திருமுறை 1 · 1.132 · 11

திருச்சிற்றம்பலம்

திருவீழிமிழலை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
மேகராகக்குறிஞ்சி
தலம்
வீழிமிழலை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்றுநேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர் நெறியளித்தோன் நின்றகோயில்பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோது மோசைகேட்டுவேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருள்சொல்லும் மிழலையாமே.
சொற்பிரிப்பு
ஏர் இசையும் வட ஆலின்கீழ் இருந்து, அங்கு ஈர் இருவர்க்கு இரங்கி நின்று,நேரிய நால்மறைப்பொருளை உரைத்து, ஒளி சேர் நெறிஅளித்தோன் நின்றகோயில்பார் இசையும் பண்டிதர்கள் பல்-நாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு,வேரி மலி பொழில், கிள்ளை வேதங்கள் பொருள் சொல்லும் மிழலை ஆமே.
உரை

அழகிய கல்லால மரத்தின்கீழ்‌ இருந்து, சனகாதி முனிவர்கள்‌ நால்வர்க்கும்‌ கருணையோடு, நான்கு வேதங்களின்‌ உண்மைப்‌ பொருளை உரைத்தும்‌, ஒளிசேரும்‌ மெய்ந்நெறியையும்‌ அருளியவர்‌ சிவபெருமான்‌ ஆவார்‌. இப்பெருமான்‌ எழுந்தருளி இருக்கும்‌ கோயில்‌ திருவீழிமிழலை ஆகும்‌. நிலவுலகில்‌ வாழும்‌ வேதப்‌ பண்டிதர்கள்‌ பலநாட்களாகத்‌ தொடர்ந்து வேதத்தை ஓதும்‌ ஓசையை நன்கு கேட்டுத்‌, தேன்நிறைந்த பொழில்களில்‌ வாழும்‌ கிளிகளும்‌, அவற்றின்‌ பொருளைச்‌ சொல்லுகின்ற சிறப்பினை உடையது திருவீழிமிழலை ஆகும்‌.

2

பொறியரவ மதுசுற்றிப் பொருப்பேமத் தாகப்புத் தேளிர்கூடிமறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட கண்டத்தோன் மன்னுங்கோயில்செறியிதழ்த்தா மரைத்தவிசிற் றிகழ்ந்தோங்கு மிலைக்குடைக்கீழ்ச் செய்யார்செந்நெல்வெறிகதிர்ச்சா மரையிரட்ட இளவன்னம் வீற்றிருக்கும் மிழலையாமே.
சொற்பிரிப்பு
பொறி அரவம் அது சுற்றி, பொருப்பே மத்து ஆக, புத்தேளிர் கூடி,மறி கடலைக் கடைந்திட்ட விடம் உண்ட கண்டத்தோன் மன்னும் கோயில்செறி இதழ்த் தாமரைத்தவிசில்—திகழ்ந்து ஓங்கும் இலைக் குடைக் கீழ், செய் ஆர்செந்நெல்வெறி கதிர்ச்சாமரை இரட்ட, இள அன்னம் வீற்றிருக்கும் மிழலை ஆமே.
உரை

தேவர்கள்‌ அனைவரும்‌ கூடி, மந்தர மலையை மத்தாக நாட்டி, புள்ளிகளை உடைய வாசுகி என்னும்‌ பாம்பைக்‌ கயிறாகச்‌ சுற்றி, அலைகள்‌ மிகுந்த பாற்கடலைக்‌ கடைந்தனர்‌. அப்பொழுது எழுந்த நஞ்சினை உண்ட கண்டத்தை உடையவர்‌ சிவபெருமான்‌ ஆவார்‌. இப்பெருமான்‌ நிலைபெற்று இருக்கும்‌ கோயில்‌ திருவீழிமிழலை ஆகும்‌. இத்தலத்தில்‌ நெருங்கிய இதழ்களை உடைய தாமரை மலரைத்‌ தனது இருப்பிடமாகவும்‌, தாமரை இலையைக்‌ குடையாகவும்‌ கொண்டு இள அன்னங்கள்‌, நெற்கதிர்கள்‌ சாமரம்‌ வீச வீற்றிருக்கின்றன.

