திருமுறை 2 · 2.106 · 11

திருச்சிற்றம்பலம்

திருவலஞ்சுழி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
நட்டராகம்
தலம்
வலஞ்சுழி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்துமுன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே.
சொற்பிரிப்பு
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்துமுன்ன நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்மன்னு காவிரி சூழ் திருவலஞ்சுழி வாணனை வாயாரப்பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே.
உரை

நெஞ்சமே! நீ (இவ்) வையத்து, திருவலஞ்சுழி வாணனை வாயாரப்பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே என்ன புண்ணியஞ் செய்தனை? புண்ணியஞ் செய்ததா அன்றா என்னும் ஐயம் இல்லை. பல்வகைப் புண்ணியத்துள் இவ்வழிபாட்டிற்குரிய புண்ணியம் யாதென்பதே ஐயம். 'நல்வினைப் பயன்' என்று கொண்ட முடிவே அதற்குச் சான்றாயிற்று. அந்நல்வினையுள் யாது என்பது கருத்து. இத்திருமுறையுள் 79ஆவது திருப்பதிகத்துள் வரும் பல திருப்பாடலுள் 'பேதைமார்போலநீ வெள்கினாயே' 'மறவல்நீ மார்க்கமே நண்ணினாய்' என்றுள்ள சிறப்பையும் அவ்வுண்மையைக் குறித்தருளக் கருதிய ஸ்ரீசேக்கிழார் பெருமானார், 'அவமிலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யுமாறு அறிதி' என்று அருளியதையும் உணர்ந்தால், நல்வினை பற்றிய ஐயம் இல்லாமையும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருவுள்ளத்தை நாம் உணரத்தகும் முறைமையும் தெளிவாகும். வாயாரப் பன்னுதல் பாடுதல் - வாக்கின் வினை. ஆதரித்தல் - மனத்தின்றொழில். ஏத்துதல் - காயத்தின் செயல்.

2

விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை விரிகடல் வருநஞ்சம்உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய இறைவனை உலகத்தில்வண்டு வார்குழல் மங்கையொர் பங்கனை வலஞ்சுழி யிடமாகக்கொண்டநாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ டினிதிருந்தமையாலே.
சொற்பிரிப்பு
விண்டொழிந்தன நம்முடை வல்வினை விரிகடல் வருநஞ்சம்உண்டிறைஞ்சு வானவர் தமைத் தாங்கிய இறைவனை உலகத்தில்வண்டு வாழ்குழல் மங்கையொர் பங்கனை வலம்சுழி இடமாகக்கொண்ட நாதன் மெய்த்தொழில் புரி தொண்டரோடு இனிது இருந்தமையாலே.
உரை

இனிதிருந்தமையாலே விண்டொழிந்தன வல்வினை. விண்டு - நீங்கி. கடல் - பாற்கடல். இறைஞ்சு வானவர்- வழிபடும் விண்ணவர். தாங்கிய - நஞ்சுண்டு காத்தருளிய. 'வண்டார் குழலி'- தேவியார் திருப்பெயர். அவை கோட்டாறு, கோளிலி, பிரமபுரம், மருகல் என்பவை. மெய்த்தொழில்- உண்மைத் தொண்டு.

3

திருந்த லார்புரந் தீயெழச் செறுவன விறலின்கண் அடியாரைப்பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தமாம் பிணிநோய்க்குமருந்து மாவன மந்திர மாவன வலஞ்சுழி யிடமாகஇருந்த நாயகன் இமையவ ரேத்திய இணையடித் தலந்தானே.
சொற்பிரிப்பு
திருந்தலார் புரந்தீயெழச் செறுவன விறலின்கண் அடியாரைப்பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தமாம் பிணிநோய்க்குமருந்து மாவன மந்திர மாவன வலஞ்சுழி இடமாகஇருந்த நாயகன் இமையவர் ஏத்திய இணையடித் தலந்தானே.
உரை

திருந்தலார்- பகைவர். விறல்- பெருமை, வெற்றி. பரிந்து- இரங்கி. பத்தி - சிவபத்தி. 'பத்தி வலையிற் படுவோன் காண்க'. மத்தம்- மயக்கம். பிணியும் நோயும் மயக்கத்தால் வருவனவே. தெளிவு நோயை விளைவிக்காது. இணையடித் தலந்தான் புரம்செறுவன, அடியாரைக் காப்பன பத்தியில் வருவன. நோய்க்கு மருந்தாவன, மந்திரமாவன என்க. அப்பர் அருளிய 'சிந்திப்பரியன' என்பது முதலிய இருபது திருவிருத்தங்களையும்இங்கு எண்ணுக.

