திருமுறை 1 · 1.123 · 11

திருச்சிற்றம்பலம்

திருவலிவலம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
வியாழக்குறிஞ்சி
தலம்
வலிவலம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்ஏவியல் கணைபிணை எதிர்விழி யுமையவள்மேவிய திருவுரு வுடையவன் விரைமலர்மாவியல் பொழில்வலி வலமுறை யிறையே.
சொற்பிரிப்பு
பூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர் நுதல்;ஏ இயல் கணை, பிணை, எதிர் விழி; உமையவள்மேவிய திரு உரு உடையவன் விரைமலர்மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே.
உரை

உமையம்மை மலர்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவன்‌. வரிந்து கட்டப்பெற்ற வில்லைப்‌ போன்ற நெற்றியை உடையவள்‌. செலுத்துதற்கு உரிய அம்பினைப்‌ போலவும்‌, மருட்சியை உடைய மானைப்‌ போலவும்‌ கண்களைப்‌ பெற்றவள்‌ உமையம்மை. இவ்வம்மையோடு கூடிய திருமேனியை உடையவர்‌ சிவபெருமான்‌ ஆவார்‌. இப்பெருமான்‌ மணம்‌ கமழும்‌ மலர்களையும்‌ அவற்றில்‌ தேன்‌ உண்ணும்‌ வண்டுகளையும்‌ உடைய பொழில்‌ சூழ்ந்த திருவலிவலத்தில்‌ உறைகின்றார்‌.

2

இட்டம தமர்பொடி யிசைதலின் நசைபெறுபட்டவிர் பவளநல் மணியென அணிபெறுவிட்டொளிர் திருவுரு வுடையவன் விரைமலர்மட்டமர் பொழில்வலி வலமுறை யிறையே.
சொற்பிரிப்பு
இட்டம் அது அமர் பொடி இசைதலின், நசை பெறுபட்டு அவிர் பவள நல்மணி என அணி பெறுவிட்டு ஒளிர் திரு உரு உடையவன் விரைமலர்மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே.
உரை

சிவபெருமான்‌ தனது திருமேனியில்‌ விருப்பத்துடன்‌ திருநீற்றை அணிந்துள்ளார்‌. விரும்பி அணிகின்ற பட்டோடு, விளங்குகின்ற பவள மணி போன்று ஒளிவிடும்‌ அழகிய ஒளிவீசுகின்ற திருமேனியை உடையவர்‌. இப்பெருமான்‌ மணம்‌ கமழும்‌ மலர்களில்‌ தேனுடன்‌ விளங்கும்‌ பொழில்‌ சூழ்ந்த திருவலிவலத்தில்‌ உறைந்திருக்கின்றார்‌.

3

உருமலி கடல்கடை வுழியுல கமருயிர்வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணிகருமணி நிகர்களம் உடையவன் மிடைதருமருமலி பொழில்வலி வலமுறை யிறையே.
சொற்பிரிப்பு
உரு மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர்வெரு உறு வகை எழு விடம், வெளிமலை அணிகருமணி நிகர் களம் உடையவன் மிடைதருமரு மலி பொழில் வலிவலம் உறை இறையே.
உரை

திருப்பாற்கடலைக்‌ கடைந்தபோது, தேவர்களும்‌ உலக உயிர்களும்‌ அஞ்சுமாறு கடலிலிருந்து விடம்‌ எழுந்தது. அந்த விடத்தை சிவபெருமான்‌ விழுங்கினான்‌. அதனால்‌ அவனது கண்டம்‌ நீலநிறமாக மாறியது. அவர்‌ தனது திருமேனி முழுவதும்‌ திருநீறு பூசி உள்ளதால் பட்டோடு விளங்கும்‌ பவள மணி போல ஒளிவீசும்‌ திருமேனியை உடையவனாகத்‌ தோன்றுகின்றான்‌.இவர்‌ மணம்‌ கமழும்‌ பொழில்கள்‌ நிறைந்துள்ள திருவலிவலத்தில்‌ உறைந்திருக்கின்றார்‌. வெள்ளிமலை நீறு தோய்ந்த திருமேனிக்கும்‌ நீலமணி அவன்‌ கழுத்தில்‌ விளங்கும்‌ கறைக்கும்‌ உவமையாக அமைந்துள்ளது.

