திருமுறை 1 · 1.130 · 11

திருச்சிற்றம்பலம்

திருவையாறு

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
மேகராகக்குறிஞ்சி
தலம்
ஐயாறு
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட் டைம்மேலுந்திஅலமந்த போதாக அஞ்சேலென் றருள்செய்வான் அமருங்கோயில்வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே.
சொற்பிரிப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு, ஐம் மேல் உந்தி,அலமந்த போது ஆக, "அஞ்சேல்!" என்று அருள் செய்வான் அமரும் கோயில்வலம் வந்த மடவார்கள் நடம் ஆட, முழவு அதிர, மழை என்று அஞ்சி,சிலமந்தி அலமந்து, மரம் ஏறி, முகில் பார்க்கும் திரு ஐயாறே.
உரை

ஐம்புலன்களும்‌ தமது பொறிகளின்‌ இயல்பில்‌ இருந்து வழிமாறி, அதற்குரிய அறிவையும்‌ இழந்து, பித்தம்‌, வாயு, சிலேத்துமம்‌ என்ற நாளங்களின்‌ மாறுபாட்டால்‌ ௧பம் பெருகி, மனம்‌ நிலையற்று வருந்தும்‌ மரண காலத்திலும்‌ ‘அஞ்சேல்‌’ என்று அருள் செய்பவன்‌ சிவபெருமான்‌ ஆவான்‌. இப்பெருமான்‌ அமர்ந்திருக்கும்‌ கோயில்‌ திருவையாறு ஆகும்‌. நடனக்கலையில்‌ வல்ல பெண்கள்‌ நடனம்‌ ஆடுகின்றனர்‌. அவ்வாடலுக்கு ஏற்றவாறு ‌ முழவுகள்‌ அதிர்கின்றன. அவற்றைக்‌ கேட்ட சில மந்திகள்‌ அதை இடிமுழக்கம்‌ என அஞ்சி, மரங்களில்‌ ஏறி மேகங்களைப்‌ பார்க்கின்றன. இத்தகைய வளம்‌ பொருந்தியது திருவையாறாகும்‌.

2

விடலேறு படநாகம் அரைக்கசைத்து வெற்பரையன் பாவையோடும்அடலேறொன் றதுவேறி அஞ்சொலீர் பலியென்னு மடிகள்கோயில்கடலேறித் திரைமோதிக் காவிரியி னுடன்வந்து கங்குல்வைகித்திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங் கீன்றலைக்குந் திருவையாறே.
சொற்பிரிப்பு
விடல் ஏறு படநாகம் அரைக்கு அசைத்து, வெற்பு அரையன் பாவையோடும்அடல் ஏறு ஒன்று அது ஏறி, "அம் சொலீர், பலி!" என்னும் அடிகள் கோயில்கடல் ஏறித் திரை மோதிக் காவிரியின் உடன் வந்து கங்குல் வைகி,திடல் ஏறிச் சுரிசங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும் திரு ஐயாறே.
உரை

கொல்லும்‌ தன்மை வாய்ந்த படத்தினை உடைய நாகத்தை அரையினில்‌ கட்டியிருப்பவரும்‌, மலையரசன்‌ மகளான பார்வதிதேவியோடு வலிமையான விடையின்மீது ஏறியிருப்பவரும்‌, சிவபெருமான்‌ ஆவார்‌. அவர்‌ ‘அழகிய சொற்களைப்‌ பேசும்‌ மகளிரே! பிச்சையிடுங்கள்‌!' என்று பலி கேட்பவர்‌. இப்பெருமானின்‌ கோயிலை உடையது திருவையாறாகும்‌. இத்தலத்தில்‌, வளைந்த மூக்கினை உடைய கடல்‌ சங்குகள்‌ அலைகள்‌ வாயிலாக காவிரி ஆற்றுடன்‌ வருகின்றன. அவைகள்‌ இரவு நேரத்தில்‌ மேடுகளில்‌ ஏறி, செழுமையான முத்துக்களை ஈனுகின்றன.

