங்காலே..
சொற்பிரிப்பு
நீலம் ஆர்தரு கண்டனே நெற்றியோர் கண்ணினே ஒற்றைவிடைச்சூலம் ஆர்தரு கையனே துன்று பைம்பொழில்கள் சூழ்ந்து அழகாயகோல மாமலர் மணம் கமழ் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்சால நீள்தலம் அதனிடைப் புகழ்மிகத் தாங்குவர் பாங்காலே.
உரை

நீலநிறமுடைய ஆலகால விடத்தை உண்ட கண்டனே! நெற்றியில் ஒப்பற்றகண்ணை உடையோனே! ஒற்றை விடையனே! சூலம் பொருந்திய கையனே! நெருங்கியபசும்பொழில்கள் சூழ்ந்து அழகாய பொலிவுடைய சிறந்த மலர்களின் மணம் கமழ்கின்ற ''திருக்கோட்டூர் நற்கொழுந்தே' என்று தொழுது எழுவார்கள் இவ்வுலகில் மிகவும் புகழ் பெறுவர்.

2

பங்க யம்மலர்ச் சீறடிப் பஞ்சுறு மெல்விர லரவல்குல்மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென மிழற்றிய மொழியார்மென்கொங்கை யார்குழாங் குணலைசெய் கோட் டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்சங்கை யொன்றில ராகிச்சங் கரன்திரு அருள்பெறல் எளிதாமே.
சொற்பிரிப்பு
பங்கயம் மலர்ச்சீறடிப் பஞ்சுறு மெல்விரல் அரவல்குல்மங்கைமார் பலர் மயில் குயில் கிளி என மிழற்றிய மொழியார்மென்கொங்கையார் குழாங்குணலை செய்கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்சங்கை ஒன்றிலர் ஆகிச் சங்கரன் திருவருள் பெறல் எளிதாமே.
உரை

செந்தாமரை மலரிதழ் போன்ற செம்பஞ்சுக் குழம்பு பூசப்பெற்ற சிறிய பாதங்களையும் மெல்லிய விரல்களையும் அல்குலையும் உடைய மங்கையர்; மயிலெனச் சாயலையும் குயில் கிளியென மிழற்றிய மொழியும் உடையவர்கள். மென்மையான கொங்கையர் ஆகிய மங்கையர் பலரும் கூட்டமாகக் குணலைக் கூத்து ஆடுவர்; அத்தகைய ஊராகிய கோட்டூரில் நற்கொழுந்தே என்று தொழுது எழுவார் ஐயமே இன்றிச் சங்கரன் திருவருளை எளிதாகப் பெறுவர்.

3

நம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும் அடியவர் தமக்கெல்லாம்செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர் செல்வமல் கியநல்லகொம்ப னார்தொழு தாடிய கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்அம்பொ னார்தரு முலகினில் அமரரோ டமர்ந்தினி திருப்பாரே.
சொற்பிரிப்பு
நம்பனார் நலமலர் கொடு தொழுது எழும் அடியவர் தமக்கு எல்லாம்செம்பொனார் தரும் எழில் திகழ் முலையவர் செல்வ மல்கிய நல்லகொம்பனார் தொழுது ஆடிய கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்அம்பொனார் தரும் உலகினில் அமரரோடு அமர்ந்து இனிது இருப்பாரே.
உரை

நல்ல மலர்களைக் கொண்டு தொழுதெழும் அடியவர்களுக்கெல்லாம் நம்பனார்; செம்பொனாற் செய்யப்பட்டது போலும் அழகு திகழ்கின்ற முலையினராகிய வாழ்க்கைத் துணை நலத்துடன் நல்ல கொழுகொம்பு அன்னவர்கள் தொழுது ஆடித் 'திருக்கோட்டூர் நற்கொழுந்தே' எனத் தொழுது எழுவார்கள்; அவர்கள் பொன்னுலகில் தேவரொடும் இனிது இருப்பர்.

4

பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா மாங்கனி பயில்வாயகலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள் அன்னஞ்சேர்ந் தழகாயகுலவு நீள்வயற் கயலுகள் கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை நீடிய புகழாரே.
சொற்பிரிப்பு
பலவு நீள்பொழில் தீங்கனி தேன் பலா மாங்கனி பயில்வாயகலவ மஞ்ஞைகள் நிலவு சொற்கிள்ளைகள் அன்னம் சேர்ந்து அழகாயகுலவு நீள் வயல் கயலுகள் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்நிலவு செல்வத்தராகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே.
உரை

இனிய கனிகளை அளிக்கும் தேன்பலா மாங்கனி முதலிய பலமரஞ்செடி கொடிகள் நிறைந்ததும் தோகை மயில்கள், மழலைச் சொற்கள் பயிலும் கிள்ளைகள், அன்னங்கள் எனப் பலவும் சேர்ந்து அழகுடன் விளங்கும் நீண்ட வயல்களில் கயல்மீன்கள் உகளும் 'கோட்டூர் நற்கொழுந்தே' என்று தொழுது எழுவார்கள் அழியாத செல்வம் உடையராவதுடன், இப்பரந்த உலகில் அழியாப் புகழும் உடையராவர்.