4

அனல்நிகர் சடையழல் அவியுற வெனவருபுனல்நிகழ் வதுமதி நனைபொறி அரவமும்எனநினை வொடுவரு மிதுமெல முடிமிசைமனமுடை யவர்வலி வலமுறை யிறையே.
சொற்பிரிப்பு
அனல் நிகர் சடை அழல் அவி உற என வருபுனல் நிகழ்வதும், மதி நனை பொறி அரவமும்என நினைவொடு வரும் இதும், மெல முடிமிசைமனம் உடையவர் வலிவலம் உறை இறையே.
உரை

செந்தழல்‌ போன்ற சடையின்‌ தீயை அவிக்க வருவது போன்ற தோற்றமுடைய கங்கையைக்‌ கொண்டிருப்பவர்‌ சிவபெருமான்‌. அக்கங்கையில்‌ நனைந்த புள்ளிகளை உடைய அரவமானது, பிறை மதியை விழுங்குவது போன்ற நினைப்புடன்‌ உள்ளது. இந்தக்‌ கோலத்துடன்‌ விளங்கும்‌ திருமுடியை உடையவர்‌ சிவபெருமானே ஆகும்‌ என்ற நினைப்புடன்‌ அடியவர்கள்‌ வாழும்‌ சிறப்பினை உடையது திருவலிவலம்‌ என்ற தலம்‌.

5

பிடியதன் உருவுமை கொளமிகு கரியதுவடிகொடு தனதடி வழிபடு மவரிடர்கடிகண பதிவர அருளினன் மிகுகொடைவடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
சொற்பிரிப்பு
பிடி அதன் உரு உமை கொள, மிகு கரி அதுவடிகொடு, தனது அடி வழிபடுமவர் இடர்கடி, கணபதி வர அருளினன்—மிகு கொடைவடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.
உரை

உமாதேவி, பெண்‌ யானை உருவம்‌ கொள்ள, சிவபெருமான்‌ ஆண்‌ யானை உருவம்‌ கொண்டார்‌. இவர்களுக்குத்‌ தம்மை வழிபடும்‌ அடியவர்களின்‌ துன்பத்தைப்‌ போக்குவதற்கென்றே தெய்வத்தன்மை உடைய கணபதியைத்‌ தோற்றுவித்து அருளினர்‌. மிகுந்த வள்ளல்‌ தன்மையே நமக்கு அழகைத்‌ தரும்‌ என நினைக்கும்‌ வள்ளற்‌ பெருமக்கள்‌ வாழும்‌ திருவலிவலத்தில்‌ இப்பெருமான்‌ உறைந்திருக்கின்றார்‌.

6

தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிகவிரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்துநரைதிரை கெடுதகை யதுவரு ளினனெழில்வரைதிகழ் மதில்வலி வலமுறை யிறையே.
சொற்பிரிப்பு
தரை முதல் உலகினில் உயிர் புணர் தகை மிக,விரை மலி குழல் உமையொடு விரவு அது செய்து,நரை திரை கெடு தகை அது அருளினன் எழில்வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே.
உரை

மண்‌ முதல்‌ அனைத்து அண்டங்களில்‌ வாழும்‌ உயிர்கள்‌ யாவும்‌ ஆணும்‌ பெண்ணுமாய்க்கூடி போகம்‌ நுகரத்‌ தாம்‌ போகியாய்‌ இருந்து மணம்‌ மிக்க கூந்தலை உடைய உமாதேவியோடு பொருந்துகின்றான்‌ சிவபெருமான்‌. தன்னை வழிபடும்‌ அடியவர்களுக்கு நரை, திரை, மூப்பு வராதவாறு என்றும்‌ இளமையோடு இருக்க அருளுகின்றார்‌. இப்பெருமான்‌ அழகிய மலை போன்றுத்‌ திகழும்‌ மதில்‌ சூழ்ந்த திருவலிவலத்தில்‌ உறைந்திருக்கின்றார்‌.

7

நலிதரு தரைவர நடைவரும் இடையவர்பொலிதரு மடவர லியர்மனை யதுபுகுபலிகொள வருபவன் எழில்மிகு தொழில்வளர்வலிவரு மதில்வலி வலமுறை யிறையே.
சொற்பிரிப்பு
நலிதரு தரை வர நடை வரும் இடையவர்பொலிதரு மடவரலியர் மனை அது புகுபலி கொள வருபவன் எழில் மிகு தொழில் வளர்வலி வரு மதில் வலிவலம் உறை இறையே.
உரை

தரையில்‌ நடந்து செல்வதற்கே அஞ்சுகின்ற மென்மையான பாதங்களையும்‌, அசைகின்ற இடையையும்‌ உடைய அழகிய தாருகாவன மகளிர்‌ உறையும்‌ வீடுகள்‌ தோறும்‌ சென்று பலியேற்க பிட்சாடனராய்‌ வருபவர்‌ சிவபெருமான்‌ ஆகும்‌. இப்பெருமான்‌ எழில்‌ மிகுந்ததும்‌, கலை முதலான தொழில்கள்‌ வளர்வதும்‌, வலிமை மிகுந்ததுமான மதில்களால்‌ சூழப்பட்டதுமான வலிவலத்தில்‌ உறைந்திருக்கின்றார்‌.