3

கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பே ராளர்மங்கைபங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால் இறகுலர்த்திக் கூதல்நீங்கிசெங்கால்நன் வெண்குருகு பைங்கானல் இரைதேருந் திருவையாறே.
சொற்பிரிப்பு
கங்காளர், கயிலாயமலையாளர், கானப்பேராளர், மங்கை-பங்காளர், திரிசூலப்படையாளர், விடையாளர், பயிலும் கோயில்கொங்கு ஆள் அப் பொழில் நுழைந்து, கூர்வாயால் இறகுஉலர்த்தி, கூதல் நீங்கி,செங்கால் நல் வெண்குருகு, பைங்கானல் இரை தேரும் திரு ஐயாறே.
உரை

சிவபெருமான்‌, மண்டை ஓட்டை மாலையாக அணிந்திருப்பவர்‌. கயிலை மலையில்‌ உறைபவர்‌. திருக்கானப்பேர்‌ என்னும்‌ தலத்தில்‌ உறைபவர்‌. உமை பங்காளர்‌. முத்தலைச்‌ சூலப்படையை ஏந்தியிருப்பவர்‌. விடை ஊர்தியை உடையவர்‌. இத்தகைய பெருமான்‌ எழுந்தருளிய கோயில்‌ திருவையாறு ஆகும்‌. இத்தலத்தில்‌ சிவந்த கால்களை உடைய வெண்ணிறக்‌ குருகுப்‌ பறவைகள்‌ தேன்‌ நிறைந்த சோலைகளில்‌ நுழைகின்றன. தமது கூரிய அலகுகளால்‌ இறகுகளைக்‌ கோதி குளிரை நீக்குகின்றன. அந்தப்‌ பசுமையான சோலைகளில்‌ தமக்கு வேண்டிய இரைகளைத்‌ தேடும்‌ திருவையாறாகும்‌.

4

ஊன்பாயு முடைதலைக்கொண் டூரூரின் பலிக்குழல்வார் உமையாள்பங்கர்தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார் தழலுருவர் தங்குங்கோயில்மான்பாய வயலருகே மரமேறி மந்திபாய் மடுக்கள்தோறுந்தேன்பாய மீன்பாய செழுங்கமல மொட்டலருந் திருவையாறே.
சொற்பிரிப்பு
ஊன் பாயும் உடைதலைக் கொண்டு ஊர் ஊரன் பலிக்கு உழல்வார், உமையாள்பங்கர்,தான் பாயும் விடை ஏறும் சங்கரனார், தழல் உருவர், தங்கும் கோயில்மான் பாய, வயல் அருகே மரம் ஏறி, மந்தி பாய் மடுக்கள் தோறும்தேன் பாய, மீன் பாய, செழுங்கமல மொட்டு அலரும் திரு ஐயாறே.
உரை

ஊன்‌ பொருந்தியதும்‌ முடைநாற்றம்‌ உடையதுமான தலை ஓட்டைக்‌ கைகளில்‌ ஏந்தி ஊர்கள்தோறும்‌ சென்று பலியேற்று உழல்பவர்‌. உமை பங்கர்‌. பாய்ந்து செல்லும்‌ விடையேற்றை உடையவர்‌. நன்மைகளைச்‌ செய்வதனால்‌ சங்கரன்‌ என்னும்‌ பெயரை உடையவர்‌. தழல்‌ உருவினர்‌. இத்தகையப்‌ பெருமைகளை உடைய சிவபெருமான்‌ தங்கியிருக்கும்‌ கோயில்‌ திருவையாறு ஆகும்‌. இத்தலத்தில்‌ மான்கள்‌ துள்ளிப்‌ பாய வயலின்‌ அருகே உள்ள மரங்களில்‌ ஏறி மந்திகள்‌ பாய, அதில்‌ இருக்கும்‌ தேன்‌ கூடுகளில்‌ இருந்து தேன்‌ ஆற்றில்‌ பாய, அதனால்‌ மீன்கள்‌ துள்ளி தாமரை மொட்டை, மலர வைக்கின்றன. இத்தகைய இயற்கை வளத்தை உடையது திருவையாறு ஆகும்‌.

