திருமுறை 2 · 2.107 · 11

திருச்சிற்றம்பலம்

திருக்கேதீச்சரம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
நட்டராகம்
தலம்
கேதீச்சுரம்
நாடு
ஈழநாடு

1

விருது குன்றமா மேருவில் நாணர வாவனல் எரிஅம்பாப்பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் றுறைபதி யெந்நாளும்கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ் பொழிலணி மாதோட்டம்கருத நின்றகே தீச்சரங் கைதொழக் கடுவினை யடையாவே.
சொற்பிரிப்பு
விருது குன்றமா மேரு வில் நாண் அரவா அனல் எரி அம்பாப்பொருது மூ எயில் செற்றவன் பற்றி நின்று உறைபதி எந்நாளும்கருதுகின்ற ஊர் கனை கடற் கடிகமழ் பொழிலணி மாதோட்டம்கருத நின்ற கேதீச்சரம் கைதொழக் கடுவினை அடையாவே.
உரை

விருது வில்,மேருக் குன்றமாக, நாண், வாசுகி எனும் பாம்பாக, அக்கினி அம்பாக திரிபுரத்தைப் பொருது அழித்தவன் ஆகிய சிவன் விரும்பி உறையும் தலம் திருக்கேதீச்சுரம் ஆகும். எந்நாளும் அவன் கருதுகின்ற ஊர்; ஒலிக்கின்ற கடலும் மணங்கமழ்கின்ற சோலைகள் அழகு செய்யும் மாதோட்டத்தில் யாவரும் விரும்ப நிற்கும் கேதீச்சுரத்தைக் கைதொழ கொடிய வினைகள் அடையாமல் நீங்கும்.

2

பாடல் வீணையர் பலபல சரிதையர் எருதுகைத் தருநட்டம்ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ் சுண்டிருள் கண்டத்தர்ஈட மாவது இருங்கடற் கரையினில் எழில்திகழ் மாதோட்டம்கேடி லாதகே தீச்சரங் கைதொழக் கெடுமிடர் வினைதானே.
சொற்பிரிப்பு
பாடல் வீணையர் பலபல சரிதையர் எருது உகைத்து அருநட்டம்ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்ட நஞ்சு உண்டு இருள் கண்டத்தர்ஈடமாவது இருங்கடல் கரையினில் எழில் திகழ் மாதோட்டம்கேடிலாத கேதீச்சரம் தொழுதெழக் கெடும் இடர் வினைதானே.
உரை

மறை பாடுவதுடன் யாழினையும் இசைப்பர்; பல ஒழுக்கத்தவர்; எருதினை வாகனமாகச் செலுத்துபவர்; ஆடல் பாடல் விரும்புபவர்; தேவர்கள் வேண்ட நஞ்சினை உண்டதால் இருண்ட கண்டத்தர்; அவருடைய இடமாகிய பெரிய கடற்கரையினில் அழகுடன் விளங்கும் மாதோட்டத்தில் அழிவிலாத கேதீச்சரத்தை தொழுதெழ இடர்செயும் வினைகள் கெட்டு ஒழியும்.

3

பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர் அறைகழல் சிலம்பார்க்கச்சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர் அகந்தொறும் இடுபிச்சைக்குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர் உயர்தரு மாதோட்டத்தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க் கருவினை யடையாவே.
சொற்பிரிப்பு
பெண் ஓர் பாகத்தர் பிறைதவழ் சடையினர் அறைகழல் சிலம்பார்க்கச்சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவர் அகந்தொறும் இடுபிச்சைக்குஉண்ணலாவதோர் இச்சையின் உழல்பவர் உயர்தரு மாதோட்டத்துஅண்ணல் நண்ணு கேதீச்சரம் அடைபவர்க்கு அருவினை அடையாவே.
உரை