8

இரவணன் இருபது கரமெழில் மலைதனின்இரவண நினைதர அவன்முடி பொடிசெய்துஇரவணம் அமர்பெயர் அருளின னகநெதிஇரவண நிகர்வலி வலமுறை யிறையே.
சொற்பிரிப்பு
இரவணன் இருபதுகரம் எழில் மலைதனின்இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து,இரவணம் அமர் பெயர் அருளினன்—நகநெதிஇரவு அண நிகர் வலிவலம் உறை இறையே.
உரை

இராவணன்‌ தனது இருபது கரங்களைக்‌ கொண்டு எழில்‌ மிகுந்த கயிலை மலையை நகர்த்தி வைக்க எண்ணி, அதனைப்‌ பெயர்த்தான்‌. அவனுடைய இருபது கரங்களும்‌ பத்துத்‌ தலைகளும்‌ பொடியாகுமாறு சிவபெருமான்‌ அவனை நெரித்தார்‌. அவன்‌ பணிந்து இரந்து வேண்டி நின்றபோது, அவனுக்கு அருள்‌ செய்து, இராவணன்‌ என்ற பெயரையும்‌ அருளிச்‌ செய்தார்‌. இப்பெருமான்‌ தன்னைப்‌ பணிந்து வழிபட்டு இரந்து நிற்கும்‌ அடியவர்களுக்குக்‌ கருணையாளனாக அருள்‌ செய்ய, திருவலிவலத்தில்‌ உறைந்திருக்கின்றார்‌.

9

தேனமர் தருமலர் அணைபவன் வலிமிகும்ஏனம தாய்நிலம் அகழ்அரி யடிமுடிதானணை யாவுரு வுடையவன் மிடைகொடிவானணை மதில்வலி வலமுறை யிறையே.
சொற்பிரிப்பு
தேன் அமர்தரு மலர் அணைபவன், வலி மிகும்ஏனம் அது ஆய் நிலம் அகழ் அரி, அடி முடிதான் அணையா உரு உடையவன்—மிடை கொடிவான் அணை மதில் வலிவலம் உறை இறையே.
உரை

தேன்‌ நிறைந்த தாமரை மலர்மேல்‌ உறைபவர்‌ நான்முகன்‌. வலிமை மிக்க பன்றி உருவினனாக நிலத்தை ஆழ்ந்து அகழ்ந்தவன்‌ திருமால்‌. இவர்கள்‌ இருவரும்‌ முடியையும்‌ அடியையும்‌ காண முடியாதவாறு ஓங்கி உயர்ந்த திருஉருவை உடையவர்‌ சிவபெருமான்‌ ஆகும்‌. இப்பெருமான்‌ வானத்தைச்‌ சென்றடையுமாறு, நெருக்கிக்‌ கட்டப்பட்ட கொடிகளை உடைய மதில்களால்‌ சூழப்பட்ட திருவலிவலத்தில்‌ உறைந்திருக்கின்றார்‌.

10

இலைமலி தரமிகு துவருடை யவர்களும்நிலைமையில் உணலுடை யவர்களும் நினைவதுதொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன்மலைமலி மதில்வலி வலமுறை யிறையே.
சொற்பிரிப்பு
இலை மலிதர மிகு துவர் உடையவர்களும்,நிலைமையில் உணல் உடையவர்களும், நினைவதுதொலை வலி நெடுமறை தொடர் வகை உருவினன்-மலை மலி மதில் வலிவலம் உறை இறையே.
உரை

வாயில்‌ வெற்றிலை மிகுந்து, துவர்‌ ஆடையை உடுத்த புத்தர்களும்‌, நின்று கொண்டு உண்ணும்‌ சமணர்களும்‌ நினைக்கும்‌ நினைப்புக்கள்‌ அழிந்துவிடுமாறு செய்தவர்‌ சிவபெருமான்‌. பெருமை மிக்க வேதங்கள்‌ தன்னைத்‌ தொடருமாறு செய்தருளிய உருவினனான சிவபெருமான்‌ மலைபோன்ற மதில்களால்‌ சூழப்பட்ட திருவலிவலத்தில்‌ உறைந்திருக்கின்றார்‌.

11

மன்னிய வலிவல நகருறை யிறைவனைஇன்னியல் கழுமல நகரிறை யெழில்மறைதன்னியல் கலைவல தமிழ்விர கனதுரைஉன்னிய வொருபதும் உயர்பொருள் தருமே.
சொற்பிரிப்பு
மன்னிய வலி வல நகர் உறை இறைவனை,இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறைதன் இயல் கலை வல தமிழ் விரகனது உரைஉன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே.
உரை

அழிய வேதங்களையும்‌, எல்லாவித கலைகளையும்‌ திருவருளால்‌ தன்னியலாலேயே உணர்ந்த தமிழ்‌ விரகன்‌, கழுமல நாதனான ஞானசம்பந்தன்‌ ஆகும்‌. இவர்‌ நிலைபேறுடைய வலிவலம்‌ நகரில்‌ உறையும்‌ சிவபெருமானை எண்ணிப் பாடிய ‌இத்திருப்பதிகப்‌ பாடல்கள்‌ பத்தும்‌, உயர்வான வீடுபேறாகிய செல்வத்தைத்‌ தரும்‌.

திருச்சிற்றம்பலம்