5

நீரோடு கூவிளமும் நிலாமதியும் வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத்தாரோடு தண்கரந்தைச் சடைக்கணிந்த தத்துவனார் தங்குங்கோயில்காரோடி விசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ்தார்வீதித்தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலுந் திருவையாறே.
சொற்பிரிப்பு
நீரோடு கூவிளமும், நிலாமதியும், வெள் எருக்கும், நிறைந்த கொன்றைத்தாரோடு, தண்கரந்தை, சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில்கார் ஓடி விசும்பு அளந்து, கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதித்தேர் ஓடும் அரங்கு ஏறி, சேயிழையார் நடம் பயிலும் திரு ஐயாறே.
உரை

கங்கை நதி, வில்வம்‌, பிறைமதி, வெள்ளெருக்கு, கொன்றை மலர்கள்‌ நிறைந்த மாலை, குளிர்ச்சியான கரந்த மலர்‌: ஆகியவற்றை அணிந்திருக்கும்‌ தத்துவனானவன்‌ சிவபெருமான்‌ ஆவான்‌. இப்பெருமான்‌ தங்கியிருக்கும்‌ கோயில்‌, திருவையாறு ஆகும்‌. இத்தலத்தில்‌ நிறைந்துள்ள பொழில்களின்‌ நறுமணம்‌, மேக மண்டலம்‌ வரை உயர்ந்து வானத்தை அளந்து பரவிநிற்கின்றது. தேர்‌ ஓடும்‌ வீதிகளில்‌ மணம்‌ கமழும்‌ வீடுகள்‌ உள்ளன. வீதிகளில்‌ உள்ள அரங்குகளில்‌ அணிகலன்களை அணிந்த இளம்‌ பெண்கள்‌ நடனம்‌ ஆடுகின்றனர்‌. இத்தகு மகிழ்ச்சியான மக்கள்‌ வாழும்‌ தலம்‌ திருவையாறாகும்‌.

6

வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறிகாட்டும் விகிர்தனாகிப்பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த புண்ணியனார் நண்ணுங்கோயில்காந்தார மிசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித்தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே.
சொற்பிரிப்பு
வேந்து ஆகி, விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகி,பூந்தாம நறுங்கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில்காந்தாரம் இசை அமைத்துக் காரிகையார் பண் பாட, கவின் ஆர் வீதி,"தேம்தாம்" என்று, அரங்கு ஏறிச் சேயிழையார் நடம் ஆடும் திரு ஐயாறே.
உரை

அனைத்து உலகங்களுக்கும்‌ அரசன்‌ ஆனவன்‌. விண்ணவர்களுக்கும்‌ மண்ணவர்களுக்கும்‌ நல்ல நெறியைக்‌ காட்டும்‌ வள்ளல்‌ சிவபெருமான்‌. மணம்‌ கமழும்‌ கொன்றை மாலையைச்‌ சடையில்‌ அணிந்த புண்ணிய வடிவினன்‌. இத்தகையப்‌ பெருமைகளை உடையவன்‌ சிவபெருமான்‌ ஆவான்‌. இப்பெருமான்‌ எழுந்தருளி இருக்கும்‌ கோயில்‌ திருவையாறு ஆகும்‌. இத்தலத்தில்‌ பெண்கள்‌ காந்தாரப்‌ பண்‌ அமைந்த இசையைப்‌ பாடுகின்றனர்‌. வீதிகளில்‌ அமைந்திருக்கும்‌ அழகிய அரங்களில்‌ ஏறி, அணிகலன்களை அணிந்திருக்கும்‌ இளம்‌ பெண்கள்‌, “தேம்‌, தாம்” என்ற ஒலிக்குறிப்போடு இசைக்கு ஏற்றவாறு நடனம்‌ ஆடுகின்றனர்‌.

7

நின்றுலா நெடுவிசும்பில் நெருக்கிவரு புரமூன்றும் நீள்வாயம்புசென்றுலாம் படிதொட்ட சிலையாளி மலையாளி சேருங்கோயில்குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்குதென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளருந் திருவையாறே.
சொற்பிரிப்பு
நின்று உலாம் நெடுவிசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்புசென்று உலாம்படி தொட்ட சிலையாளி, மலையாளி, சேரும் கோயில்குன்று எலாம் குயில் கூவ, கொழும் பிரச மலர் பாய்ந்து வாசம் மல்குதென்றலார் அடி வருட, செழுங் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே.
உரை

நீண்ட வான வெளியில்‌ நின்று உலாவி தேவர்களை துன்புறுத்திய அசுரர்களின்‌ முப்புரங்களை, நீண்டதும்‌ கூரியதுமான அம்பு சென்று தைக்குமாறு கணை தொடுத்த வில்லாளன்‌. கயிலை மலையை உடையவன்‌. இத்தகு பெருமைகளை உடைய சிவபெருமான்‌ சேர்ந்து இருக்கும்‌ கோயில்‌ திருவையாறு ஆகும்‌. இத்தலத்தில்‌ உள்ள குன்றுகளில்‌ குயில்கள்‌ கூவுகின்றன. தென்றல்‌ காற்று தேன்‌ நிறைந்து மலர்களைத்‌ தீண்டி வருவதால்‌ மணம்‌ நிறைந்து வீசுகின்றது. அத்தென்றல்‌ அடிவருட அவற்றால்‌ செழுமையான கரும்புகள்‌ கண்‌ வளரும்‌ வளமுடையது திருவையாறாகும்‌.