3

எழுந்துலகை நலிந்துழலும் அவுணர்கள்தம் புரமூன்றும் எழிற்கண்நாடிஉழந்துருளும் அளவையினொள் ளெரிகொளவெஞ் சிலைவளைத்தோன் உறையுங்கோயில்கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநதம் முகங்காட்டக் குதித்துநீர்மேல்விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம் வாய்காட்டும் மிழலையாமே.
சொற்பிரிப்பு
எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம் புரம் மூன்றும், எழில் கண்ணாடிஉழுந்து உருளும் அளவையின், ஒள் எரி கொள, வெஞ்- சிலைவளைத்தோன் உறையும் கோயில்கொழுந் தரளம் நகை காட்ட, கோகனகம் முகம் காட்ட, குதித்து நீர்மேல்விழுந்த கயல் விழி காட்ட, வில் பவளம் வாய் காட்டும் மிழலை ஆமே.
உரை

வானத்தில்‌ பறந்து, திரிந்து உலக மக்களை நலிவுறச்‌ செய்பவர்கள்‌ முப்புர அசுரர்கள்‌ ஆவர்‌. அவர்கள்‌ வாழும்‌ முப்புரங்களை, அழகிய கண்ணாடியில்‌ உளுந்து உருளக்‌ கூடிய நொடிப்‌ பொழுதில்‌, ஒளிமிகுந்த தீயினால்‌ எரிந்து போகுமாறு, கொடிய வில்லை வளைத்தவர்‌ சிவபெருமான்‌ ஆவார்‌. இப்பெருமான்‌ உறைந்திருக்கும்‌ கோயில்‌ திருவீழிமிழலை ஆகும்‌. இத்தலத்தில்‌ செழுமையான முத்துக்கள்‌ பெண்களின்‌ வெண்மையான பற்களைப்‌ போலவும்‌, தாமரை மலர்கள்‌ அவர்களின்‌ மலர்ச்சியான முகம்‌ போலவும்‌, நீர்‌ நிலைகளின்‌ மேல்‌ குதித்து விளையாடும்‌ கயல்‌ மீன்கள்‌ அவர்களின்‌ கண்விழிகளைப்‌ போலவும்‌, சிவந்த பவளங்கள்‌ அவர்களின்‌ சிவந்த உதடுகள்‌ போன்றும்‌ தோற்றமளிக்கின்றன.

4

உரைசேரும் எண்பத்து நான்குநூ றாயிரமாம் யோனிபேதம்நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான்கோயில்வரைசேரும் முகில்முழவ மயில்கள்பல நடமாட வண்டுபாடவிரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள் கையேற்கும் மிழலையாமே.
சொற்பிரிப்பு
உரை சேரும் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம்நிரை சேரப் படைத்து, அவற்றின் உயிர்க்கு உயிர் ஆய், அங்கு அங்கே நின்றான்கோயில்வரை சேரும் முகில் முழவ, மயில்கள் பல நடம் ஆட, வண்டு பாட,விரை சேர் பொன் இதழி தர, மென்காந்தள் கை ஏற்கும் மிழலை ஆமே.
உரை

