திருமுறை 1 · 1.133 · 11

திருச்சிற்றம்பலம்

திருக்கச்சியேகம்பம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
மேகராகக்குறிஞ்சி
தலம்
கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)
நாடு
தொண்டைநாடு

1

வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி நூலொருபால் பொருந்தக்கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற் கச்சி தன்னுள்அந்தமில் குணத்தா ரவர்போற்ற அணங்கினொ டாடல்புரிஎந்தை மேவிய ஏகம்பந்தொழு தேத்த இடர்கெடுமே.
சொற்பிரிப்பு
வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின் விரிநூல் ஒருபால் பொருந்த,கந்தம் மல்கு குழலியோடும் கடிபொழில் கச்சி தன்னுள்,அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற, அணங்கினொடு ஆடல் புரிஎந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த, இடர் கெடுமே.
உரை

நன்றாக வெந்ததும்‌, வெண்மையானதுமான திருநீற்றுப்‌ பொடியைப்‌ பூசியிருப்பவர்‌; திருமார்பில்‌ விரிந்த பூணூல்‌ ஒரு பாகத்தில்‌ விளங்குமாறு தோற்றம்‌ அளிப்பவர்‌; மணம்‌ கமழும்‌ கூந்தலை உடைய உமையம்மையோடு இருப்பவர்‌. விளங்கும்‌ பொழில்களால்‌ சூழப்பட்ட திருக்கச்சி என்னும்‌ தலத்தில்‌ எல்லையற்ற நற்குணங்களை உடைய அடியவர்கள்‌ போற்றி வணங்குமாறு நடனம்‌ செய்யும்‌ இவர்‌, எம்‌ தந்தையாகிய சிவபெருமான்‌ ஆவார்‌. இப்பெருமான்‌ விருப்பத்துடன்‌ எழுந்தருளி உள்ள ஏகம்பம்‌ என்னும்‌ திருக்கோயிலைத்‌ தொழுது போற்றினால்‌ நமது துன்பங்கள்‌ இல்லாமல்யோய்விடும்‌.

2

வரந்திகழு மவுணர் மாநகர்மூன் றுடன்மாய்ந் தவியச்சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேயவிடம்குருந்தம் மல்லிகை கோங்குமா தவிநல்ல குராமரவந்திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே.
சொற்பிரிப்பு
வரம் திகழும் அவுணர் மா நகர்மூன்று உடன் மாய்ந்து அவியச்சரம் துரந்து, எரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேய இடம்குருந்தம், மல்லிகை, கோங்கு, மாதவி, நல்ல குரா, மரவம்,திருந்து பைம்பொழில் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.
உரை

வரம்‌ பெற்ற அசுரர்களின்‌ பெரிய நகரங்களான முப்புரங்களும்‌ ஒன்றாய்ச்‌ சேர்ந்து அழிந்து போகுமாறு சரம்‌ தொடுத்து எரித்த நீண்ட சடைகளை உடைய சங்கரன்‌ சிவபெருமான்‌ ஆவார்‌. இப்பெருமான்‌ விரும்பி எழுந்தருளிய இடம்‌ திருக்கச்சி ஏகம்பம்‌ ஆகும். குருந்த மரம்‌, மல்லிகை மலர்‌, கோங்கு மரம்‌, குருக்கத்தி மரம்‌, நல்ல குரா மரம்‌, கடம்ப மரம் ஆகியவற்றால்‌ அழகுடன்‌ விளங்கும்‌ பசுமையான பொழில்கள்‌ சூழ்ந்துள்ள கச்சி மாநகரில்‌ உள்ள திருஏகம்பத்தை அடைந்து தொழ, நமது துன்பங்கள்‌ இல்லாமல்‌ போய்விடும்‌.

3

வண்ணவெண் பொடிப்பூசு மார்பின் வரியர வம்புனைந்துபெண்ணமர்ந் தெரியாடற் பேணிய பிஞ்ஞகன் மேயவிடம்விண்ணமர் நெடுமாட மோங்கி விளங்கிய கச்சிதன்னுள்திண்ணமாம் பொழில்சூழ்ந்த ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.
சொற்பிரிப்பு
வண்ண வெண்பொடிப் பூசும் மார்பின் வரி அரவம் புனைந்து,பெண் அமர்ந்து, எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம்,விண் அமர் நெடுமாடம் ஓங்கி விளங்கிய கச்சி தன்னுள்-திண்ண மாம்பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர, இடர் கெடுமே.
உரை

