திருமுறை 1 · 1.125 · 11

திருச்சிற்றம்பலம்

திருச்சிவபுரம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
வியாழக்குறிஞ்சி
தலம்
சிவபுரம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

கலைமலி யகலல்குல் அரிவைதன் உருவினன்முலைமலி தருதிரு வுருவம துடையவன்சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழஇலைநலி வினையிரு மையுமிடர் கெடுமே.
சொற்பிரிப்பு
கலை மலி அகல் அல்குல் அரிவைதன் உருவினன்,முலை மலிதரு திரு உருவம் அது உடையவன்,சிலை மலி மதில் பொதி சிவபுரநகர் தொழ,இலை, நலி வினை; இருமையும் இடர் கெடுமே.
உரை

மேகலை பொருந்திய அகன்ற அல்குலை உடையவள்‌ உமையம்மை. இறைவன்‌ அவளை இடப்பாகமாக பொருந்திய திருவினன்‌. அதனால்‌ ஒரு கூறில்‌ நகில்‌ தோன்றும்‌ திருவுருவை உடையவன்‌. அச்சிவபிரான்‌ கருங்கற்களால்‌ இயன்ற மதில்களால்‌ பொதியப்பட்டுள்ள சிவபுரநகரில்‌ எழுந்தருளியுள்ளான்‌. அந்நகரைத்‌ தொழுதால்‌ நம்மை நலியும்‌ வினைகள்‌ இல்லை. இருமையிலும்‌ இடர்‌ கெடும்‌.

2

படரொளி சடையினன் விடையினன் மதிலவைசுடரெரி கொளுவிய சிவனவன் உறைபதிதிடலிடு புனல்வயல் சிவபுரம் அடையநம்இடர்கெடும் உயர்கதி பெறுவது திடனே.
சொற்பிரிப்பு
படர் ஒளி சடையினன், விடையினன், மதில் அவைசுடர் எரி கொளுவிய சிவன் அவன், உறை பதிதிடல் இடு புனல் வயல் சிவபுரம் அடைய, நம்இடர் கெடும்; உயர்கதி பெறுவது திடனே.
உரை

சிவபிரான்‌ ஒளி‌ விரிந்த சடையினன்‌. விடை ஊர்தியன்‌. அசுரர்களின்‌ மும்மதில்களை எரிகொள்ளுமாறு. செய்தழித்தவன்: அவன்‌ உறையும்‌ பதியானது இடையிடையே திடலைக்‌ கொண்டதும்‌, நீர்‌ சூழ்ந்த வயல்களை உடையதும்‌ ஆகிய சிவபுரமாகும்‌. அதனை அடைந்து தொழுதால்‌ நம்‌ இடர்‌ கெடும்‌. உயர்கதி பெறுவது உறுதி,

3

வரைதிரி தரவர வகடழ லெழவருநுரைதரு கடல்விடம் நுகர்பவன் எழில்திகழ்திரைபொரு புனலரி சிலதடை சிவபுரம்உரைதரும் அடியவர் உயர்கதி யினரே.
சொற்பிரிப்பு
வரை திரிதர, அரவு அகடு அழல் எழ, வருநுரை தரு கடல் விடம் நுகர்பவன்—எழில் திகழ்திரை பொரு புனல் அரிசில் அது அடை சிவபுரம்உரை தரும் அடியவர் உயர்கதியினரே.
உரை

மந்தரமலை மத்தாகச்‌ சுழன்றது. அதில்‌ கயிறாகச்‌ சுற்றியது வாசுகி என்னும்‌ பாம்பு. அதன்‌ வயிற்றிலிருந்து அழலாகத்‌ தோன்றி நுரையுடன்‌ வெளிப்பட்டது விடம்‌. ஆலகாலம்‌ என்னும்‌ அந்நஞ்சினை உண்டவன்‌ சிவபெருமான்‌. அவன்‌ விளங்கும்‌ தலம்‌ சிவபுரம்‌ ஆகும்‌. அழகு விளங்கக்‌ கரையில்‌ மோதும்‌ நீர்‌ நிறைந்த அரிசிலாற்றங்கரையில்‌ விளங்குவது. சிவபுரம்‌ ஆகும்‌. அதன்‌ பெயரைக்‌ கூறுபவர்‌ உயர்கதிகளைப்‌ பெறுவர்‌.