நூல்களில்‌ உரைக்கப்படுகின்ற எண்பத்தி நான்கு லட்சம்‌ பிறப்பு வேறுபாடுகளை நேர்த்தியாகப்‌ படைத்து, அவற்றின்‌ ஒவ்வொன்றிலும்‌ உயிருக்கு உயிராய்‌ உள்நிற்கின்றவர்‌ சிவபெருமான்‌ ஆவார்‌. இப்பெருமான்‌ உறையும்‌ கோயில்‌ திருவீழிமிழலை ஆகும்‌. இத்தலத்தில்‌, மலைகளில்‌ தங்கியிருக்கும்‌ மேகங்கள்‌ மேலே எழும்பி, முழவின்‌ ஒலிபோல்‌ அதிர்கின்றன. அதனைக்‌ கேட்கும்‌ ஆண்‌ மயில்கள்‌ மழை வருவதை எதிர்பார்த்து நடனம்‌ ஆடுகின்றன. வண்டுகள்‌ இசை பாடுகின்றன. மணம்‌ நிறைந்த கொன்றை மலர்‌ இதழ்களாகிய பொன்னைத்‌ தர, காந்தள்‌ மலர்கள்‌ கையேந்தி வாங்குவது போன்று தோன்றும்‌ வளம்‌ நிறைந்த தலம்‌ திருவீழிமிழலை ஆகும்‌.

5

காணுமா றரியபெரு மானாகிக் காலமாய்க் குணங்கள்மூன்றாய்ப்பேணுமூன் றுருவாகிப் பேருலகம் படைத்தளிக்கும் பெருமான்கோயில்தாணுவாய் நின்றபர தத்துவனை உத்தமனை இறைஞ்சீரென்றுவேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப போலோங்கு மிழலையாமே.
சொற்பிரிப்பு
காணும் ஆறு அரிய பெருமான் ஆகி, காலம் ஆய், குணங்கள் மூன்று ஆய்,பேணு மூன்று உருஆகி, பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான் கோயில்"தாணு ஆய் நின்ற பரதத்துவனை, உத்தமனை, இறைஞ்சீர்!" என்றுவேணு வார்கொடி விண்ணோர்தமை விளிப்ப போல் ஓங்கு மிழலை ஆமே.
உரை

காண்பதற்கு அரிய கடவுளாக, மூன்று காலங்களாகவும்‌, மூன்று குணங்களாகவும்‌ ஆகி, உலகைப்‌ படைத்தும்‌, காத்தும்‌, அழித்தும்‌, மூன்று உருவும்‌ உடையாராகி, அண்டசராசரங்கள்‌ யாவற்றையும்‌ படைத்து அளிப்பவர்‌ சிவபெருமான்‌ ஆவார்‌. இப்பெருமானின்‌ கோயில்‌ திருவீழிமிழலை ஆகும்‌. என்றும்‌ நிலைத்திருக்கும்‌ பொருளாகவும்‌, பரதத்துவன்‌ ஆகவும்‌, உத்தமன்‌ ஆகவும்‌ இருப்பவன்‌ சிவபெருமான்‌. இத்தகையவனை நீங்கள்‌ வணங்குங்கள்‌ என்று உயர்ந்து ஓங்கிய மூங்கில்‌ கொடிகள்‌ தேவர்களை அழைப்பது போல்‌ அசையும்‌ காட்சிகளை உடையது திருவீழிமிழலை ஆகும்‌.

6

அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற் றைம்புலனும் அடக்கிஞானப்புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்கோயில்தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க் கந்திகழச் சலசத்தீயுள்மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட மணஞ்செய்யும் மிழலையாமே.
சொற்பிரிப்பு
அகன் அமர்ந்த அன்பினராய், அறுபகை செற்று, ஐம்புலனும் அடக்கி, ஞானப்புகல் உடையோர்தம் உள்ளப் புண்டரிகத்துள் இருக்கும் புராணர் கோயில்தகவு உடை நீர் மணித்தலத்து, சங்கு உள வர்க்கம் திகழ, சலசத்தீயுள்,மிக உடைய புன்கு மலர்ப்பொரி அட்ட, மணம் செய்யும் மிழலை ஆமே.
உரை