வெண்மை நிறம்‌ உடைய திருநீற்றை மார்பில்‌ பூசியிருப்பவன்‌. உடலில்‌ வரிகளை உடைய பாம்பை அணிந்திருப்பவன்‌. உமையம்மையை ஒரு பாகத்தில்‌ விரும்பி ஏற்றியிருப்பவன்‌. சுடுகாட்டில்‌ எரிஆடல்‌ புரியும்‌ தலைக்கோலம்‌ உடையவன்‌. இத்தகைய பெருமைகளை உடைய சிவபெருமான்‌ விரும்பிய இடம்‌ திருக்கச்சியேகம்பம்‌ ஆகும்‌. அது விண்ணைத்‌ தொடும்‌ மாடவீடுகள்‌ ஓங்கி விளங்குவதும்‌, என்றும்‌ நிலைபெற்ற பொழில்களால்‌ சூழப்பட்டதும்‌ ஆகும்‌. இத்திருக்கச்சி ஏகம்பத்தை அடைந்து விட்டால்‌ நமது துன்பங்கள்‌ இல்லாமல்‌ போய்விடும்‌.

4

தோலும்நூ லுந்துதைந்த வரைமார்பிற் சுடலைவெண் ணீறணிந்துகாலன்மாள் வுறக்காலாற் காய்ந்த கடவுள் கருதுமிடம்மாலைவெண் மதிதோயு மாமதிற் கச்சி மாநகருள்ஏலம்நாறிய சோலைசூழ் ஏகம்பம் ஏத்த விடர்கெடுமே.
சொற்பிரிப்பு
தோலும் நூலும் துதைந்த வரை மார்பில் சுடலை வெண் நீறு அணிந்து,காலன் மாள் உறக் காலால் காய்ந்த கடவுள் கருதும் இடம்,மாலை வெண்மதி தோயும் மா மதில் கச்சி மா நகருள்,ஏலம் நாறிய சோலை சூழ் ஏகம்பம் ஏத்த, இடர் கெடுமே.
உரை

மான்தோலும்‌, பூணூலும்‌ பொருந்திய மலை போன்ற திருமார்பில்‌ சுடலையில்‌ எடுத்த வெண்மையான திருநீற்றை அணிந்திருப்பவன்‌ சிவபெருமான்‌. காலனான எமனை மார்க்கண்டேயருக்காக தமது திருக்காலால்‌ உதைத்த கடவுளான சிவபெருமான்‌ விரும்பி இருக்கும்‌ இடம்‌ திருக்கச்சி ஏகம்பம்‌ ஆகும்‌. மாலைக்‌ காலத்தில்‌ தோன்றும்‌ வெண்மையான மதியை மறைக்கும்படி உயர்ந்த பெரிய மதில்களை உடைய கச்சி மாநகரில்‌, மணம்‌ வீசும்‌ சோலைகளால்‌ சூழப்பட்ட ஏகம்பம்‌ என்னும்‌ திருக்கோயிலைப்‌ போற்றி வழிபட்டால்‌ நமது துன்பங்கள்‌ இல்லாமல்‌ போய்விடும்‌.

5

தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத் தூமதி யம்புனைந்துபாடல்நான் மறையாகப் பல்கணப் பேய்க ளவைசூழவாடல்வெண் டலையோ டனலேந்தி மகிழ்ந்துடன் ஆடல்புரிசேடர்சேர் கலிக்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.
சொற்பிரிப்பு
தோடு அணி மலர்க்கொன்றை சேர் சடைத் தூ மதியம் புனைந்து,பாடல் நால்மறை ஆக, பலகணப் பேய்கள் அவை சூழ,வாடல் வெண் தலை ஓடு, அனல், ஏந்தி, மகிழ்ந்து உடன் ஆடல் புரிசேடர் சேர் கலிக் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.
உரை

அழகிய இதழ்களோடு கூடிய கொன்றை மலர்‌ மாலை சூடிய சடையின்மேல்‌ தூய மதியை அணிந்திருப்பவன்‌. நான்மறைகளைப்‌ பாடல்களாகக்‌ கொண்டிருப்பவன்‌. பேய்க்‌ கணங்கள்‌ பலசூழ வீற்றிருப்பவன்‌. புலால்‌ வற்றிய வெண்மையான தலையோட்டையும்‌ அனலையும்‌ கையில்‌ ஏந்தியிருப்பவன்‌. மகிழ்வுடன்‌ உமையம்மையுடன்‌ ஆடல்‌ புரிபவன்‌. இத்தகைய பெருமைகளைக்‌ கொண்டு உலகம்‌ அழிய தான்மட்டும்‌ எஞ்சி நிற்கும்‌ பெரியோனாகிய சிவபெருமான்‌ எழுந்தருளி இருக்கும்‌, ஆரவாரம்‌ மிகுந்த கச்சியில்‌ விளங்கும்‌ திருஏகம்பத்தைத்‌ தியானித்தால்‌ நமது துன்பங்கள்‌ இல்லாமல்‌ போய்விடும்‌.

