திருமுறை 2 · 2.105 · 11

திருச்சிற்றம்பலம்

திருக்கீழ்வேளூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
நட்டராகம்
தலம்
கீழ்வேளுர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

மின்னு லாவிய சடையினர் விடையினர் மிளிர்தரும் அரவோடும்பன்னு லாவிய மறையொலி நாவினர் கறையணி கண்டத்தர்பொன்னு லாவிய கொன்றையந் தாரினர் புகழ்மிகு கீழ்வேளூர்உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை யோடிட வீடாமே.
சொற்பிரிப்பு
மின்னுலாவிய சடையினர் விடையினர் மிளிர்தரு மரவோடும்பன்னுலாவிய மறையொலி நாவினர் கறையணி கண்டத்தர்பொன்னுலாவிய கொன்றையம் தாரினர் புகழ்மிகு கீழ்வேளூர்உன்னுலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட வீடாமே.
உரை

உன் - உன்னுதல். திருக்கீழ்வேளூரை நினைப்பவர்க்கு வினையில்லை. வீடுண்டு என்று அருளியது. இவ்வூர்ப்பெருமான் திருப்பெயர் கேடிலியப்பர் என்பதன் உண்மைப் பொருளை உலகோர்க்கு உணர்த்துவதாகும்.

2

நீரு லாவிய சடையிடை யரவொடு மதிசிர நிரைமாலைவாரு லாவிய வனமுலை யவளொடு மணிசிலம் பவையார்க்கஏரு லாவிய இறைவன துறைவிடம் எழில்திகழ் கீழ்வேளூர்சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர் பிணியொடு வினைபோமே.
சொற்பிரிப்பு
நீருலாவிய சடையிடை அரவொடு மதிசிர நிரைமாலைவாருலாவிய வனமுலை அவளொடு மணிசிலம்பவை ஆர்க்கஏருலாவிய இறைவனது உறைவிடம் எழில் திகழ் கீழ்வேளூர்சீருலாவிய சிந்தை செய்து அணைபவர் பிணியொடு வினைபோமே.
உரை

திருக்கீழ்வேளூரைச் சிந்திப்பவர்கட்குப் பிணிகளும் வினைகளும் போம்.

3

வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு வெள்ளெருக் கலர்மத்தம்பண்ணி லாவிய பாடலோ டாடலர் பயில்வுறு கீழ்வேளூர்ப்பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக் கோயிலெம் பெருமானைஉண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையார் உலகினில் உள்ளாரே.
சொற்பிரிப்பு
வெண்ணிலா மிகுவிரி சடை அரவொடு வெள் எருக்கலர் மத்தம் பண்ணிலாவிய பாடலோடு ஆடலர் பயில்வுறு கீழ்வேளூர்ப்பெண்ணிலாவிய பாகனைப் பெருந்திருக் கோயில் எம்பெருமானைஉண்ணிலாவி நின்று உள்கிய சிந்தையார் உலகினில் உள்ளாரே.
உரை

கீழ்வேளூரில் பெருந்திருக்கோவிலில் எழுந்தருளிய அம்மையப்பரை உள்கும் பயிற்சி உடையார் எவ்வுலகில் இருப்பினும் சிவலோகத்தில் இருப்பவரேயாவர். ‘நரகம் புகினும் எள்ளேன் திருவருளாலே யிருக்கப்பெறின் இறைவா! உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லாது எங்கள் உத்தமனே' திருவாசகம் 6-2.

4

சேடு லாவிய கங்கையைச் சடையிடைத் தொங்கவைத் தழகாகநாடு லாவிய பலிகொளும் நாதனார் நலமிகு கீழ்வேளூர்ப்பீடு லாவிய பெருமையர் பெருந்திருக் கோயிலுட் பிரியாதுநீடு லாவிய நிமலனைப் பணிபவர் நிலைமிகப் பெறுவாரே.
சொற்பிரிப்பு
சேடு உலாவிய கங்கையைச் சடை இடைத்தொங்க வைத்தழகாகநாடு உலாவிய பலிகொளு நாதனார் நலமிகு கீழ்வேளுர்ப்பீடு உலாவிய பெருமையர் பெருந்திருக்கோயில் உட்பிரியாதுநீடு உலாவிய நிமலனைப் பணிபவர் நிலைமிகப் பெறுவாரே.
உரை

சேடு- பெருமை. பீடு- வலிமை. நீடு- அழியாமை. கீழ்வேளூர்ப் பெருமானார்பெருந்திருக்கோயிலை வழிபடுவோர் நிலைத்த பேரின்பவாழ்வு மிகப் பெறுவர்.