5

உருகு வாருள்ளத் தொண்சுடர் தனக்கென்றும் அன்பராம் அடியார்கள்பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு பத்திசெய் தெத்திசையுங்குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய் அவனருள் பெறலாமே.
சொற்பிரிப்பு
உருகுவார் உள்ளத்து ஒண்சுடர் தனக்கு என்றும் அன்பராம் அடியார்கள்பருகும் ஆர் அமுது என நின்று பரிவொடு பத்திசெய்து எத்திசையும்குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்அருகு சேர்தரு வினைகளும் அகலும் போயவன் அருள் பெறலாமே.
உரை

தன்னை நினைந்து உருகுபவர் உள்ளத்தில் ஒளிவளர் விளக்கு; தனக்கு என்றும் அன்பராகும் அடியவர்கள் உண்ணும் அரிய அமுது; என அன்புடன் எத்திசையிலும் பத்தி செய்து, குருகுகள் வாழும் வயல்கள் சூழ்ந்த 'கோட்டூர் நற்கொழுந்தே' என்று தொழுது எழுமவர்களின் நீக்கற்கு அரிய வினைகள் அகன்று போகும்; இறைவனது அருள் பெறலாகும்.

6

துன்று வார்சடைத் தூமதி மத்தமுந் துன்னெருக் கார்வன்னிபொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம் புலியுரி யுடையாடைகொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவாரைஎன்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை ஏதம்வந் தடையாவே.
சொற்பிரிப்பு
துன்று வார்சடைத் தூமதி மத்தமும் துன்எருக்கார் வன்னிபொன்றினார் தலைக் கலனொடு பரிகலம்புலி உரியுடை ஆடைகொன்றை பொன் என மலர் தருகோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவாரைஎன்றும் ஏத்துவார்க்கு இடரிலை கேடிலை ஏதம் வந்தடையாவே.
உரை

பின்னிய நீண்ட சடையில் தூயமதி; ஊமத்தை மலர்; நெருங்கிய எருக்கு, ஆத்தி, வன்னியிலையும், இறந்த பிரமனின் மண்டையோடு உண்கலன்; புலித்தோல் ஆடை; கொன்றை மாலை பொன்னாபரணம் எனப் பொலிதரும் 'கோட்டூர் நற்கொழுந்தே' என்று தொழுது எழுமவரை என்றும் ஏத்துவாருக்கு இடரில்லை; கேடில்லை; ஏதமும் வந்தடையா.

7

மாட மாளிகை கோபுரங் கூடங்கள் மணியரங் கணிசாலைபாடு சூழ்மதிற் பைம்பொன்செய் மண்டபம் பரிசொடு பயில்வாயகூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்கேட தொன்றில ராகிநல் லுலகினிற் கெழுவுவர் புகழாலே.
சொற்பிரிப்பு
மாட மாளிகை கோபுரம் கூடங்கள் மணி அரங்கு அணி சாலைபாடு சூழ்மதில் பைம்பொன் செய் மண்டபம் பரிசொடு பயில்வாயகூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்கேடது ஒன்றிலராகி நல்லுலகினில் கெழுவுவர் புகழாலே.
உரை

மாட மாளிகைகள், கோபுரங்கள், கூடங்கள், அழகிய அரங்கங்கள், தெருக்கள், பக்கங்களில் சூழ்ந்த மதில்கள், பொன் மண்டபம் முதலியவை நிறைந்து, பூஞ்சோலைகள் குழ்ந்த 'திருக்கோட்டூர் நற்கொழுந்தே' என்று தொழுது எழுமவர் சிறிதும் கேடிலராகி நல்லுலகில் புகழுடன் விளங்குவர்.

8

ஒளிகொள் வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை யெடுத்தலும் உமையஞ்சிச்சுளிய வூன்றலுஞ் சோர்ந்திட வாளொடு நாளவற் கருள்செய்தகுளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் கொழுந்தினைத் தொழுவார்கள்தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறுந் தவமுடை யவர்தாமே.
சொற்பிரிப்பு
ஒளி கொள்வாள் எயிற்று அரக்கன் அவ் உயர்வரை எடுத்தலும் உமை அஞ்சிச்சுளிய ஊன்றலும் சோர்ந்திட வாளொடு நாள் அவற்கு அருள்செய்தகுளிர் கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர் கொழுந்தினைத் தொழுவார்கள்தளிர் கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறும் தவம் உடையவர் தாமே.
உரை

ஒளிவீசும் வாளினைப் போலும் கோரைப் பல்லினனாகிய அரக்கன், இராவணன் கயிலை மலையாகிய உயர் வரையைப் பெயர்த்து எடுக்க முயலும்போது: உமை அஞ்சிச் சுளிக்க இறைவன் கால் விரலை ஊன்றினான்; ஊன்றவே, அவன் சோர்ந்து வருந்தினான். சோர்ந்திட்ட, அவனுக்கு வாட்படையும் வாழ்நாளும் அருள் செய்தவன்; குளிர்ச்சியுடைய பைம்பொழில்கள் சூழ்ந்த திருக்கோட்டூர் நற்கொழுந்தினைத் தொழுதெழுமவர் தாமரைத் தளிர் போன்ற திருவடிகளின் அருளைப் பெறுதற்குரிய தவத்தைச் செய்தவராவர்.

