திருமுறை 1 · 1.124 · 11

திருச்சிற்றம்பலம்

திருவீழிமிழலை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
வியாழக்குறிஞ்சி
தலம்
வீழிமிழலை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்மலர்மலி குழலுமை தனையிடம் மகிழ்பவர்நலம்மலி யுருவுடை யவர்நகர் மிகுபுகழ்நிலமலி மிழலையை நினையவ லவரே.
சொற்பிரிப்பு
அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர்மலர் மலி குழல் உமைதனை இடம் மகிழ்பவர்,நலம் மலி உரு உடையவர், நகர் மிகு புகழ்நிலம் மலி மிழலையை நினைய வல்லவரே.
உரை

அழகு மிகுந்த வடிவினராகிய சிவபெருமான்‌, மலர்‌ நிறைந்த கூந்தலை உடைய ‌ உமையம்மையை தனது இடது பக்கத்தில்‌ கொண்டு மகழ்ந்திருப்பவர்‌. இப்பெருமான்‌ எழுந்தரு னியுள்ள நகரமானது, பூமியில்‌ மிகுந்த புகழுடைய திருவீழிமிழலை ஆகும்‌. இத்தலத்தை நினைந்து வணங்க வல்லவர்கள்‌, மலர்மீது வீற்றிருக்கும்‌ திருமகள்‌ அம்சமாக, உலகில்‌ செல்வம்‌ மிகுந்து விளங்குவார்கள்‌.

2

இருநில மிதன்மிசை யெழில்பெறும் உருவினர்கருமலி தருமிகு புவிமுதல் உலகினில்இருளறு மதியினர் இமையவர் தொழுதெழுநிருபமன் மிழலையை நினையவ லவரே.
சொற்பிரிப்பு
இரு நிலம் இதன் மிசை எழில் பெறும் உருவினர்கரு மலிதரு மிகு புவி முதல் உலகினில்இருள் அறு மதியினர், இமையவர் தொழுது எழுநிருபமன், மிழலையை நினைய வல்லவரே.
உரை

எண்ணற்ற பிறப்புக்கள்‌ கொண்ட இந்தப்‌ பூமியிலும்‌, மற்ற அண்டங்களில்‌ உள்ள உலகங்களிலும்‌, ஆணவத்தால்‌ வரும்‌ மல இருளைச்‌, சந்திரனின்‌ ஒளியைப்போல்‌ மல நீக்கம்‌ செய்பவர்‌ சிவபெருமான்‌ ஆகும்‌. ஒப்பற்ற இப்பெருமானை ஆணவ மலம்‌ நீக்கப்‌ பெற்ற ஞானிகளும்‌ தேவர்களும்‌ தொழுது எழுகின்றனர்‌. இப்பெருமான்‌ எழுந்தருளி இருக்கும்‌ திருவீழிமிழலையை நினைந்து வணங்க வல்லவர்கள்‌ பரந்த இவ்வுலகில்‌ அழகிய உருவத்துடன்‌ விளங்குவார்கள்‌. எழில்-அழகு கரு மலி தரு மிகு புவி- பிறவி மிக்க இப்பூமி இருள்-ஆணவம் நிருபமன்‌ - உவமம்‌ இல்லாதவர்‌, ஒப்பிலி என்பதாம்‌

3

கலைமகள் தலைமகன் இவனென வருபவர்அலைமலி தருபுனல் அரவொடு நகுதலைஇலைமலி யிதழியு மிசைதரு சடையினர்நிலைமலி மிழலையை நினையவ லவரே.
சொற்பிரிப்பு
“கலைமகள் தலைமகன், இவன்” என வருபவர்அலை மலிதரு புனல், அரவொடு, நகுதலை,இலை மலி இதழியும், இசைதரு சடையினர்நிலை மலி மிழலையை நினைய வல்லவரே.
உரை

அலைகள்‌ நிறைந்த கங்கை நதி, பாம்பு, ஒளிவிடும்‌ மண்டை ஓடு, வில்‌வ இலை மிகுதியான கொன்றை மலர்‌ ஆகியன பொருந்திய சடையை உடையவர்‌ சிவபெருமானாகும்.‌ இப்பெருமான் நிலை பெற்று விளங்கும்‌ திருவீழிமிழலைய நினைந்து வணங்க வல்லவர்கள் கல்விநலம்‌ சிறப்பாக வாய்க்கப்‌ பெற்று, “கலைமகளின்‌ தலைமகன் இவன்” என்று ஒவ்வொருவரும் சொல்லத்தக்க தகுதியைப் பெறுவர்.