5

துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை வடமணி சிரமாலைமன்று லாவிய மாதவர் இனிதியல் மணமிகு கீழ்வேளூர்நின்று நீடிய பெருந்திருக் கோயிலின் நிமலனை நினைவோடும்சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை தேய்வது திணமாமே.
சொற்பிரிப்பு
துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை வடமணி சிரமாலைமன்று உலாவிய மாதவர் இனிதியல் மணமிகு கீழ்வேளூர்நின்று நீடிய பெருந்திருக்கோயிலின் நிமலனை நினைவோடும்சென்று உலாவி நின்று ஏத்தவல்லார் வினை தேய்வது திணமாமே.
உரை

நகுதலை - பிரமகபாலம். வடம் - கயிறு. சிரம் - தலைகள். திருக்கோயில் மன்றத்துள் மாதவத்தோர் உலாவிய சிறப்பு உணர்த்திற்று. சிரமாலையை உடையவரும் மன்றுள் நடமாடியவரும் ஆகிய மாதவர் எனச் சிவபெருமானைக் குறித்ததாயின் நிமலன் என்னும் ஒருமைக்கு ஏலாது.

6

கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக் கூத்தனை மகிழ்ந்துள்கித்தொத்து லாவிய நூலணி மார்பினர் தொழுதெழு கீழ்வேளூர்ப்பித்து லாவிய பத்தர்கள் பேணிய பெருந்திருக் கோயில்மன்னும்முத்து லாவிய வித்தினை யேத்துமின் முடுகிய இடர்போமே.
சொற்பிரிப்பு
கொத்து உலாவிய குழல் திகழ் சடையனைக் கூத்தனை மகிழ்ந்து உள்கித்தொத்து உலாவிய நூலணி மார்பினர் தொழுது எழுகீழ்வேளூர்ப்பித்துலாவிய பத்தர்கள் பேணிய பெருந்திருக்கோயில் மன்னும்முத்து உலாவிய வித்தினை ஏத்துமின் முடுகிய இடர்போமே.
உரை

கொத்து- பூங்கொத்துக்கள். தொத்து - கூடுதல். பித்து - திருவடிப்பற்று. முத்து... வித்து - 'முத்தினைப் பவளத்தை' 'வித்தாம் முளையாகும் வேரேதானாம்'.

7

பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும் வன்னியுந் துன்னாரும்கறைநி லாவிய கண்டர்எண் தோளினர் காதல்செய் கீழ்வேளூர்மறைநி லாவிய அந்தணர் மலிதரு பெருந்திருக் கோயில்மன்னும்நிறைநி லாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினைபோமே.
சொற்பிரிப்பு
பிறை நிலாவிய சடை இடைப்பின்னலும் வன்னியும் துன்னாரும்கறை நிலாவிய கண்ட ரெண்டோளினர் காதல் செய்கீழ்வேளுர்மறை நிலாவிய அந்தணர் மலிதரு பெருந்திருக்கோயில் மன்னும்நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினைபோமே.
உரை

மறைநிலாவிய அந்தணர் மலிதரு பெருந்திருக்கோயில்' என்றதால், அக்காலத்து வேதியர் சிறப்பும் அவர்க்குள்ள கோயில் வாழ்வும் புலப்படும். நின்ற - 'குறைவிலா நிறைவு'  அவ்வத்தேவரை அவ்வப்புவனத்தில் அவரவர்க்கு உரிய தொழிலில் நிறுத்துவதாம்.