9

பாடி யாடுமெய்ப் பத்தர்கட் கருள்செயும் முத்தினைப் பவளத்தைத்தேடி மாலயன் காணவொண் ணாதஅத் திருவினைத் தெரிவைமார்கூடி ஆடவர் கைதொழு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்நீடு செல்வத்த ராகியிவ் வுலகினில் நிகழ்தரு புகழா ரே.
சொற்பிரிப்பு
பாடி ஆடும் மெய்ப் பத்தர்கட்கு அருள் செயும்முத்தினைப் பவளத்தைத்தேடிமால் அயன் காணவொண்ணாத அத்திருவினைத்தெரிவைமார்கூடி ஆடவர் கைதொழு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்நீடு செல்வத்தராகி இவ்வுலகினில் நிகழ்தரு புகழாரே.
உரை

பத்தியோடு பாடியாடுகின்ற பத்தர்களுக்கு அருள்செய்கின்ற முத்தினைப் பவளத்தை; திருமாலும் பிரமனும் தேடிக் காண முடியாத செல்வத்தை; மகளிருடன் கூடி ஆடவர்கள் கைதொழும் 'திருக்கோட்டூர் நற்கொழுந்தே' எனத் தொழுதெழுமவர் அழிவிலாத செல்வத்தை உடையராகி, இவ்வுலகெலாம் நிகழும் புகழும் உடையவராவர்.

10

கோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்டூர்நற் கொழுந்தினைச் செழுந்திரளைப்பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா மெய்யன்நல் லருளென்றும்காண லொன்றிலாக் காரமண் தேரர்குண் டாக்கர்சொற் கருதாதேபேணல் செய்தர னைத்தொழும் அடியவர் பெருமையைப் பெறுவாரே.
சொற்பிரிப்பு
கோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்டூர் நற்கொழுந்தினைச் செழுந்திரளைப்பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா மெய்யன் நல்லருள் என்றும்.காணல் ஒன்றிலாக் காரமண் தேரர் குண்டாக்கர் சொல் கருதாதேபேணல் செய்தானைத் தொழும் அடியவர் பெருமையைப் பெறுவாரே.
உரை

வளைந்த வெண்பிறையை அணிந்த சடையனை; திருக்கோட்டூர் நற்கொழுந்தினை, செழுந்திரளை, அலங்காரம் செய்து அடி போற்றுமின்; பொய்யிலா மெய்யனாகிய சிவனின் அருளினை என்றும் காணுதலில்லாக் கரிய சமணர்; தேரர் குண்டாக்கர் ஆகியோர் கூறும் சொற்களைப் பொருட்டாகக் கொள்ளாதே. சிவனைப் பத்தி செய்து தொழும் அடியவர் உறுதியாகப் பெருமையைப் பெறுவர்.

11

பந்து லாவிரற் பவளவாய்த் தேன்மொழிப் பாவையோ டுருவாரும்கொந்து லாமலர் விரிபொழிற் கோட்டூர்நற் கொழுந்தினைச் செழும்பவளம்வந்து லாவிய காழியுள் ஞானசம் பந்தன்வாய்ந் துரைசெய்தசந்து லாந்தமிழ் மாலைகள் வல்லவர் தாங்குவர் புகழாலே.
சொற்பிரிப்பு
பந்து உலாவிரற் பவளவாய்த் தேன்மொழிப் பாவையோடு உருவாரும்கொந்துலா மலர்விரி பொழில் கோட்டூர் நற்கொழுந்தினைச் செழும்பவளம்வந்து உலாவிய காழியுள் ஞானசம்பந்தன் வாய்ந்துரை செய்தசந்துலாந் தமிழ்மாலைகள் வல்லவர் தாங்குவர் புகழாலே.சுவாமி : கொழுந்தீஸ்வரர்;அம்பாள் : தேனார்மொழியாள்.
உரை

பந்து நிலவுகின்ற கைவிரல்கள், பவளம் போற் சிவந்த வாய், தேன்போல் இனிக்கும் பேச்சு ஆகியன உடையவள்; பாவை போல அழகியள் ஆகிய உமையைத் தன் உருவில் ஒருபாகமாகக் கொண்டவன்; கொத்துக் கொத்தாக மலர்கள் விரிகின்ற பூம்பொழில்களை உடைய திருக்கோட்டூர் நற்கொழுந்தினைச் செழும்பவளம் வந்து உலவும் காழியுள் ஞானசம்பந்தன் உரை செய்த சந்தம் பொருந்திய இத்தமிழ்மாலையினை வல்லவர் புகழைத் தாங்குவர்.

திருச்சிற்றம்பலம்