6

சாகம்பொன் வரையாகத் தானவர் மும்மதில் சாயவெய்தாகம்பெண் ணொருபாக மாக அரவொடு நூலணிந்துமாகந்தோய் மணிமாட மாமதிற் கச்சி மாநகருள்ஏகம்பத் துறையீசன் சேவடி யேத்த விடர்கெடுமே.
சொற்பிரிப்பு
சாகம் பொன்வரை ஆகத் தானவர் மும்மதில் சாய் எய்து,ஆகம் பெண் ஒருபாகம் ஆக, அரவொடு நூல் அணிந்து,மாகம் தோய் மணி மாட மா மதில் கச்சி மா நகருள்,ஏகம்பத்து உறை ஈசன் சேவடி ஏத்த, இடர் கெடுமே.
உரை

மேருமலையை வில்லாகக்‌ கொண்டு, அசுரர்களின்‌ மூன்று மதில்களும்‌ அழிந்து போகுமாறு கனை தொடுத்தவர்‌. தமது திருமேனியில்‌ உமையம்மையை ஒருபாகமாகக்‌ கொண்டிருப்பவர்‌. தமது திருமார்பில்‌ பாம்பையும்‌ முப்புரிநூலையும்‌ அணிந்திருப்பவர்‌. இத்தகைய பெருமைகளைக்‌ கொண்ட சிவபெருமான்‌, விண்ணை முட்டும்‌ மணிமாடங்களையும்‌, உயர்ந்த மதில்களையும்‌ உடைய கச்சி மாநகரில்‌ உள்ள திருஏகம்பத்தில்‌ உறைகின்றார்‌. இப்பெருமானின்‌ திருவடிகளைப்‌ போற்றித்‌ தொழுதால்‌ நமது துன்பங்கள்‌ விலகிவிடும்‌.

7 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

இப்பதிகத்தில் 7-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

8

வாணிலா மதிபுல்கு செஞ்சடை வாளர வம்மணிந்துநாணிடத் தினில்வாழ்க்கை பேணி நகுதலையிற் பலிதேர்ந்தேணிலா அரக்கன்றன் நீள்முடி பத்தும் இறுத்தவனூர்சேணுலாம் பொழிற்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.
சொற்பிரிப்பு
வாள் நிலாமதி புல்கு செஞ்சடை வாள் அரவம் அணிந்து,நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி, நகுதலையில் பலி தேர்ந்து,ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர்,சேண் உலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.
உரை

பிறையை அணிந்த செஞ்சடையில்‌ அரவத்தை அணிந்திருப்பவர்‌ சிவபெருமான்‌: இடப்பாகத்தில்‌ நாணோடு கூடியவளும்‌ இல்வாழ்க்கைக்கு உரியவளுமான உமையம்மையை விரும்பி ஏற்றிருப்பவர்‌. சிரிப்பது போன்று தோற்றமளிக்கும்‌ தலையோட்டில்‌ பிச்சை ஏற்பவர்‌. மன உறுதி இல்லாத அரக்கனான இராவணனின்‌ நீண்ட கிரீடம்‌ தரித்த பத்துத்‌ தலைகளையும்‌ நெரித்தவர்‌. இத்தகைய பெருமைகளை உடைய சிவபெருமானின்‌ ஊர்‌ திருக்கச்சி ஏகம்பம்‌ ஆகும்‌. வானளாவி ஓங்கி உயர்ந்த பொழில்களை உடைய கச்சி மாநகரில்‌ உள்ள திருஏகம்பத்தை அடைந்துவிட்டால்‌ நமது துன்பங்கள்‌ நீங்கிவிடும்‌.