மாதொரு பாகத்தர்; பிறை தவழ்கின்ற சடையை உடையவர்; ஒலியுடைய கழலும் சிலம்பும் ஆரவாரிக்கத் திருவெண்ணீற்றினைப் பூசி ஆடுவர்; பாடுவர்; இல்லங்கள் தோறும் இடுகின்ற பிச்சையேற்று உண்ண அலைவர்; உயர்ந்த மாதோட்டத்தில் தலைவர் எழுந்தருளி இருக்கும் திருக்கேதீச்சுரத்தை அடைபவரை அருவினை அடையா

4

பொடிகொள் மேனியர் புலியத ளரையினர் விரிதரு கரத்தேந்தும்வடிகொள் மூவிலை வேலினர் நூலினர் மறிகடல் மாதோட்டத்தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம் பரிந்தசிந் தையராகிமுடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல் மொய்த்தெழும் வினைபோமே.
சொற்பிரிப்பு
பொடிகொள் மேனியர் புலி அதள் அரையினர் விரிதரு கரத்து ஏந்தும்வடிகொள் மூவிலை வேலினர் நூலினர் மறிகடல் மாதோட்டத்துஅடிகள் ஆதரித்திருந்த கேதீச்சரம் பரிந்த சிந்தையராகிமுடிகள் சாய்த்து அடி பேணவல்லார் தம்மேல் மொய்த்தெழு வினைபோமே.
உரை

திருநீறு பூசிய திருமேனியர்; புலித்தோல் உடுத்த அரையினர்; விரிந்த கரத்தினில் ஏந்திய மூவிலை வேலினர்; முப்புரி நூலினர்; மோதுகின்ற அலைகளை உடைய கடற்கரை மாதோட்டத்தில் அடிகள் விரும்பி இருக்கும் கேதீச்சுரத்தை மனத்தில் பத்தியுடன் தலை சாய்த்து வணங்கித் திருவடி போற்ற வல்லவர்கள்மேல் திரண்டு எழுகின்ற வலிய வினைகள் நீங்கும்.

5

நல்ல ராற்றவும் ஞானநன் குடையர்தம் மடைந்தவர்க் கருளீயவல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர் மலிகடல் மாதோட்டத்தெல்லை யில்புகழ் எந்தைகே தீச்சரம் இராப்பகல் நினைந்தேத்திஅல்லல் ஆசறுத் தரனடி யிணைதொழும் அன்பராம் அடியாரே.
சொற்பிரிப்பு
நல்லர் ஆற்றவும் ஞான நன்குடையர் தம் அடைந்தவர்க்கு அருள் ஈயவல்லர் பார்மிசை வான்பிறப்பு இறப்பிலர் மலிகடல் மாதோட்டத்துஎல்லையில் புகழ் எந்தை கேதீச்சரம் இராப்பகல் நினைந்தேத்திஅல்லல் ஆசறுத்து அரன் அடியிணை தொழும் அன்பராம் அடியாரே.
உரை

ஆற்றவும் நல்லர்; ஆற்றவும் ஞானம் நன்கு உடையர்; தம்மை அடைந்தவர்களுக்கு அருள் செய்ய வல்லவர்; மண்ணுலகத்திலோ வானுலகத்திலோ பிறப்பதும் இறப்பதும் இல்லாதவர்; பெரிய கடற்கரையில் உள்ள மாதோட்டத்தில் அளவிலாத புகழுடைய எம் தந்தையின் கேதீச்சுரத்தை அடியவர்கள் இரவும் பகலும் நினைந்து வழிபட்டு அல்லலையும் ஆசினையும் அறுத்து அன்பர் ஆவார்.