4

மாடமர் சனமகிழ் தருமனம் உடையவர்காடமர் கழுதுக ளவைமுழ வொடுமிசைபாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில்நீடமர் மிழலையை நினையவ லவரே.
சொற்பிரிப்பு
மாடு அமர் சனம் மகிழ்தரு மனம் உடையவர்காடு அமர் கழுதுகள் அவை முழவொடும் இசைபாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில்நீடு அமர் மிழலையை நினைய வல்லவரே.
உரை

சுடுகாட்டில்‌, பேய்கள்‌ இரைச்சலிடவும்‌, முழவு முதலிய கருவிகள்‌ ஒலிக்கவும்‌ இசை பாடி, நடனம்‌ ஆடுவதை விரும்புகின்றவர்‌ சிவபெருமான்‌ ஆகும்‌. இனிமையாக எழுந்தருளியிருப்பதும்‌, இவ்வுலகில்‌ பெருமையோடு நீண்ட காலமாக விளங்கும்‌ தலம்‌ திருவீழிமிழலை ஆகும்‌. இதனை நினைந்து வணங்க வல்லவர்கள் அன்புடைய மனமுடையவர்களாகவும்‌, அருகில்‌ விரும்பி உறையும்‌மகிழும் மனம்‌ உடையவராகவும்‌, சுற்றத்தாருடன்‌ நீண்ட காலம்‌ மகிழ்வுடன்‌ வாழ்வர்‌.

5

புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனைஇகழ்வுசெய் தவனுடை யெழின்மறை வழிவளர்முகமது சிதைதர முனிவுசெய் தவன்மிகுநிகழ்தரு மிழலையை நினையவ லவரே.
சொற்பிரிப்பு
புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனைஇகழ்வு செய்தவன் உடை எழில் மறைவழி வளர்முகம் அது சிதைதர முனிவு செய்தவன் மிகுநிகழ்தரு மிழலையை நினைய வல்லவரே.
உரை

சுருண்ட கூந்தலை உடைய உமையம்மையைப்‌ பிரமன்‌ இகழ்வு செய்தான்‌. அழகிய வேதஞ்‌ சொல்லும்‌ வாயை உடைய பிரமனுடைய தலையைச்‌ சதைக்கச்‌ செய்தவர்‌ சிவபெருமானாகும்‌. இப்பெருமான்‌ எழுந்தருளியிருக்கும்‌ திருவீழிமிழலையை நினைந்து வணங்க வல்லவர்கள்‌, புகழ்‌ பெற்ற மகளைப்‌ பொருந்துவர்‌.

6

அன்றினர் அரியென வருபவர் அரிதினில்ஒன்றிய திரிபுரம் ஒருநொடி யினிலெரிசென்றுகொள் வகைசிறு முறுவல்கொ டொளிபெறநின்றவன் மிழலையை நினையவ லவரே.
சொற்பிரிப்பு
அன்றினர் அரி என வருபவர்—அரிதினில்ஒன்றிய திரிபுரம் ஒருநொடியினில் எரிசென்று கொள் வகை சிறு முறுவல்கொடு ஒளி பெறநின்றவன் மிழலையை நினைய வல்லவரே.
உரை

தவம்‌ செய்து அரிதாகப்‌ பெற்ற ஒன்றுபட்ட முப்புரங்களைத்‌ தேவர்களின்‌ வேண்டுகோளின்படி, ஒரு நொடியில்‌ எரிந்து சாம்பலாகிப்‌ போகுமாறு, புன்முறுவல்‌ செய்து, ஒளி பெற நின்று புகழ்‌ பெற்றவர்‌ சிவபெருமான்‌ ஆகும்‌. இப்பெருமான்‌ எழுந்தருளியுள்ள திருவீழிமிழலையை நினைந்து வணங்க வல்லவர்கள்‌, பகைவர்களாகிய யானைகட்குச்‌ சிங்கம்‌ போன்று கம்பீரமாக வலிமையோடு விளங்குவர்‌.

7

கரம்பயில் கொடையினர் கடிமல ரயனதொர்சிரம்பயில் வறவெறி சிவனுறை செழுநகர்வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறிநிரம்பினர் மிழலையை நினையவ லவரே.
சொற்பிரிப்பு
கரம் பயில் கொடையினர் கடிமலர் அயனது ஒர்சிரம் பயில்வு அற எறி சிவன் உறை செழு நகர்,வரம் பயில் கலைபல மறை முறை அறநெறிநிரம்பினர், மிழலையை நினைய வல்லவரே.
உரை

மலர்மேல்‌. வீற்றிருக்கும்‌ பிரமனின்‌ தலைகளில்‌ ஒன்றை அவனது உடலில் பொருந்தாவண்ணம்‌ கொய்தவர்‌ சிவபெருமான்‌ ஆகும்‌. இப்பெருமான்‌ எழுந்தருளி இருக்கும்‌ வளமையான நகரம்‌ திருவீழிமிழலை ஆகும்‌. இங்கு, மேன்மை மிக்கக்‌ கலைகள் பலவற்றோடு, வேதநெறிகளையும்‌, அறநெறிகளையும்‌ முறையாகப்‌ பயின்ற சான்றோர்கள் நிரம்பி உள்ளனர்‌. இத்தலத்தை நினைந்‌து வணங்க வல்லவர்கள், பலகாலம்‌ இடைவிடாது கொடுக்கும்‌ வள்ளல்‌ தன்மை உடைய உள்ளத்தைப்‌ பெறுவர்‌.