4

கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் அறத்திற முனிவர்க்கன்றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந் தினிதருள் பெருமானார்மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி யிடம்மகிழ்ந் தருங்கானத்தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய அற்புதம் அறியோமே.
சொற்பிரிப்பு
கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் அறத்திற முனிவர்க்கன்றுஇறைவரால் இடை நீழலில் இருந்து உகந்து இனிது அருள்பெருமானார்மறைகளோதுவர் வருபுனல் வலஞ்சுழி இடமகிழ்ந்தருங்கானத்தறை கழல் சிலம்பு ஆர்க்க நின்றாடிய அற்புத மறியோமே.
உரை

கறை- நஞ்சாலாய கறுப்பு. கதிர்- சூரியன். அறத்திறம் - தருமங்களின் வகைகளும் வேதாகம நூற்பொருளின் கூறுபாடும். கழல் சிலம்பு - உம்மைத்தொகை.

5

மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலாம் எரியுரு வொருபாகம்பெண்ண ராணெனத் தெரிவரு வடிவினர் பெருங்கடற் பவளம்போல்வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம்புக்கஎண்ண ராகிலும் எனைப்பல இயம்புவர் இணையடி தொழுவாரே.
சொற்பிரிப்பு
மண்ணர் நீரர் வண் காற்றினர் ஆற்றலாம் எரியுரு ஒருபாகம்பெண்ணர் ஆண் எனத் தெரிவரு வடிவினர் பெருங்கடல் பவளம்போல்வண்ணராகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம்புக்கஎண்ணராகிலும் எனப்பல இயம்புவர் இணையடி தொழுவாரே.
உரை

சிவபிரான் ஐம்பெரும் பூதரூபமாக உள்ளவர். அட்டமூர்த்தங்களுள் முதல் ஐந்து அம்மையப்பர், அர்த்தநாரீசுவரர், பவள வண்ணர், நீங்காது வாழ்பவர்.

6

ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர் மேனியர் மடமாதர்இருவ ராதரிப் பார்பல பூதமும் பேய்களும் அடையாளம்அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித் தகந்தொறும் பலிக்கென்றுவருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே வரிவளை கவர்ந்தாரே.
சொற்பிரிப்பு
ஒருவரால் உவமிப்பதை அரியதோர் மேனியர் மடமாதர்இருவர் ஆதரிப்பார் பல பூதமும் பேய்களும் அடையாளம்அருவராதது ஓர்வெண்டலை கைப்பிடித்து அகந்தொறும் பலிக்கென்றுவருவரேலவர் வலஞ்சுழி அடிகளே வரிவளை கவர்ந்தாரே.
உரை

இறைவன் திருமேனிக்கு ஒப்புரைக்க வேறு யாதும் இல்லாமையால் 'ஒருவரால் உவமிப்பதை அரியதோர் மேனியர்' என்க. ‘இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே (அப்பர்) அருவராதது - அருவருக்காதது. முறுமுறுப்பு, சுறுசுறுப்பு, கிறுகிறுப்பு முதலியவற்றைப்போல அறுவறுப்பு என்பதும் உண்டு. மனத்தை அறுப்பது பற்றிய பெயர். அஃது இடையெழுத்தாக மருவிற்று. அஞ்சனம்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க் குஞ்சி வெளுத்துடலம் கோணாமுன் நெஞ்சமே... சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து' (க்ஷேத்திரவெண்பா 15).

7

குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங் குலவிய நெய்த்தானம்என்றிவ் வூர்களி லோமென்றும் இயம்புவர் இமையவர் பணிகேட்பார்அன்றி யூர்தமக் குள்ளன அறிகிலோம் வலஞ்சுழி யரனார்பால்சென்ற வூர்தனில் தலைப்பட லாமென்று சேயிழை தளர்வாமே.
சொற்பிரிப்பு
குன்றியூர் குடமூக்கிடம் வலம்புரம் குலவிய நெய்த்தானம்என்று இவ் ஊர்களிலோம் என்றும் இயம்புவரிமையவர் பணிகேட்பார்அன்றியூர் தமக்குள்ளன அறிகிலோம் வலஞ்சுழியரனார் பால்சென்றவூர் தனில் தலைப்படலாம் என்று சேயிழை தளர்வாமே.
உரை

இதிற் குறித்த குன்றியூர் எங்குளதோ? தெரிந்திலது. 'வலம் என்றால் இடம் இருத்தல் வேண்டும்'. தலைப்படல்- சேர்தல். 'தம்மிற்றலைப்பட்டார்’ (திருக்களிறு 2) சேயிழை- தலைவி.