9

பிரமனுந் திருமாலுங் கைதொழப் பேரழ லாயபெம்மான்அரவஞ் சேர்சடை அந்தணன் அணங்கினொ டமருமிடம்கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக் கச்சி மாநகருள்மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ வல்வினை மாய்ந்தறுமே.
சொற்பிரிப்பு
பிரமனும் திருமாலும் கைதொழப் பேர் அழல் ஆய பெம்மான்,அரவம் சேர் சடை அந்தணன், அணங்கினொடு அமரும் இடம்,கரவு இல் வண்கையினார்கள் வாழ் கலிக் கச்சி மா நகருள்,மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ, வில்வினை மாய்ந்து அறுமே.
உரை

பிரமனும்‌ திருமாலும்‌ கைகூப்பி பணிந்து தொழுதபோது பெரிய அனல்‌ உருவாக நின்ற பெருமான்‌ சிவபெருமான்‌ ஆவான்‌. பாம்பை அணிந்த சடையை உடைய அந்தணனும்‌ ஆகிய இப்பெருமான்‌ தன்‌ தேவியோடு அமர்ந்திருக்கும்‌ இடம்‌ திருக்கச்சி ஏகம்பம்‌ ஆகும்‌. உள்ளத்தில்‌ வஞ்சகம்‌ இல்லாத வள்ளல்‌ தன்மை உடைய கைகளும்‌ உள்ள சான்றோர்கள்‌ வாழ்கின்ற ஆரவாரமுடைய மாநகர்‌ கச்சி ஆகும்‌. இங்குள்ள குங்கும மரங்கள்‌ சூழ்ந்த பொழில்களை உடைய இந்த ஏகம்பத்தைத்‌ தொழுதால்‌ நம்மைத்‌ துன்புறுத்தும்‌ கொடிய வினைகள்‌ மாய்ந்து அறுபட்டுப்‌ போகும்‌.

10

குண்டுபட் டமணா யவரொடுங் கூறைதம் மெய்போர்க்கும்மிண்டர் கட்டிய கட்டுரை யவைகொண்டு விரும்பேன்மின்விண்டவர் புரமூன்றும் வெங்கணை ஒன்றி னாலவியக்கண்டவன் கலிக்கச்சி யேகம்பங் காண விடர்கெடுமே.
சொற்பிரிப்பு
குண்டுபட்டு அமண ஆயவரொடும், கூறை தம் மெய் போர்க்கும்மிண்டர், கட்டிய கட்டுரை அவை கொண்டு விரும்பேன்மின்!விண்டவர் புரம் மூன்றும் வெங்கணை ஒன்றினால் அவியக்கண்டவன் கலிக் கச்சி ஏகம்பம் காண, இடர் கெடுமே.
உரை

தடித்த உடலமைப்பும்‌, ஆடையில்லாமல்‌ திரியும்‌ சமணர்களும்‌, ஆடையை உடலில்‌ போர்த்து வலியவராகத்‌ திரியும்‌ புத்தர்களும்‌ புனைந்து கூறும் உரைகளை விரும்பாதீர்கள்‌. பகைவர்களான அசுரர்களின்‌ மூன்று புரங்களையும்‌ கொடிய கணை ஒன்றால்‌ எரித்து அழித்த சிவபெருமான்‌ எழுந்தருளி இருக்கும்‌ ௧ச்சி நகரில்‌ உள்ள ஏகம்பத்தைச்‌ சென்று அடைந்தால்‌ நமது துன்பங்கள்‌ இல்லாமற்போகும்‌.

11

ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி யேகம்பம் மேயவனைகாரினார் மணிமாட மோங்கு கழுமல நன்னகருள்பாரினார் தமிழ்ஞான சம்பந்தன் பரவிய பத்தும்வல்லார்சீரினார் புகழோங்கி விண்ணவ ரோடுஞ் சேர்பவரே.
சொற்பிரிப்பு
ஏரின் ஆர் பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம் மேயவனை,காரின் ஆர் மணி மாடம் ஓங்கு கழுமல நன்நகருள்,பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார்,சீரின் ஆர் புகழ் ஓங்கி, விண்ணவ ரோடும் சேர்பவரே.
உரை

அழகு நிறைந்த பொழில்கள்‌ சூழ்ந்த கச்சி ஏகம்பத்துள்‌ விளங்கும்‌ சிவபெருமானை, மேகங்கள்‌ தவழும்‌ அழகிய மணிமாடங்கள்‌ ஓங்கிய கழுமல நன்னகருள்‌ தோன்றிய தமிழ்‌ வல்ல ஞானசம்பந்தன்‌ போற்றிப்‌ பாடினார்‌. இவர்‌ துதித்துப்‌ போற்றிய இந்தப்‌ பத்துப்‌ பாடல்களையும்‌ ஓதவல்லவர்கள்‌ இவ்வுலகில்‌ சிறந்த புகழுடையவராக ஓங்கி இருப்பார்கள்‌. பின்னர்‌ வானவர்களோடு சேர்ந்து வாழ்வார்கள்‌.

திருச்சிற்றம்பலம்