திருமுறை 1 · 1.131 · 11

திருச்சிற்றம்பலம்

திருமுதுகுன்றம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
மேகராகக்குறிஞ்சி
தலம்
முதுகுன்றம்
நாடு
நடுநாடு

1

மெய்த்தாறு சுவையும் ஏழிசையும் எண் குணங்களும் விரும்புநால்வேதத்தாலும் அறிவொண்ணா நடைதெளியப் பளிங்கேபோல் அரிவைபாகம்ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன் கருதுமூர் உலவுதெண்ணீர்முத்தாறு வெதிருதிர நித்திலம்வா ரிக்கொழிக்கும் முதுகுன்றமே.
சொற்பிரிப்பு
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும், எண் குணங்களும், விரும்பும் நால்வே-தத்தாலும் அறிவு ஒண்ணா நடை தெளியப் பளிங்கே போல் அரிவை பாகம்ஒத்து, ஆறுசமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண்நீர்முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரிக் கொழிக்கும் முது குன்றமே.
உரை

சிவபெருமானை, நமது மெய்யினால்‌ அறியப்படும்‌ அறு சுவைகளாலும்‌, ஏழிசைகளாலும்‌, எண்‌ குணங்களினாலும்‌, எல்லோராலும்‌ விரும்பப்‌ பெறும்‌ நான்கு வேதங்களாலும்‌ அறிய இயலாது. அவன்‌ தெளிவான மனத்தால்‌ அறியப்படும்‌ பளிங்கு போன்றவன்‌. அவன்‌ உமையம்மையை பாகமாக உடையவனும்‌ ஆறு சமயத்தினராலும்‌ மாறுபாடின்றி ஏற்றுக்‌ கொள்ளப்பெறும்‌ ஒரே தலைவன்‌ ஆவான்‌. அப்பெருமான்‌ விரும்பி அமர்ந்திருக்கும்‌ ஊர்‌ திருமுதுகுன்றம்‌ ஆகும்‌. இத்தலத்தில்‌ தெளிந்த நீர்‌ நிறைந்த மணிமுத்தாறு நதியானது, மலையில்‌ உள்ள மூங்கில்கள்‌ உதிர்க்கும்‌ முத்துக்களை வாரிக்கொண்டு வந்து கரையில்‌ குவிக்கின்றது.

2

வேரிமிகு குழலியொடு வேடுவனாய் வெங்கானில் விசயன்மேவுபோரின்மிகு பொறையளந்து பாசுபதம் புரிந்தளித்த புராணர்கோயில்காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல மலருதிர்த்துக் கயமுயங்கிமூரிவளங் கிளர்தென்றல் திருமுன்றிற் புகுந்துலவு முதுகுன்றமே.
சொற்பிரிப்பு
வேரி மிகு குழலியொடு வேடுவனாய், வெங்கானில் விசயன் மேவுபோரின் மிகு பொறை அளந்து, பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில்காரின் மலி கடிபொழில்கள் கனிகள் பல மலர் உதிர்த்து, கயம் முயங்கி,மூரி வளம் கிளர் தென்றல் திருமுன்றில் புகுந்து உலவு முதுகுன்றமே.
உரை

தேன்‌ மணம்‌ நிறைந்த கூந்தலை உடைய உமையம்மையுடன்‌ வேடன்‌ உருவத்தை எடுத்து, அருச்சுனன்‌ தவம்‌ புரியும்‌ கொடிய காட்டிற்குச்‌ சென்று, அவனுடன்‌ போர்‌ செய்து, அவனுடைய பொறுமையை அளந்து பின்னர்‌ அவனுக்குப்‌ பாசுபதத்தை விரும்பி அளித்த பழையோன்‌ சிவபெருமான்‌ ஆவான்‌. இப்பெருமானின்‌ கோயில்‌ திருமுதுகுன்றம்‌ ஆகும்‌. இத்தலத்தில்‌ மழையினால்‌ செழித்த மணமுடைய சோலைகளில்‌ கனிகளும்‌ பலவித மலர்களும்‌ உதிர்கின்றன. நீர்‌ நிலைகளைப்‌ பொருந்தி குளிர்ச்சியானதும்‌ வலிமையானதுமான தென்றல்‌ காற்று அழகிய வீடுகள்‌ தோறும்‌ புகுந்து உலவும்‌ இயற்கை வளம்‌ உடையது திருமுதுகுன்றம்‌ ஆகும்‌.