உள்ளத்தில்‌ பொருந்திய அன்புடையவராகவும்‌, ஆறுவித அகப்பகைகளை நீக்க, ஐம்புலன்களை அடக்க, சிவஞானத்தில்‌ திளைத்திருக்கும்‌ துறவிகளின்‌ இதயத்‌ தாமரையில்‌ எழுந்தருளி விளங்குபவர்‌ பழையோனான சிவபெருமான்‌ ஆவான்‌. அவன்‌ உறைந்திருக்கும்‌ கோயில்‌ திருவீழிமிழலை ஆகும்‌. இத்தலத்தில்‌ உள்ள தூய நீர்‌ நிலைகளில்‌ மணிகளும்‌, சங்குகளும்‌ விதவிதமான இனங்களும்‌ சுற்றத்தார்போல சூழ்ந்திருக்க நீர்நிலைகளில்‌ சிவந்த தாமரை மலர்கள்‌ அக்கினி போன்று தோன்ற அடர்த்தியாக வளர்ந்த புங்க மரங்கள்‌ மலர்களாகிய பொரியை அத்தீயில்‌ தூவுகின்றன. இவ்வாறு திருமண நிகழ்வினை நினைவுறுத்தும்‌ இயற்கை வளம்‌ நிரம்பியது திருவீழிமிழலை ஆகும்‌.

7

ஆறாடு சடைமுடியன் அனலாடு மலர்க்கையன் இமயப்பாவைகூறாடு திருவுருவன் கூத்தாடுங் குணமுடையோன் குளிருங்கோயில்சேறாடு செங்கழுநீர்த் தாதாடி மதுவுண்டு சிவந்தவண்டுவேறாய உருவாகிச் செவ்வழிநற் பண்பாடும் மிழலையாமே.
சொற்பிரிப்பு
ஆறு ஆடு சடைமுடியன், அனல் ஆடு மலர்க்கையன், இமயப்பாவைகூறு ஆடு திரு உருவன், கூத்து ஆடும் குணம் உடையோன், குளிரும் கோயில்சேறு ஆடு செங்கழுநீர்த் தாது ஆடி, மது உண்டு, சிவந்த வண்டுவேறு ஆய உருஆகி, செவ்வழி நல் பண் பாடும் மிழலை ஆமே.
உரை

கங்கையை அணிந்த சடைமுடியை உடையவன்‌. மலர்‌ போன்ற கரத்தில்‌ அனலை ஏந்தியிருப்பவன்‌. இமவான்‌ மகளாகிய பார்வதி தேவியை ஒரு கூறாக உடையவன்‌. கூத்தாடும்‌ குணம்‌ உடையவன்‌! இத்தகைய பெருமைகளை உடைய சிவபெருமான்‌ மனம்‌ குளிர்ந்து எழுந்தருளி இருக்கும்‌ கோவில்‌ திருவீழிமிழலை ஆகும்‌. இத்தலத்தில்‌ சேற்றில்‌ முளைத்த செங்கழுநீர்‌ மலர்களில்‌ உள்ள மகரந்தப்‌ பொடியில்‌ விளையாடி, சிவந்த நிறத்தை அடைகின்றன வண்டுகள்‌. தேனைக்‌ குடித்த இந்த வண்டுகள்‌ செவ்வழிப்‌ பண்‌ இசையைப்‌ பாடிக்‌ களிக்கின்ற தலம்‌ திருவீழிமிழலை ஆகும்‌.

8

கருப்பமிகும் உடலடர்த்துக் காலூன்றிக் கைமறித்துக் கயிலையென்னும்பொருப்பெடுக்க லுறுமரக்கன் பொன்முடிதோள் நெரித்தவிரற் புனிதர்கோயில்தருப்பமிகு சலந்தரன்றன் உடல்தடிந்த சக்கரத்தை வேண்டியீண்டுவிருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி விமானஞ்சேர் மிழலையாமே.
சொற்பிரிப்பு
கருப்பம் மிகும் உடல் அடர்த்து, கால் ஊன்றி, கை மறித்து, கயிலை என்னும்பொருப்பு எடுக்கல் உறும் அரக்கன் பொன் முடி தோள் நெரித்த விரல் புனிதர்கோயில்தருப்பம் மிகு சலந்தரன் தன் உடல் தடிந்த சக்கரத்தை வேண்டி, ஈண்டுவிருப்பொடு மால் வழிபாடு செய்ய, இழி விமானம் சேர் மிழலை ஆமே.
உரை