4

துணிவுடை யவர்சுடு பொடியினர் உடலடுபிணியடை விலர்பிற வியுமற விசிறுவர்தணிவுடை யவர்பயில் சிவபுரம் மருவியமணிமிட றனதடி இணைதொழு மவரே.
சொற்பிரிப்பு
துணிவு உடையவர்; சுடுபொடியினர்; உடல் அடுபிணி அடைவு இலர்; பிறவியும் அற விசிறுவர்திணிவு உடையவர் பயில் சிவபுரம் மருவியமணிமிடறனது அடி இணை தொழுமவரே.
உரை

அடக்கமுடைய மக்கள்‌ வாழுமிடம்‌ சிவபுரம்‌ ஆகும்‌. அங்கு எழுந்தருளியவன்‌ நீல மணி போலும்‌ மிடற்றினை உடைய சிவபிரான்‌. அவன்‌ திருவடிகளை வணங்குவோர்‌ துணிபுடையவர்‌ ஆவார்‌. திருநீறு பூசும்‌ அடியவர்‌ ஆவர்‌. உடலை வருத்தும்‌ பிணிகளை அடையார். பிறவியும்‌ நீங்கப்‌ பெறுவர்‌.

5

மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்நிறையவன் உமையவள் மகிழ்நடம் நவில்பவன்இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்உறைவென உடையவன் எமையுடை யவனே.
சொற்பிரிப்பு
மறையவன், மதியவன், மலையவன், நிலையவன்,நிறையவன், உமையவள் மகிழ் நடம் நவில்பவன்,இறையவன்—இமையவர் பணிகொடு சிவபுரம்உறைவு என உடையவன், எமை உடையவனே.
உரை

தேவர்கள்‌ செய்யும்‌ பணிவிடைகளை ஏற்றவன்‌ சிவபிரான்‌. சிவபுரத்தைத்‌ தனது உறைவிடமாகக்‌ கொண்டு, எம்மை அடிமையாகக்‌ கொண்டவன்‌. அவன்‌ வேதங்களை அருளியவன்‌. பிறை சூடியவன்‌. கயிலை மலையைத்‌ தனது இடமாகக்‌ கொண்டவன்‌. நிலைபேறு உடையவன்‌. எங்கும்‌ நிறைந்தவன்‌. உமையம்மை கண்டு மகிழும்‌ நடனத்தைப்‌ புரிபவன்‌. எல்லோருக்கும்‌ தலைவன்‌ ஆவான்‌.

6

முதிர்சடை யிளமதி நதிபுனல் பதிவுசெய்ததிர்கழல் ஒலிசெய வருநடம் நவில்பவன்எதிர்பவர் புரமெய்த இணையிலி யணைபதிசதிர்பெறும் உளமுடை யவர்சிவ புரமே.
சொற்பிரிப்பு
முதிர் சடை இளமதி நதிபுனல் பதிவுசெய்து,அதிர்கழல் ஒலிசெய, அருநடம் நவில்பவன்;எதிர்பவர் புரம் எய்த இணை இலி; அணை பதிசதிர் பெறும் உளம் உடையவர் சிவபுரமே.
உரை

சிவபெருமான்‌ தனது முதிர்ந்த சடையின்மீது இளம்பிறை; கங்கை நதி ஆகியவற்றைப்‌ பொருந்த அணிந்தவன்‌. காலில்‌ அசையும்‌ கழல்களை அணிந்தவன்‌. அவை ஒலிக்குமாறு அரிய நடனம்‌ புரிபவன்‌. தன்னை எதிர்த்த அசுரர்களின்‌ முப்புரங்களை எய்து அழித்த ஒப்பற்றவன்‌. இந்தச்‌ சிவபிரான்‌ எழுந்தருளிய தலம்‌, திறமையான மனம்‌ உடைய அடியவர்கள்‌ வாழும்‌ சிவபுரம்‌ ஆகும்‌.

7

வடிவுடை மலைமகள் சலமக ளுடனமர்பொடிபடும் உழையதள் பொலிதிரு வுருவினன்செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம்அடைதரும் அடியவர் அருவினை யிலரே.
சொற்பிரிப்பு
வடிவு உடை மலைமகள் சலமகள் உடன் அமர்பொடிபடும் உழை அதள் பொலி திரு உருவினன்,செடி படு பலி திரி சிவன், உறை சிவபுரம்அடைதரும் அடியவர் அருவினை இலரே.
உரை

அழகிய வடிவினைக்‌ கொண்டவள்‌ மலை மகன்‌. அவளுடன்‌ நீர்மகளாகிய கங்கையையும்‌ உடனாகக்‌ கொண்டவன்‌. புள்ளி பொருந்திய மானினது தோல்‌ விளங்கும்‌ அழகிய வடிவினை உடையவன்‌. முடை நாற்றம்‌ வீசம்‌ மண்டையோட்டில்‌ பிச்சை ஏற்றுத்‌ திரிபவன்‌. அத்தகைய சிவபிரான்‌ உறையும்‌ சிவபுரத்தை அடையும்‌ அடியவர்கள்‌ நீங்குதற்குரிய வினைகள்‌ இலர்‌ ஆவர்‌.