3

தக்கனது பெருவேள்விச் சந்திரன்இந் திரன்எச்சன் அருக்கன்அங்கிமிக்கவிதா தாவினொடும் விதிவழியே தண்டித்த விமலர்கோயில்கொக்கினிய கொழும்வருக்கைக் கதலிகமு குயர்தெங்கின் குவைகொள்சோலைமுக்கனியின் சாறொழுகிச் சேறுலரா நீள்வயல்சூழ் முதுகுன்றமே.
சொற்பிரிப்பு
தக்கனது பெருவேள்வி, சந்திரன், இந்திரன், எச்சன், அருக்கன், அங்கி,மிக்க விதாதாவினொடும், விதிவழியே தண்டித்த விமலர் கோயில்கொக்கு, இனிய கொழும் வருக்கை, கதலி, கமுகு, உயர் தெங்கின், குவை கொள்சோலை,முக்கனியின் சாறு ஒழுகிச் சேறு உலரா நீள் வயல் சூழ் முதுகுன்றமே.
உரை

தக்கன்‌ செய்த பெரிய வேள்வியில்‌ சந்திரன்‌, இந்திரன்‌, எச்சன்‌, சூரியன்‌, அக்கினி, பிரமன்‌ ஆகியவர்களை முறைப்படி வீரபத்திரனைக்‌ கொண்டு தண்டனை கொடுத்த விமலன்‌ சிவபெருமான்‌ ஆவான்‌. இப்பெருமானின்‌ கோயில்‌ திருமுதுகுன்றம்‌ ஆகும்‌. இத்தலத்தில்‌ முக்கனிகளான இனிய மாங்கனிகள்‌ வளமான பலாக்கனிகள்‌ வாழைக்களனிகள்‌ ஆகியவற்றின்‌ சாறு நீண்ட வயல்களில்‌ ஒழுகி விழுகின்றன. அதனால்‌ வயல்கள்‌ அவைகளின்‌ சேறு உலராதவைகளாக இருக்கின்றன. இங்குள்ள சோலைகளில்‌ உள்ள கமுக மரங்களிலும்‌ தென்னை மரங்களிலும்‌ குலைகள்‌ நிறைந்துள்ளன. இத்தகைய செழுமை நிறைந்த ஊர்‌ திருமுதுகுன்றம்‌ ஆகும்‌.

4

வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய விறலழிந்து விண்ணுளோர்கள்செம்மலரோன் இந்திரன்மால் சென்றிரப்பத் தேவர்களே தேரதாகமைம்மருவு மேருவிலு மாசுணநாண் அரியெரிகால் வாளியாகமும்மதிலும் நொடியளவிற் பொடி செய்த முதல்வனிடம் முதுகுன்றமே.
சொற்பிரிப்பு
வெம்மை மிகு புரவாணர் மிகை செய்ய; விறல் அழிந்து, விண் உளோர்கள்,செம்மலரோன், இந்திரன், மால், சென்று இரப்ப; தேவர்களே தேர் அது ஆக,மைம் மருவு மேரு விலு, மாசுணம் நாண், அரி எரிகால் வாளி ஆக,மும்மதிலும் நொடி அளவில் பொடிசெய்த முதல்வன் இடம் முதுகுன்றமே.
உரை

கொடுமை மிகுந்த முப்புரங்களில்‌ வாழும்‌ அசுரர்கள்‌ செய்யும்‌ தீமைகளால்‌, தங்களின்‌ வலிமை இழந்தனர்‌ தேவர்கள்‌. பிரமனும்‌, இந்திரனும்‌, திருமாலும்‌ மற்றுமுள்ள தேவர்களும்‌ சிவபெருமானிடம்‌ சென்று தங்களைக்‌ காத்தருள வேண்டினர்‌. இப்பெருமான்‌, தேவர்களைத்‌ தேராகவும்‌, மேகங்கள்‌ தவழும்‌ மேரு மலையை வில்லாகவும்‌, வாசுகி என்னும்‌ பாம்பை நாணாகவும்‌, திருமால்‌, அக்கினி, வாயு ஆகியோரை அம்பாகவும்‌ கொண்டு அசுரர்களின்‌ மும்மதில்களை ஒரு நொடிப்‌ பொழுதில்‌ பொடி செய்தார்‌. எல்லோருக்கும்‌ தலைவனான இப்பெருமானின்‌ இடம்‌ திருமுதுகுன்றம்‌ ஆகும்‌.