கர்வம்‌ மிகுந்த உடலை வருத்திக்‌, காலை ஊன்றி, கைகளை வளைத்துக்‌, கயிலை என்னும்‌ மலையைப்‌ பெயர்த்து எடுக்க முயன்ற அரக்கன்‌ இராவணன்‌ ஆவான்‌. இந்த அரக்கனின்‌ பொற்கிரீடம்‌ அணிந்த தலைகளையும்‌, தோள்களையும்‌ நெரித்த கால்விரலை உடைய புனிதரான சிவபெருமானின்‌ கோயில்‌ திருவீழிமிழலை ஆகும்‌. இந்தத்தலம், செருக்கு மிக்க சலந்தரன்‌ என்னும்‌ அசுரனின்‌ உடலைப்‌ பிளந்த, “சக்கரம்‌” என்ற ஆயுதத்தைப்‌ பெறத்‌ திருமால்‌ பெருவிருப்பத்துடன்‌ வழிபட்ட தலமாகும்‌. அதற்காகவே, இத்தலத்தில்‌ விண்ணில்‌ இருந்து இறக்கப்பட்ட விமானம்‌ உள்ளது.

9

செந்தளிர்மா மலரோனுந் திருமாலும் ஏனமொடு அன்னமாகிஅந்தமடி காணாதே அவரேத்த வெளிப்பட்டோன் அமருங்கோயில்புந்தியினான் மறைவழியே புற்பரப்பி நெய்சமிதை கையிற்கொண்டுவெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர் சேருமூர் மிழலையாமே.
சொற்பிரிப்பு
செந்தளிர் மா மலரோனும் திருமாலும், ஏனமொடு அன்னம் ஆகி,அந்தம் அடி காணாதே, அவர் ஏத்த, வெளிப்பட்டோன் அமரும் கோயில்புந்தியின் நால்மறைவழியே புல் பரப்பி, நெய் சமிதை கையில் கொண்டு,வெந்தழலின் வேட்டு, உலகில் மிக அளிப்போர் சேரும் ஊர் மிழலை ஆமே.
உரை

சிவந்த இதழ்களை உடைய பெரிய தாமரை மலர்மேல்‌ உறையும்‌ பிரமனும்‌ திருமாலும்‌ முறையே அன்னமும்‌ பன்றியாகவும்‌ மாறி சிவபெருமானின்‌ முடியையும்‌ அடியையும்‌ தேடினர்‌. தேடியும்‌, காணமுடியாமல்‌ பணிந்து வழிபட்டனர்‌. அவர்களுக்கு காட்சி அளித்த பெருமான்‌ அமர்ந்திருக்கும்‌ கோயில்‌ திருவீழிமிழலை ஆகும்‌. தாங்கள்‌ பெற்ற அறிவில்‌ வேதவிதுப்படி தருப்பைப்‌ புற்களைப்‌ பரப்பி, நெய்‌, சமித்து ஆகியவற்றைக்‌ கையில்‌ கொண்டு அழல்‌ வளர்த்து வேள்வி செய்பவர்கள்‌ அந்தணர்கள்‌, உலகைக்‌ காப்பவர்களாகிய அந்த அந்தணர்கள்‌ சேரும்‌ ஊர்‌ திருவீழிமிழலை ஆகும்‌