8

மலைநி லாவிய மைந்தன்அம் மலையினை யெடுத்தலும் அரக்கன்றன்தலையெ லாம்நெரிந் தலறிட வூன்றினான் உறைதரு கீழ்வேளூர்க்கலைநி லாவிய நாவினர் காதல்செய் பெருந்திருக் கோயிலுள்நிலைநி லாவிய ஈசனை நேசத்தால் நினையவல் வினைபோமே.
சொற்பிரிப்பு
மலை நிலாவிய மைந்தனம் மலையினை எடுத்தலும் அரக்கன்தன்தலை எலாநெரிந்து அலறிட ஊன்றினான் உறைதரு கீழ்வேளுர்க்கலை நிலாவிய நாவினர் காதல்செய் பெருந்திருக் கோயிலுள்நிலை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைய வல்வினை போமே.
உரை

மைந்தன்- வீரன், அழகன், வலியன், மலைநிலாவிய மைந்தன்-மலைபோலுந் தோற்றமுடைய (ஞான) வீரன். பத்துத் தலைகளும் என்னத் 'தலையெல்லாம்' என்று குறித்தருளினார். தலைநிலாவிய நாவினர் - வேதாகமாங்க பிராணேதிகாசாதி சகல கலைகளுமுணர்ந்த நாவினர்.

9

மஞ்சு லாவிய கடல்கிடந் தவனொடு மலரவன் காண்பொண்ணாப்பஞ்சு லாவிய மெல்லடிப் பார்ப்பதி பாகனைப் பரிவோடும்செஞ்சொ லார்பலர் பரவிய தொல்புகழ் மல்கிய கீழ்வேளூர்நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின் நடலைகள் நணுகாவே.
சொற்பிரிப்பு
மஞ்சு உலாவிய கடல் கிடந்தவனொடு மலரவன் காண்பொண்ணாப்பஞ்சு உலாவிய மெல்லடிப் பார்ப்பதி பாகனைப் பரிவோடும்செஞ்சொல் ஆர்பலர் பரவிய தொல் புகழ்மல்கிய கீழ்வேளூர்நஞ்சு உலாவிய கண்டனை நணுகுமின் நடலைகள் நணுகாவே.
உரை

கடல்- பாற்கடல். காண்பு- பார்வை. 'காண்பினொடு நேத்திரங்கள் பணித்தருளவேண்டும்' 'கண்கள் காண்பு ஒழிந்து' 2. 97-5.

10

சீறு லாவிய தலையினர் நிலையிலா அமணர்கள் சீவரத்தார்வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின் சுரும்பமர் கீழ்வேளூர்ஏறு லாவிய கொடியனை யேதமில் பெருந்திருக் கோயில்மன்னுபேறு லாவிய பெருமையன் திருவடி பேணுமின் தவமாமே.
சொற்பிரிப்பு
சீறு உலாவிய தலையினர் நிலையிலா அமணர்கள் சீவரத்தார்வீறு இலாத வெஞ்சொற் பலவிரும்பன்மின் சுரும்பமர் கீழ்வேளூர்ஏறு உலாவிய கொடியனை ஏதமில் பெருந்திருக்கோயில் மன்னுபேறு உலாவிய பெருமையன் திருவடி பேணுமின் தவமாமே.
உரை

சீறு- முதனிலைத் தொழிலாகுபெயர். சீவரார் - துவரூட்டிய சீலையர் (தேரர்) .வீறு- பெருமை,வெற்றியுமாம். பேறு - ஆன்மாக்களுக்குரிய பேறு (சிவானந்தம்). பேறு உலாவிய பெருமையன். ஆனந்தம் நிகழும் பெருமையை உடைய பரமசிவன்.

11

குருண்ட வார்குழற் சடையுடைக் குழகனை அழகமர் கீழ்வேளூர்த்திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக் கோயிலெம் பெருமானைஇருண்ட மேதியின் இனமிகு வயல்மல்கு புகலிமன் சம்பந்தன்தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி பெறுவது திடமாமே.
சொற்பிரிப்பு
குருண்ட வார்குழல் சடைஉடைக் குழகனை அழகமர் கீழ்வேளுர்த்திரண்ட மாமறையவர் தொழும் பெருந்திருக் கோயில் எம்பெருமானைஇருண்ட மேதியினின மிகுவயல் மல்கு புகலி மன்சம்பந்தன்தெருண்ட பாடல் வல்லாரவர் சிவகதி பெறுவது திடமாமே.சுவாமி : கேடிலியப்பர்;அம்பாள் : வனமுலை நாயகி.
உரை

குருண்டவார் குழற்சடைக் குழகன்' - 'குருள்குஞ்சி' (தி. 2 ப. 116 பா. 4). குழகன்-இளையன், அழகன். புகலி - சீகாழி. மன் - இறைவன். தெருண்ட - தெளிந்த.

திருச்சிற்றம்பலம்