5

இழைமேவு கலையல்குல் ஏந்திழையாள் ஒருபாலா யொருபாலெள்காதுழைமேவும் உரியுடுத்த வொருவனிருப் பிடமென்பர் உம்பரோங்குகழைமேவு மடமந்தி மழைகண்டு மகவினொடும் புகவொண்கல்லின்முழைமேவும் மால்யானை யிரைதேரும் வளர்சாரல் முதுகுன்றமே.
சொற்பிரிப்பு
இழை மேவு கலை அல்குல் ஏந்திழையாள் ஒருபால் ஆய், ஒருபால் எள்காதுஉழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்குகழை மேவு மடமந்தி மழை கண்டு, மகவினொடும் புக, ஒண் கல்லின்முழை மேவு மால்யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே.
உரை

மேகலை என்னும்‌ அணிகலன்‌ பொருந்திய அல்குலையும்‌ முத்துவடம்‌ முதலியவை அணிந்த மேனியை உடையவளான உமையம்மையை ஒருபாகமாகவும்‌, தனது பாகத்தில்‌ மானின்‌ தோலை இகழாது உடுத்தியிருக்கும்‌ ஒப்பற்ற சிவபெருமானின்‌ இருப்பிடம்‌ திருமுதுகுன்றம்‌ ஆகும்‌. இத்தலத்தில்‌ ஊரின்‌ நடுவே உயர்ந்த மூங்கில்‌ மேல்‌ அமர்ந்திருக்கும்‌ பெண்‌ குரங்கானது மழை வருகின்றதைக்‌ கண்டு பயந்து தன்‌ குட்டியுடன்‌ மலைக்‌ குகையில்‌ ஒதுங்குகின்றது. வளமையான மலைச்‌ சாரலில்‌ பெரிய யானைகள்‌ இரை தேடித்‌ திரிகன்றன. இவ்வாறு மழை வளமும்‌, மலை வளமும்‌ உடையது திருமுதுகுன்றம்‌ ஆகும்‌.

6

நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த நாதனிடம் நன்முத்தாறுவகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு கரையருகு மறியமோதித்தகையாரும் வரம்பிடறிச் சாலிகழு நீர்குவளை சாயப்பாய்ந்துமுகையார்செந் தாமரைகள் முகம்மலர வயல்தழுவு முதுகுன்றமே.
சொற்பிரிப்பு
நகை ஆர் வெண் தலைமாலை முடிக்கு அணிந்த நாதன் இடம் நல் முத்தாறுவகை ஆரும் வரைப்பண்டம் கொண்டு இரண்டு கரை அருகும் மறிய மோதி,தகை ஆரும் வரம்பு இடறி, சாலி கழு- -நீர் குவளை சாயப் பாய்ந்து,முகை ஆர் செந்தாமரைகள் முகம்மலர, வயல் தழுவு முதுகுன்றமே.
உரை

சிரித்தலைப்‌ பொருந்திய வெண்மையான தலைமாலை அணிந்த நாதனாகிய சிவபெருமானின்‌ இருப்பிடம்‌ திருமுதுகுன்றம்‌ ஆகும்‌. இத்தலத்தில்‌ மணிமுத்தாறு நதியானது மலையில்‌ விளையும்‌ பொருட்களை வாரிக்‌ கொண்டும்‌ தனது இருகரைகளையும்‌ உடைத்துக்‌ கொண்டும்‌ வருகின்றது. அது நெற்கதிர்களும்‌, கழுநீர்‌ மலர்களும்‌, குவளை மலர்களும்‌ சாய்ந்து போகுமாறு வேகமாகப்‌ பாய்ந்து தாமரைகள்‌ மலர்ந்த வயலைத்‌ தழுவும்‌. இத்தகு நீர்வளமும்‌ நிலவளமும்‌ உடையது திருமுதுகுன்றம்‌ ஆகும்‌.

7

அறங்கிளரும் நால்வேத மாலின்கீழ் இருந்தருளி யமரர்வேண்டநிறங்கிளர்செந் தாமரையோன் சிரம்ஐந்தின் ஒன்றறுத்த நிமலர்கோயில்திறங்கொள்மணித் தரளங்கள் வரத்திரண்டங் கெழிற்குறவர் சிறுமிமார்கள்முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி முத்துலைப்பெய் முதுகுன்றமே.
சொற்பிரிப்பு
அறம் கிளரும் நால்வேதம் ஆலின் கீழ் இருந்து அருளி, அமரர் வேண்ட,நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில்திறம் கொள் மணித்தரளங்கள் வர, திரண்டு அங்கு எழில் குறவர் சிறுமிமார்கள்முறங்களினால் கொழித்து, மணி செல விலக்கி, முத்து உலைப் பெய்முதுகுன்றமே.
உரை