8

கரமிரு பதுமுடி யொருபதும் உடையவன்உரம்நெரி தரவரை யடர்வுசெய் தவனுறைபரனென அடியவர் பணிதரு சிவபுரநகரது புகுதல்நம் உயர்கதி யதுவே.
சொற்பிரிப்பு
கரம் இருபதும் முடி ஒருபதும் உடையவன்உரம் நெரிதர, வரை அடர்வு செய்தவன், உறைபரன் என அடியவர் பணிதரு, சிவபுர-நகர் அது புகுதல் நம் உயர்கதி அதுவே.
உரை

இருபது கரங்களையும்‌, பத்துத்‌ தலைகளையும்‌ உடையவன்‌ இராவணன்‌. அவன்‌ மார்பு நெரியுமாறு கயிலை மலையில்‌ அடர்த்தருளியவன்‌ சிவபிரான்‌. அவன்‌ உறைவது சிவபுரம்‌. “மேலான பரம்பொருள்‌ இவனே ஆவான்‌” என அடியவர்‌ வழிபாடு செய்வதும்‌ இவனே ஆவான்‌. அச்சிவபுரத்தை அடைதல்‌ நமக்கு உயர்கதியைத்‌ தரும்‌.

9

அன்றிய லுருவுகொள் அரியய னெனுமவர்சென்றள விடலரி யவனுறை சிவபுரம்என்றிரு பொழுதுமுன் வழிபடு மவர்துயர்ஒன்றிலர் புகழொடும் உடையரிவ் வுலகே.
சொற்பிரிப்பு
அன்று இயல் உருவு கொள் அரி அயன் எனுமவர்சென்று அளவிடல் அரியவன் உறை சிவபுரம்”என்று இரு பொழுதும் முன் வழிபடுமவர் துயர்ஒன்று இலர்; புகழொடும் உடையர், இவ் உலகே.
உரை

தங்கள்‌ செயலுக்கு மாறுபட்ட தன்மையோடு கூடிய பன்றி, அன்னம்‌ ஆகிய வடிவங்களைக்‌ கொண்டனர்‌ திருமால்‌ மற்றும்‌ பிரமன்‌ ஆகியோர்‌. அவர்கள்‌ சென்று அளவிடுதற்கு அரியவனாய்‌ ஓங்கி நின்றவன்‌ சிவபிரான்‌. அவன்‌ உறையுமிடம்‌ சிவபுரம்‌ என்று இரு பொழுதுகளிலும்‌ நினைந்து வழிபடும்‌ அடியவர்கள்‌ ஒரு துன்பமும்‌ இலராவர்‌. இவ்வுலகில்‌ புகழோடும்‌ பொருந்தி வாழ்வர்‌.

10

புத்தரொ டமணர்கள் அறவுரை புறவுரைவித்தக மொழிகில விடையுடை யடிகள்தம்இத்தவம் முயல்வுறில் இறைவன சிவபுரம்மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே.
சொற்பிரிப்பு
புத்தரொடு அமணர்கள் அற உரை புற உரைவித்தகம் ஒழிகில; விடை உடை அடிகள் தம்இத் தவம் முயல்வு உறில், இறைவன சிவபுரம்மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே.
உரை

புத்தர்களும்‌, சமணர்களும்‌ கூறுவன அறவுரைக்குப்‌ புறம்பான உரைகளாகும்‌. அவை அறிவுடைமைக்கு ஏற்ப மொழியாதவை. அவற்றை விடுக. விடையூர்தியை உடைய தலைவன்‌ சிவபெருமான்‌.அவனை நோக்கச்‌ செய்யும்‌ தவத்தை முயற்சியோடு மேற்கொள்ளுங்கள்‌. அவ்விறைவனது சிவபுரத்தைச்‌ சென்றடைந்து வழிபடுதல்‌ சிறந்த குணங்களை உங்கட்குத்‌ தரும்‌.

11

புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம்பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறைஎந்தையை யுரைசெய்த இசைமொழி பவர்வினைசிந்திமு னுறவுயர் கதிபெறு வர்களே.
சொற்பிரிப்பு
புந்தியர் மறை நவில் புகலி மன் ஞானசம்-பந்தன தமிழ்கொடு, சிவபுரநகர் உறைஎந்தையை உரைசெய்த இசை மொழிபவர், வினைசிந்தி முன் உற, உயர்கதி பெறுவர்களே.
உரை

அறிவுடையவர்கள்‌ ஓதும்‌ வேதங்களை ஓதி உணர்ந்த புகலி மன்னன்‌ ஞானசம்பந்தன்‌. இவன் தமிழைக்‌ கொண்டு சிவபுர நகரில்‌ உறையும்‌ எந்தையைப்‌ போற்றி உரைசெய்த இசைமாலையாகும்‌. இதுவே இப்பதிகத்தை இசையோடு ஓதி வழிபடுபவர்‌ வினைகள்‌ நீங்கும்‌. உயர்கதுியும்‌ பெறுவார்கள்‌.

திருச்சிற்றம்பலம்