8

அஞ்சாதே கயிலாய மலையெடுத்த அரக்கர்கோன் தலைகள்பத்தும்மஞ்சாடு தோள்நெரிய அடர்த்தவனுக் கருள்புரிந்த மைந்தர்கோயில்இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ இளமேதி இரிந்தங்கோடிச்செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல்படியுந் திருவையாறே.
சொற்பிரிப்பு
அஞ்சாதே கயிலாயமலை எடுத்த அரக்கர்கோன் தலைகள் பத்தும்,மஞ்சு ஆடு தோள், நெரிய அடர்த்து, அவனுக்கு அருள்புரிந்த மைந்தர் கோயில்இஞ்சாயல் இளந் தெங்கின் பழம் வீழ, இள மேதி இரிந்து அங்கு ஓடி,செஞ்சாலிக்கதிர் உழக்கி, செழுங் கமல வயல் படியும் திரு ஐயாறே.
உரை

கயிலை மலையை சிறிதும்‌ பயம்‌ இன்றி அரக்கர்‌ தலைவனான இராவணன்‌ எடுத்தான்‌. அவனுடைய பத்துத்‌ தலைகளையும்‌ வலிமையான தோள்களோடு நெரியுமாறு அடர்த்தவர்‌ சிவபெருமான்‌ ஆவார்‌. பின்னர்‌ அவனுக்கு அருள்‌ புரிந்தவரும்‌ அவரே. இப்பெருமான்‌ எழுந்தருளிய கோயில்‌ திருவையாறு ஆகும்‌. இத்தலத்தில்‌ இனிய நிழலைத்‌ தரும்‌ தென்னை மரத்தில்‌ இருந்து காய்ந்த நெற்று கீழே விழுகின்றது. அதனைக்‌ கண்டு பயந்த எருமையின்‌ கன்று, ஓடிச்‌ சென்று செந்நெற்கதிர்களைக்‌ காலால்‌ மிதித்துச்‌ செழுமையான தாமரை மலர்கள்‌ களையாகப்‌ பூத்திருக்கும்‌ வயல்களைச்‌ சென்றடைகின்றது. இத்தகு இயற்கை வளமுடையது திருவையாறு ஆகும்‌.

9

மேலோடி விசும்பணவி வியன்நிலத்தை மிகவகழ்ந்து மிக்குநாடும்மாலோடு நான்முகனு மறியாத வகைநின்றான் மன்னுங்கோயில்கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் குவிமுலையார் முகத்தினின்றுசேலோடச் சிலையாடச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே.
சொற்பிரிப்பு
மேல் ஓடி விசும்பு அணவி, வியன் நிலத்தை மிக அகழ்ந்து, மிக்கு நாடும்மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில்கோல் ஓட, கோல்வளையார் கூத்தாட, குவிமுலையார் முகத்தில் நின்றுசேல் ஓட, சிலை ஆட, சேயிழையார் நடம் ஆடும் திரு ஐயாறே.
உரை

நான்முகனும்‌, திருமாலும்‌ முறையே அன்னமாய்‌ மேலே பறந்து வானத்தில்‌ கலந்தும்‌, அகன்ற நிலத்தைப்‌ பன்றியாக ஆழமாக அகழ்ந்தும்‌ மிகுந்த முயற்சியோடு தேடியும்‌ அறியமுடியாதபடி ஓங்கி நின்றவர்‌ சிவபெருமான்‌ ஆவான்‌. இப்பெருமான்‌ நிலைபெற்று இருக்கும்‌ கோயில்‌ திருவையாறு ஆகும்‌. இத்தலத்தில்‌ தங்கள்‌ கைகளில்‌ அபிநயக்‌ கோலுடன்‌ கூத்தர்கள்‌ நிற்க, திரண்ட வளையல்களை அணிந்த மகளிர்‌ கூத்தாடுகின்றனர்‌. திரண்ட தனங்களை உடைய அம்மகளிர்களின்‌ கண்கள்‌ சேல்மீன்களைப்‌ போல்‌ அசைந்தாடுகின்றன. அவர்களின்‌ வில்‌ போன்ற புருவங்கள்‌ மேலும்‌ கீழுமாக அசைகின்றன. இவ்வாறு கலைகள்‌ மலிந்த ஊர்‌ திருவையாறு ஆகும்‌.