ஆலமரத்தின்‌ கீழ்‌ வீற்றிருந்து, அறநெறிகள்‌ விளங்கும்‌ நான்கு வேதங்களையும்‌ சனகாதியருக்கு அருளியவர்‌ சிவபெருமான்‌ ஆவான்‌. தேவர்களின்‌ வேண்டுகோளுக்கு இணங்கி சிவந்த தாமரை மலர்‌ மேல்‌ வீற்றிருக்கும்‌ பிரமனின்‌ ஐந்து தலைகளில்‌ ஒன்றைக்‌ கொய்த நிமலனான சிவபெருமான்‌ உறையும்‌ கோயில்‌ திருமுதுகுன்றம்‌ ஆகும்‌. இத்தலத்தில்‌ குறவர்‌ குடிச்‌ சிறுமியர்கள்‌ ஆற்றில்‌ மாணிக்கங்களும்‌ முத்துக்களும்‌ வருவதைக்‌ காணுகின்றனர்‌. அவற்றை முறங்களால்‌ வாரி எடுக்கின்றனர்‌. மணிகளைப்‌ புடைத்து விலக்கி முத்துக்களைச்‌ சிறு உலைகளில்‌ கொட்டி சிற்றில்‌ இழைத்து விளையாடி மகிழும்‌ ஊராகும்‌.

8

கதிரொளிய நெடுமுடிபத் துடையகடல் இலங்கையர்கோன் கண்ணும் வாயும்பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை மலையைநிலை பெயர்த்தஞான்றுமதிலளகைக் கிறைமுரல மலரடியொன் றூன்றிமறை பாட ஆங்கேமுதிரொளிய சுடர்நெடுவாள் முன்னீந்தான் வாய்ந்தபதி முதுகுன்றமே.
சொற்பிரிப்பு
கதிர் ஒளிய நெடுமுடிபத்து உடைய கடல் இலங்கையர்கோன் கண்ணும் வாயும்பிதிர் ஒளிய கனல் பிறங்க, பெருங்கயிலை மலையை நிலை பெயர்த்த ஞான்று,மதில் அளகைக்கு இறை முரல, மலர் அடி ஒன்று ஊன்றி, மறை பாட, ஆங்கேமுதிர் ஒளிய சுடர் நெடுவாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி முதுகுன்றமே.
உரை

கதிரவன்‌ போன்ற ஒளியை உடைய நீண்ட மகுடங்களைத்‌ தனது பத்துத்‌ தலைகளில்‌ சூடியிருப்பவன்‌ இராவணன்‌ ஆவான்‌. இவன்‌ தனது கண்களும்‌, வாயும்‌ தீக்கனலை கக்குவதுபோல்‌ சினம்‌ கொண்டு பெரிய கயிலை மலை நிலை பெயருமாறு பெயர்த்தான்‌. அப்போது மதில்கள்‌ சூழ்ந்த அளகாபுரிக்குத்‌ தலைவனான குபேரன்‌ மகிழுமாறு, சிவபெருமான்‌ தமது மலர்போன்ற மென்மையான திருவடியை ஊன்றி இராவணனைத்‌ தண்டித்தார்‌. பின்னர்‌ அவன்‌ மறைபாடித்‌ துதித்தான்‌. அவனுக்கு சிவபெருமான்‌ ஒளிமிகுந்த வாளை முன்னின்று தந்தார்‌. இப்பெருமான்‌ எழுந்தருளி இருக்கும்‌ தலம்‌ திருமுதுகுன்றம்‌ ஆகும்‌.

9

பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும் பூந்துழாய் புனைந்தமாலும்ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ்ந் துறநாடி யுண்மைகாணாத்தேவாருந் திருவுருவன் சேருமலை செழுநிலத்தை மூடவந்தமூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ மேலுயர்ந்த முதுகுன்றமே.
சொற்பிரிப்பு
பூ ஆர் பொன்தவிசின்மிசை இருந்தவனும், பூந்துழாய் புனைந்த மாலும்,ஓவாது கழுகு ஏனம் ஆய், உயர்ந்து ஆழ்ந்து, உற நாடி, உண்மை காணாத்தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்தமூவாத முழங்கு ஒலி நீர் கீழ் தாழ, மேல் உயர்ந்த முதுகுன்றமே.
உரை