6

பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப் பொருந்தவைத் தொருபாகம்மாழை யங்கயற் கண்ணிபா லருளிய பொருளினர் குடிவாழ்க்கைவாழை யம்பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டக்கேழல் வெண்மருப் பணிந்தநீள் மார்பர்கே தீச்சரம் பிரியாரே.
சொற்பிரிப்பு
பேழை வார்சடைப் பெருந்திருமகள் தனைப் பொருந்த வைத்து ஒருபாகம்மாழை அங்கயல் கண்ணிபால் அருளிய பொருளினர் குடிவாழ்க்கைவாழை அம்பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டக்கேழல் வெண் மருப்பு அணிந்த நீள்மார்பர் கேதீச்சரம் பிரியாரே.
உரை

பெருமையும் நீட்சியும் உடைய சடையில் பெருந்திருமகள்தனைப் பொருந்த வைத்து, ஒருபாகத்தில் மாவடு போன்ற கண்ணியை வைத்து அவளுக்கு அருளிய பொருளினை உடையவர்; பன்றியின் வெண்மையான மருப்பினை அணிந்த பரந்த மார்பர். அவர் வெளிப்பட்டு எழுந்தருளிய தலம், அழகிய பொழிலில் மந்திகள் களிப்புடன் விரும்பித் தங்கிய மாதோட்டத்தில் உள்ள கேதீச்சுரம், அவர் அதைப் பிரியாரே.

7

பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல் லுலகினில் உயிர்வாழ்க்கைகண்ட நாதனார் கடலிடங் கைதொழக் காதலித் துறைகோயில்வண்டு பண்செயு மாமலர்ப் பொழில்மஞ்ஞை நடமிடு மாதோட்டம்தொண்டர் நாடொறுந் துதிசெய அருள்செய்கே தீச்சர மதுதானே.
சொற்பிரிப்பு
பண்டு நால்வருக்கு அறமுரைத்தருளிப் பல்லுலகினில் உயிர்வாழ்க்கைகண்ட நாதனார் கடல் இடம் கைதொழக் காதலித்து உறைகோயில்வண்டு பண்செயும் மாமலர்ப் பொழில் மஞ்ஞை நடமிடு மாதோட்டம்தொண்டர் நாள்தொறும் துதிசெய அருள்செய் கேதீச்சரம் அதுதானே.
உரை

முன்பு முனிவர் நால்வருக்கு அறம் உரைத்தருளியவர்; பல உலகங்களையும் படைத்து அவற்றில் உடம்புடன் உயிர் வாழ்க்கையையும் அவ்வுயிர்களின் கன்மத்திற்கேற்பப் படைத்தருளிய தலைவர்; கடலால் சூழப்பட்ட தலத்தில் வாழ் மக்கள் கைதொழுது உய்யும் பொருட்டு விரும்பி உறைகின்ற திருக்கோயில், யாதோவெனில், அது, வண்டுகள் பண்பாடும் பெரிய பொழில்களில் மயில்கள் நடமாடும் மாதோட்டத்தில் தொண்டர்கள் நாள்தோறும் துதி செய்து வணங்க அருள் செய்யும் திருக்கேதீச்சுரம் தானே.

8

தென்னி லங்கையர் குலபதி மலைநலிந் தெடுத்தவன் முடிதிண்தோள்தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த தலைவனார் கடல்வாயப்பொன்னி லங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத்துன்னி யன்பொடும் அடியவ ரிறைஞ்சுகே தீச்சரத் துள்ளாரே.
சொற்பிரிப்பு
தென் இலங்கையர் குலபதி மலை நலிந்து எடுத்தவன் முடி திண்தோள்தன் நலம் கெட அடர்த்து அவற்கு அருள்செய்த தலைவனார் கடல்வாயப்பொன் இலங்கிய முத்து மாமணிகளும் பொருந்திய மாதோட்டத்துன்னி அன்பொடும் அடியவர் இறைஞ்சு கேதீச்சரத்து உள்ளாரே.
உரை

தெற்குத் திக்கில் உள்ள இலங்கையில் வாழும் அரக்கர் குலத்தினருக்குத் தலைவன், இராவணன். கயிலை மலையை வருந்தி எடுத்தவன்; அவனது முடிகள் திண்ணிய தோள்கள் ஆகியவற்றின் வலிமை கெட அடர்த்துப் பின் அவனுக்கு அருள் செய்த தலைவனார்; கடலினிடத்து பொன், விளங்கிய முத்துக்கள் மாமணிகள் ஆகியன பொருந்திய மாதோட்டத்தைத் தியானித்து அன்பொடும் அடியவர் இறைஞ்சுகின்றகேதீச்சுரத்துள்ளாரே.