8

குயிலின் நேர்மொழிக் கொடியிடை வெருவுறக் குலவரைப் பாற்பாயகயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி தோளிரு பதுமூன்றிமயிலின் நேரன சாயலோ டமர்ந்தவன் வலஞ்சுழி யெம்மானைப்பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே.
சொற்பிரிப்பு
குயிலினேர் மொழிக் கொடியிடை வெருவுறக் குலவரைப் பரப்பாயகயிலையைப் பிடித்தெடுத்தவன் கதிர்முடி தோள் இருபதுமூன்றிமயிலினேரன சாயலோ டமர்ந்தவன் வலஞ்சுழி எம்மானைப்பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே.
உரை

கொடியிடையும் மயிலை நேரொத்த சாயலும் உமாதேவியாரைக் குறித்தன. வல்லவர் காண்பவர். அல்லவர் காணார்.

9

அழல தோம்பிய அலர்மிசை அண்ணலும் அரவணைத் துயின்றானும்கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர் மாண்பமர் தடக்கையில்மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி வலங்கொடு பாதத்தால்சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு துன்பங்கள் களைவாரே.
சொற்பிரிப்பு
அழலது ஓம்பிய அலர்மிசை அண்ணலும் அரவணைத் துயின்றானும்கழலும் சென்னியும் காண்பரி தாயவர் மாண்பமர் தடக்கையில்மழலை வீணையர் மகிழ்திருவலஞ்சுழி வலங்கொடு பாதத்தால்சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள் களைவாரே.
உரை

அழலது- தீ. 'கற்றாங்கு எரியோம்பிக் கலியை வாராமே செற்றார்”.    அண்ணல் - பிரமன், அரவணை - பாம்பாகிய படுக்கை. துயின்றான் - திருமால். ஆயவர் - சிவபிரான். மழலை வீணையர்- ‘மிக நல்ல வீணை தடவி' பாதத்தால் சுழலும் மாந்தர்கள்- திருக்கோயிலை வலம் வரும் அன்பர்கள் . தொல்வினை - சஞ்சித கர்மம்.

10

அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர் தவம்புரிந் தவஞ்செய்வார்நெறிய லாதன கூறுவர் மற்றவை தேறன்மின் மாறாநீர்மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானைப்பிறிவி லாதவர் பெறுகதி பேசிடில் அளவறுப் பொண்ணாதே.
சொற்பிரிப்பு
அறிவிலாத வன்சமணர்கள் சாக்கியர் தவம்புரிந்தவம் செய்வார்நெறியலாதன கூறுவர் மற்றவை தேறன்மின் மாறாநீர்மறியுலாம் திரைக்காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானைப்பிறிவிலாதவர் பெறுகதி பேசிடில் அளவறுப் பொண்ணாதே.
உரை

தவம் புரிந்து அவம் செய்தல்- மேற்கொண்ட தவத்திற்கு ஒவ்வாத பாவச் செய்கையை உடையராதல். நெறி அல்லாதவற்றைப் போதிப்பர். தேறல்மின் - தெளியத்தக்கன அல்ல என்று தெளியாது ஒழிமின். பிறிவு இல்லாதவர் - இடைவிடாமல் வழிபடும் அடியவர்.

11

மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயற்காழிநாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய் நவிற்றிய தமிழ்மாலைஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக் கேட்டுகந் தவர்தம்மைவாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம்வந் தடையாவே.
சொற்பிரிப்பு
மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயல்காழிநாதன் வேதியன் ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ்மாலைஆதரித்து இசை கற்று வல்லார் சொலக்கேட்டு உகந்தவர் தம்மைவாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்தடையாவே.சுவாமி : கற்பகநாதேஸ்வரர்;அம்பாள் : பெரிய நாயகி.
உரை

கூறன் - பாகத்தன். மருந்து - பிறவிநோய் தீர்க்கும் மருந்து. தீராநோய் தீர்த்தருள வல்ல மருந்து. 'வருந்துயரந் தீர்க்கும் மருந்து' 'காழிநாதன்' 'வேதியன்' என்பன ஆசிரியர் சிறப்புணர்த்தின. நவிற்றிய - திருவருள் நவிலச்செய்த 'நித்தம் நோய்கள் வாதியா' (தி. 2 ப. 79 பா. 4) வாதித்தல்- வருந்துதல்.

திருச்சிற்றம்பலம்