10

எண்ணிறந்த அமணர்களும் இழிதொழில்சேர் சாக்கியரும் என்றுந்தன்னைநண்ணரிய வகைமயக்கித் தன்னடியார்க் கருள்புரியும் நாதன்கோயில்பண்ணமரும் மென்மொழியார் பாலகரைப் பாராட்டும் ஓசைகேட்டுவிண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ டும்இழியும் மிழலையாமே.
சொற்பிரிப்பு
எண் இறந்த அமணர்களும், இழி தொழில் சேர் சாக்கியரும், என்றும் தன்னைநண்ண (அ)ரிய வகை மயக்கி, தன் அடியார்க்கு அருள்புரியும் நாதன் கோயில்பண் அமரும் மென்மொழியார் பாலகரைப் பாராட்டும் ஓசை கேட்டு,விண்ணவர்கள் வியப்பு எய்தி, விமானத்தோடும் இழியும் மிழலை ஆமே.
உரை

எண்ணற்ற சமணர்களும்‌, இழிதொழில்‌ செய்யும்‌ சாக்கியரும்‌, எக்காலத்திலும்‌ தம்மை நெருங்க இயலாதபடி, அவர்களின்‌ அறிவை மயக்கி, தமது அடியார்களுக்கு அருள் செய்யும்‌, பெருமான்‌ எழுந்தருளி இருக்கும்‌ கோயில்‌ திருவீழிமிழலை ஆகும்‌. இத்தலத்தில பண்‌ இசைபோன்று மென்மையான மொழிபேசும்‌ பாவையர்கள் தாங்கள் பெற்ற புதல்வர்களை தாலாட்டுப்‌ பாடிப்‌ பாராட்டுகின்றனர்‌. இந்தத்‌ தாலாட்டு இசையைத்‌ தேவர்கள்‌ கேட்டு வியந்து, தங்கள்‌ விமானங்களுடன்‌ இங்கு வந்து இறங்குகின்றனர்‌.‌

11

மின்னியலும் மணிமாடம் மிடைவீழி மிழலையான் விரையார்பாதஞ்சென்னிமிசைக் கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன் செழுமறைகள் பயிலும்நாவன்பன்னியசீர் மிகுஞான சம்பந்தன் பரிந்துரைத்த பத்துமேத்திஇன்னிசையாற் பாடவல்லார் இருநிலத்தில் ஈசனெனும் இயல்பினோரே.
சொற்பிரிப்பு
மின் இயலும் மணி மாடம் மிடை வீழி மிழலையான் விரை ஆர்பாதம்சென்னிமிசைக் கொண்டு ஒழுகும் சிரபுரக் கோன் செழுமறைகள் பயிலும் நாவன்,பன்னிய சீர் மிகு ஞானசம்பந்தன் பரிந்து உரைத்த பத்தும் ஏத்தி,இன் இசையால் பாட வல்லார், இருநிலத்தில் ஈசன் எனும் இயல்பினோரே.
உரை

மின்னல்‌ போன்ற ஒளியுடைய மணிகள்‌ இசைத்த மாடவீடுகள்‌ நிறைந்த திருவீழிமிழலையில்‌ வீற்றிருப்பவர்‌ சிவபெருமான்‌ ஆவார்‌. இப்பெருமானின்‌ மணம்‌ கமழுகின்ற திருவடிகளைச்‌ சென்னியில்‌ கொண்டு ஒழுகுகின்ற இயல்புடையவர்‌ சிரபுரத்தின்‌ தலைவராகிய ஞானசம்பந்தன்‌ ஆவார்‌. இவர்‌ மறைகள்‌ பயின்ற நாவினையும்‌, பலர்‌ போற்றும்‌ சிறப்புகளையும்‌ உடையவர்‌. இத்தகு ஞானசம்பந்தன்‌ இறைவனை அன்புடன்‌ போற்றிப்‌ பாடிய இப்பதிகப்‌ பாடல்கள்‌ பத்தையும்‌, இனிய இசையுடன்‌ பாட வல்லவர்கள்‌, பெரிதான இந்நில உலகத்தில்‌ ஈசன்‌ என்று போற்றப்பபடும்‌ இயல்புடையவர்கள்‌ ஆவார்கள்‌.

திருச்சிற்றம்பலம்