9

பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும் புவியிடந் தெழுந்தோடிமேவி நாடிநின் அடியிணை காண்கிலா வித்தக மென்னாகும்மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா தோட்டநன் னகர்மன்னித்தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத் திருந்தஎம் பெருமானே.
சொற்பிரிப்பு
பூ உளானும் பொருகடல் வண்ணனும் புவி இடந்து எழுந்தோடிமேவி நாடி நின் அடியிணை காண்கிலா வித்தகம் என்னாகும்மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன்னகர் மன்னித்தேவி தன்னொடுந் திருந்து கேதீச்சரத்து இருந்த எம்பெருமானே.
உரை

பிரமனும் கடல் வண்ணனாகிய திருமாலும் முறையே மேலெழுந்து பறந்தும் நிலத்தை இடந்தும் பொருந்தித் தேடி உம்முடைய திருமுடி மற்றும் திருவடிகளைக் காண்கிலார்; அவ்வாறு அவர்கள் காண முடியாது நின்ற உம்முடைய சாதுரியம் என்னாகும்? மாவும் பூகமும் கதலியும் நெருங்கும் மாதோட்ட நன்னகரில் தங்கித் தேவி தன்னொடும் அழகிய திருக்கேதீச்சுரத்திலே இருந்த எம் பெருமானே.

10

புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர் புறனுரைச் சமண்ஆதர்எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய ஏழைமை கேளேன்மின்மத்த யானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே தீச்சரம் அடைமின்னே.
சொற்பிரிப்பு
புத்தராய்ச் சில புனை துகில் உடையவர் புறன் உரைச் சமண் ஆதர்எத்தராகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்மின்மத்த யானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்துஅத்தர் மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சரம் அடைமின்னே.
உரை

பவுத்தர்களாய் துகில் புனைவார் சிலர்; பழியே உரைக்கின்ற சமணர்களாகிய ஏமாற்றுவோர்; நின்று உண்பவர்களாகிய அவர்கள் இயம்பிய அறியாமையைத் தோற்றுவிக்கும் சொற்களைக் கேளாதீர்! மதம் கொண்ட களிறு கலங்க அதன் தோலினை உரித்துப் போர்த்தவர்; மாதோட்டத்துத் தலைவர்; அவர் இருக்கும் பாலாவியின் கரைமேல் திருக்கேதீச்சுரத்தை அடைமின்!

11

மாடெ லாமண முரசெனக் கடலின தொலிகவர் மாதோட்டத்தாடலேறுடை அண்ணல்கே தீச்சரத் தடிகளை யணிகாழிநாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல் நவின்றெழு பாமாலைப்பாட லாயின பாடுமின் பத்தர்கள் பரகதி பெறலாமே.
சொற்பிரிப்பு
மாடு எலாம் மணமுரசு எனக் கடலினது ஒலிகவர் மாதோட்டத்துஆடல் ஏறுடை அண்ணல் கேதீச்சரத்து அடிகளை அணிகாழிநாடு உளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு பாமாலைப்பாடல் ஆயின பாடுமின் பத்தர்கள் பரகதி பெறலாமே.சுவாமி : திருக்கேதீஸ்வரர்;அம்பாள் : கௌரியம்மை.
உரை

பக்கம் எல்லாம் மங்கல மணமுரசொலியென கடலொலி முழங்கும்மாதோட்டத்தில் வெற்றி விடையை ஏறும் தலைவர், திருக்கேதீச்சுரத்து அடிகளை, அழகிய காழி நகருளாருக்குத் தலைவன் ஞானசம்பந்தன் சொன்ன இனிய பாமாலைப்பாடல்களாயினவற்றைப் பாடுமின்! பத்தர்களே! பரகதி உறுதியாகப் பெறலாம்.

திருச்சிற்றம்பலம்