திருமுறை 1 · 1.122 · 11

திருச்சிற்றம்பலம்

திருவிடைமருதூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
வியாழக்குறிஞ்சி
தலம்
இடைமருதூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

விரிதரு புலியுரி விரவிய அரையினர்திரிதரும் எயிலவை புனைகணை யினிலெய்தஎரிதரு சடையினர் இடைமரு தடைவுனல்புரிதரு மன்னவர் புகழ்மிக வுளதே.
சொற்பிரிப்பு
விரிதரு புலிஉரி விரவிய அரையினர்,திரிதரும் எயில் அவை புனை கணையினில் எய்தஎரிதரு சடையினர், இடைமருது அடைவு உனல்புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே.
உரை

சிவபெருமான்‌ விரிந்த புலித்தோலை ஆடையாக இடையில்‌ கொண்டிருப்பவர்‌. வானில்‌ திரிந்துகொண்டு துன்பம்‌ செய்த முப்புரங்கள்‌ எரிந்து அழியுமாறு தனது ஆற்றல் மிகுந்த கணையை எய்தவர்‌. நெருப்புப்‌ போன்ற சிவந்த சடை முடியை உடையவர்‌. இப்பெருமான்‌ எழுந்தருளியிருக்கும்‌ இடை மருதூரை அடைய வேண்டும்‌ என்று நினைக்கும்‌ மனத்தினை உடையவர்களுக்கு மிகுந்த புகழ்‌ உண்டாகும்‌.

2

மறிதிரை படுகடல் விடமடை மிடறினர்எறிதிரை கரைபொரும் இடைமரு தெனுமவர்செறிதிரை நரையொடு செலவிலர் உலகினில்பிறிதிரை பெறுமுடல் பெருகுவ தரிதே.
சொற்பிரிப்பு
“மறிதிரை படு கடல் விடம் அடை மிடறினர்எறிதிரை கரை பொரும் இடைமருது” எனுமவர்செறி திரை நரையொடு செலவு இலர், உலகினில்;பிறிது இரை பெறும் உடல் பெருகுவது அரிதே.
உரை

சிவபெருமான்‌ பெரிய அலைகள்‌ சுருண்டு வீசுகின்ற திருப்பாற்கடலில்‌ தோன்றிய விடத்தை விழுங்கி கண்டத்தில்‌ தடுத்து நிறுத்தியவர்‌. இப்பெருமான்‌, காவிரி ஆற்றின் அலைகள் கரைகளை முட்டுகின்ற இடைமருதூர்‌ என்னும்‌ தலத்தில்‌ எழுந்தருளியுள்ளார்‌ ‌இத்தலத்தின்‌ பெயரைச்‌ சொல்லுபவர்களை மூப்பினை உணர்த்தும்‌ தோல்‌ சுருக்கம் நரைமயிர்‌ ஆகியன அணுகாது. மீண்டும்‌ உலகில்‌ பிறந்து உணவை உண்டு உடலை வளர்க்கும்‌ பிறவியை எடுக்கமாட்டார்கள்‌ (பிறவாமை எய்துவர்‌).

3

சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்நிலவிய உடலினர் நிறைமறை மொழியினர்இலரென இடுபலி யவரிடை மருதினைவலமிட வுடல்நலி விலதுள வினையே.
சொற்பிரிப்பு
சலசல சொரி புனல் சடையினர், மலைமகள்நிலவிய உடலினர், நிறை மறைமொழியினர்,இலர் என இடு பலியவர், இடைமருதினைவலம் இட, உடல் நலிவு இலது, உள வினையே.
உரை

சிவபெருமான்‌ சல சல என்று சொரியும்‌ கங்கையைச்‌ சடையில்‌ அணிந்தருப்பவர். த மலைமகளை ஒரு பாகமாகக்‌ கொண்டிருப்பவர்‌.நிறைவான வேதங்களை அருளி மொழிபவர்‌. உணவின்மையால்‌ பசியோடு உள்ளார்‌ என மகளிர்‌ இடும்‌ பலியை ஏற்பவர்‌. இப்பெருமான்‌ எழுந்தருளியுள்ள இடைமருதூரை வலம்‌ வர, வினைகளால்‌ வரும்‌ உடல் நலிவு இல்லாமற்‌ போகும்‌.

4

விடையினர் வெளியதொர் தலைகல னெனநனிகடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர்இடைவிட லரியவர் இடைமரு தெனும்நகர்உடையவர் அடியிணை தொழுவதெம் உயர்வே.
சொற்பிரிப்பு
விடையினர், வெளியது ஒர் தலை கலன் என நனிகடை கடை தொறு, ”பலி இடுக!” என முடுகுவர்,இடைவிடல் அரியவர் இடை மருது எனும் நகர்உடையவர்; அடி இணை தொழுவது எம் உயர்வே.
உரை

சிவபெருமான்‌ விடையூர்தியை உடையவர்‌. வெண்மையான தலையோட்டை உண்கலனாகக்‌ கொண்டு பலகாலம்‌ வீடுகள் தோறும்‌ சென்று, “பலி இடுக” என விரைந்து ‌செல்பவர்‌. மண்ணுயிர்களால்‌ இடைவிடாது தியானிக்கப்படுபவர்‌. இப்பெருமான்‌ இடைமருதூர்‌ என்னும்‌ நகருக்கு உரியவர்‌. இப்பெருமானின்‌ திருவடிகளைத்‌ தொழுவதே எமக்கு உயர்வைத்‌ தருவதாகும்‌.