10

குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு சாக்கியருங் குணமொன்றில்லாமிண்டாடு மிண்டருரை கேளாதே யாளாமின் மேவித்தொண்டீர்எண்டோ ளர் முக்கண்ணர் எம்மீசர் இறைவரினி தமருங்கோயில்செண்டாடு புனல்பொன்னிச் செழுமணிகள் வந்தலைக்குந் திருவையாறே.
சொற்பிரிப்பு
குண்டாடு குற்று உடுக்கைச் சமணரொடு சாக்கியரும் குணம் ஒன்று இல்லாமிண்டாடும் மிண்டர் உரை கேளாதே, ஆள் ஆமின், மேவித் தொண்டீர்!எண்தோளர், முக்கண்ணர், எம் ஈசர், இறைவர், இனிது அமரும் கோயில்செண்டு ஆடு புனல் பொன்னிச் செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே.
உரை

இழி செயல்களில்‌ ஈடுபடுவோராய்‌, சிறிய ஆடையுடன்‌ திரியும்‌ சமணர்களும்‌, புத்தர்களும்‌ சொல்கின்ற நன்மைகள்‌ இல்லாத சொற்களையும்‌, வஞ்சனை உடைய உரைகளையும்‌ கேளாதீர்கள்‌. தொண்டர்களே! நீவிர்‌ எம்பெருமானுக்கு ஆட்படுவீர்களாக. எண்‌ தோள்களையும்‌ முக்கண்களையும்‌ உடைய எம்‌ ஈசனாகிய சிவபெருமான்‌ இனிதாக எழுந்தருளி இருக்கும்‌ கோயில்‌ திருவையாறாகும்‌. இத்தலத்தில்‌ பூக்களைச்‌ செண்டுகள்போல்‌ உருட்டி ஆட்டிக்‌ கொண்டு வரும்‌ நீர்நிறைந்த காவிரி ஆறு, செழுமையான மணிகளையும்‌ கரையில்‌ கொண்டு வந்து சேர்க்கின்றது.

11

அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம் பெருமானை அந்தண்காழிமன்னியசீர் மறைநாவன் வளர்ஞான சம்பந்தன் மருவுபாடல்இன்னிசையா லிவைபத்தும் இசையுங்கால் ஈசனடி யேத்துவார்கள்தன்னிசையோ டமருலகில் தவநெறிசென் றெய்துவார் தாழாதன்றே.
சொற்பிரிப்பு
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம் பெருமானை, அம் தண் காழிமன்னிய சீர் மறை நாவன் வளர் ஞான சம்பந்தன் மருவு பாடல்இன் இசையால் இவைபத்தும் இசையுங்கால், ஈசன் அடி ஏத்துவார்கள்தன் இசையோடு அமருலகில் தவநெறி சென்று எய்துவார், தாழாது அன்றே!
உரை

அன்னப்‌ பறவைகள்‌ நிறைந்த பொழில்கள்‌ சூழ்ந்து விளங்கும்‌ திருவையாற்றுப்‌ பெருமானை, அழகிய குளிர்ந்த சீகாழிப்‌ பதியில்‌ வாழ்பவனும்‌, சிறப்பு மிக்க வேதங்களில்‌ சிறந்து விளங்குபவனுமான ஞான சம்பந்தன்‌ போற்றிப்‌ பாடிய இனிமையான இசையால்‌ அமைந்துள்ள இந்தப்‌ பத்துப்‌ பாடல்களை ஓதி, ஈசனைப்‌ போற்றிப்‌ பாடுபவர்கள்‌ தவ நெறியின்‌ பயனாக அமரர்‌ உலகத்தைத்‌ தாமதியாது புகழுடன்‌ எய்துவர்‌.

திருச்சிற்றம்பலம்