தாமரை மலரைத்‌ தனது ஆசனமாகக்‌ கொண்டவன்‌ பிரமன்‌ ஆவான்‌. திருமால்‌ அழகிய துளசி மாலையை அணிந்தவன்‌. இவர்கள்‌ அன்னமாகவும்‌, பன்றியாகவும்‌ உருமாறி, உயர்ந்த வானத்திலும்‌ தாழ்ந்த பூமியிலும்‌ தேடியும்‌ காண இயலாத தெய்வ ஒளி பொருந்திய திருஉருவை உடையவர்‌ சிவபெருமான்‌. இப்பெருமான்‌ எழுந்தருளிய மலை திருமுதுகுன்றம்‌ ஆகும்‌. இத்தலமானது, ஊழிக்‌ காலத்தில்‌ உலகத்தை மூடுமாறு ஆரவாரத்துடன்‌ வந்த கடல்‌ நீரானது, கீழே தாழ்ந்து போகுமாறும்‌ தான்‌ மேலே உயர்ந்து நின்றதுமான திருத்தலம்‌ ஆகும்‌.

10

மேனியில்சீ வரத்தாரும்விரிதருதட் டுடையாரும் விரவலாகாஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாதும் உள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டீர்ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்றுமோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து தவம்புரியும் முதுகுன்றமே.
சொற்பிரிப்பு
மேனியில் சீவரத்தாரும், விரிதரு தட்டுஉடையாரும், விரவல் ஆகாஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாதுஉம் உள் உணர்ந்து, அங்கு உய்மின்,தொண்டீர்!ஞானிகளாய் உள்ளார்கள் நால்மறையைமுழுது உணர்ந்து, ஐம்புலன்கள் செற்று,மோனிகளாய் முனிச்செல்வர் தனித்து இருந்துதவம் புரியும் முதுகுன்றமே.
உரை

உடம்பில்‌ துவர்‌ ஆடை அணிந்த புத்த மதத்தினரும்‌, விரிந்த ஓலைத்‌ தடுக்கை உடையாகக்‌ கொண்ட சமணர்களும்‌ தங்களின்‌ உடலை மட்டுமே பேணுபவர்கள்‌ ஆவர்‌. நட்பு கொள்ள இயலாதவரான அவர்களின்‌ சொற்களைக்‌ கேளாதீர்கள்‌. தொண்டர்களே! நீங்கள்‌ ஞானிகளாக உள்ளவர்களும்‌, நான்மறையை உணர்ந்தவர்களும்‌, ஐம்புலன்களை வென்ற மெளனிகளும்‌, முனிவர்களான செல்வர்களும்‌ தனித்திருந்து தவம்‌ புரியும்‌ திருமுதுகுன்றத்தை உள்ளத்தில்‌ உணர்ந்து உய்வீர்களாக!

11

முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யும் முதுகுன்றத் திறையைமூவாப்பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய கழுமலமே பதியாக்கொண்டுதழங்கெரிமூன் றோம்புதொழில் தமிழ்ஞான சம்பந்தன் சமைத்த பாடல்வழங்கும்இசை கூடும்வகை பாடுமவர் நீடுலகம் ஆள்வர்தாமே.
சொற்பிரிப்பு
முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம்செய்யும் முதுகுன்றத்து இறையை, மூவாப்பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்து உடைய கழுமலமே பதியாக் கொண்டு,தழங்கு எரிமூன்று ஓம்பு தொழில் தமிழ் ஞான சம்பந்தன் சமைத்த பாடல்வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே.
உரை

ஆரவாரத்துடனும்‌ நீர்‌ நிறைந்தும்‌ வருகின்ற மணிமுத்தாறு வலம்‌ வந்து வணங்கும்‌ திருமுதுகுன்றத்தின்‌ இறைவனான சிவபெருமானை, என்றுமே மூப்பு அடையாததும்‌, பன்னிரண்டு பெயர்களை உடையதுமான கழுமலப்‌ பதியில்‌ முத்து வேட்கும்‌ தொழிலை உடைய தமிழ்‌ ஞானசம்பந்தன்‌ போற்றிப்‌ பாடினார்‌. இப்பதிகப்‌ பாடல்களை அதற்குப்‌ பொருந்தும்‌ இசையுடன்‌ இயன்ற அளவு பாடி வழிபட வல்லவர்‌, நீடுலகத்தை ஆட்சி செய்வார்‌.

திருச்சிற்றம்பலம்