8

ஒருக்கிய வுணர்வினொ டொளிநெறி செலுமவர்அரக்கன்நன் மணிமுடி யொருபதும் இருபதுகரக்கன நெரிதர மலரடி விரல்கொடுநெருக்கினன் மிழலையை நினையவ லவரே.
சொற்பிரிப்பு
ஒருக்கிய உணர்வினொடு ஒளிநெறி செலுமவர்அரக்கன் நல்மணி முடி ஒருபதும் இருபது-கரக்கனம் நெரிதர, மலர் அடிவிரல் கொடுநெருக்கினன் மிழலையை நினைய வல்லவரே.
உரை

அரக்கனான இராவணனின்‌ கிரீடம்‌ அணிந்த பத்துத்‌ தலைகளும்‌, இருபது தோள்களும்‌ நெரியுமாறு, தனது மலர்‌ போன்ற திருவடி விரலால்‌ ஊன்றியவர்‌ சிவபெருமான்‌ ஆகும்‌. இப்பெருமான்‌ எழுந்தருளியிருக்கும்‌ திருவீழிமிழலையை நினைந்து வணங்க வல்லவர்கள்‌ ஒன்றுபட்ட சிந்தனை உடையவர்களாய்‌ ஒளி நெறியாகிய ஞான மார்க்கத்துல்‌ திகழ்பவர்‌ ஆவார்கள்‌.

9

அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்கடிமலர் அயனரி கருதரு வகைதழல்வடிவுரு வியல்பினொ டுலகுகள் நிறைதருநெடியவன் மிழலையை நினையவ லவரே.
சொற்பிரிப்பு
அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்கடிமலர் அயன் அரி கருத(அ)ரு வகை தழல்-வடிவு உரு இயல் பினொடு உலகுகள் நிறைதருநெடியவன் மிழலையை நினைய வல்லவரே.
உரை

மிக்க தாமரை மலர்மேல்‌ வீற்றிருக்கும்‌ பிரமனும்‌, திருமாலும்‌ நினைதற்கு அரியா வகையில்‌, சிவபெருமான்‌ சோதி வடிவினராக அனைத்து உலகமும்‌ நிறைந்தருளிய பெரியோனாக விளங்கினார்‌. இப்பெருமான்‌ எழுந்தருளியிருக்கும்‌ திருவீழிமிழலையை நினைந்து வணங்க வல்லவர்கள்‌, சிவனடியார்கள்‌ பலர்‌, தங்களைச்‌ சூழ உலகில்‌ இனிது வாழ்வர்‌.

10

மன்மத னெனவொளி பெறுமவர் மருதமர்வன்மலர் துவருடை யவர்களும் மதியிலர்துன்மதி யமணர்கள் தொடர்வரு மிகுபுகழ்நின்மலன் மிழலையை நினையவ லவரே.
சொற்பிரிப்பு
மன்மதன் என ஒளி பெறுமவர் மருது அமர்வன் மலர் துவர் உடையவர்களும், மதி இலர்துன்மதி அமணர்கள், தொடர்வு அரு மிகு புகழ்நின்மலன் மிழலையை நினைய வல்லவரே.
உரை

மருத மரத்தின்‌ வலிய மலரால்‌ ஊட்டப்‌ பெற்ற காவி ஆடை உடுத்திய புத்தர்கள்‌ மதியற்றவர்கள்‌. சமணர்கள்‌ துன்மதியாளர்கள்‌. இவர்களால்‌ தொடர்பு கொள்ள முடியாத அரியவர்‌ சிவபெருமான்‌ ஆகும்‌. மிகுந்த புகழுடைய இப்பெருமான்‌ எழுந்தருளியிருக்கும் திருவீழிமிழலையை நினைந்து வணங்க வல்லவர்கள்‌ மன்மதனைப்‌ போன்று ஒளிவீசுகின்ற அழகினைப்‌ பெறுவார்கள்‌.

11

நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள்வித்தக மறைமலி தமிழ்விர கனமொழிபத்தியில் வருவன பத்திவை பயில்வொடுகற்றுவல் லவருல கினிலடி யவரே.
சொற்பிரிப்பு
நித்திலன் மிழலையை, நிகர் இலி புகலியுள்வித்தகமறை மலி தமிழ்விரகன மொழிபத்தியில் வருவன பத்து இவை பயில்வொடுகற்று வல்லவர் உலகினில் அடியவரே.
உரை

நிகரற்ற புகலிப்‌ பதியில்‌ வேதங்களிலும்‌, தமிழ்‌ இலக்கண இலக்கியங்களிலும்‌ வல்ல தமிழ்‌ விரகனான ஞான சம்பந்தன்‌, முத்தைப்‌ போன்று ஒளிவீசும்‌ சிவபெருமான்‌ எழுந்தருளியிருக்கும்‌ திருவீழிமிழலையைப்‌ போற்றிப்‌ பாடினார்‌. பேரன்பு நிறைந்து பக்தியுடன்‌ அருளிய இத்திருப்பதிகத்தை மனதில்‌ பதித்து ஓதவல்லவர்கள்‌ உலகத்தில்‌ சிவனடியார்கள்‌ ஆவார்கள்‌.

திருச்சிற்றம்பலம்