5

உரையரும் உருவினர் உணர்வரு வகையினர்அரைபொரு புலியதள் உடையினர் அதன்மிசைஇரைமரும் அரவினர் இடைமரு தெனவுளம்உரைகள துடையவர் புகழ்மிக வுளதே.
சொற்பிரிப்பு
“உரை அரும் உருவினர், உணர்வு அரு வகையினர்,அரை பொரு புலி அதள் உடையினர், அதன்மிசைஇரை மரும் அரவினர், இடைமருது” என உளம்உரைகள் அது உடையவர் புகழ் மிக உளதே.
உரை

சிவபெருமானார்‌ வார்த்தைகளால்‌ விவரிக்க இயலாத உருவத்தை உடையவர்‌. மனத்தால்‌ உணர்ந்து கொள்வதற்கு அரியவர்‌. இடையில்‌ பொருந்திய புலித்தோல்‌ ஆடையினர்‌. அதன்மேல்‌ இரையை விழுங்கும்‌ பாம்பை கச்சையாகக்‌ கட்டி இருப்பவர்‌. இப்பெருமான்‌ எழுந்தருளியுள்ள இடைமருதூரை உள்ளத்தில்‌ நினைந்து தியானிப்பவர்களுக்கு மிகந்த புகழ்‌ உளதாகும்‌.

6

ஒழுகிய புனல்மதி யரவமொ டுறைதரும்அழகிய முடியுடை அடிகள தறைகழல்எழிலினர் உறையிடை மருதினை மலர்கொடுதொழுதல்செய் தெழுமவர் துயருறல் இலரே.
சொற்பிரிப்பு
ஒழுகிய புனல் மதி அரவமொடு உறைதரும்அழகிய முடி உடை அடிகளது, அறைகழல்எழிலினர் உறை, இடைமருதினை மலர்கொடுதொழுதல் செய்து எழுமவர் துயர் உறல் இலரே.
உரை

சிவபெருமானின்‌ அழகிய சடைமுடியில்‌, வழிந்து ஒழுகும்‌ கங்கைநதி, இளம்பிறை பாம்பு ஆகியன உறைகின்றன. ஒலிக்கின்ற வீரக்கழல்‌ அணிந்துள்ள அழகர்‌ அவர். இப்பெருமான்‌ உறைகின்ற இடைமருதூரை மலர்‌ கொண்டு தொழுது போற்றுபவர்களின் மனதில்‌ துன்பம்‌ இல்லாதது ஆகும்‌.

7

கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும்நிலையினர் சலமகள் உலவிய சடையினர்மலைமகள் முலையிணை மருவிய வடிவினர்இலைமலி படையவர் இடமிடை மருதே.
சொற்பிரிப்பு
கலை மலி விரலினர், கடியது ஒர் மழுவொடும்நிலையினர், சலமகள் உலவிய சடையினர்,மலைமகள் முலை இணை மருவிய வடிவினர்,இலை மலி படையவர், இடம் இடைமருதே.
உரை

சிவபெருமான் இன்னிசைக்‌ கலையை எழுப்பும்‌ வீணையை மீட்டுகின்ற விரலை உடையவர்‌.அழிக்கும்‌ தன்மையை உடைய மழு ஆயுதத்தோடு விளங்குபவர்‌.கங்கை உலாவும் சடைமுடியை உடையவர். மலைமகளின் முலைத்தழும்பு பொருந்திய வடிவத்தை உடையவர்‌. இலைவடிவான்‌ சூலத்தை ‌ ஏந்தியிருப்பவர். இப்பெருமான் எழுந்தருளியிருக்கும் தலம்‌ இடைமருதூர்‌ ஆகும்‌.

8

செருவடை யிலவல செயல்செயத் திறலொடும்அருவரை யினிலொரு பதுமுடி நெரிதரஇருவகை விரனிறி யவரிடைமருததுபரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே.
சொற்பிரிப்பு
செருவு அடை இல வல செயல் செய் அத் திறலொடும்அரு வரையினில் ஒருபது முடி நெரிதர,இருவகை விரல் நிறியவர் இடைமருது அதுபரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே?
உரை

இராவணன்‌ முறையற்ற வலிய செயல்களைப்‌ போரில்‌ செய்பவன்‌. அத்தகைய வலிமையுடன்‌ அவன்‌ சிவபெருமான்‌ வீற்றிருக்கும்‌ கயிலை மலையைப்‌ பெயர்த்தான்‌. அவனின்‌ உடல்‌ வலிமையும்‌ உள்ளத்தின்‌ செருக்கும்‌ கெடுமாறு சினம்‌, கருணை ஆகிய உள்ளக்‌ குறிப்போடு, சிவபபெருமான்‌ அவனுடைய பத்துத்‌ தலைகளையும்‌ விரலை ஊன்றி நெரித்தவர்‌. இப்பெருமான்‌ எழுந்தருளியுள்ள இடைமருதூரை போற்றித்‌ துதிப்பவர்களின்‌ அருவினைகள்‌ நீங்குதல்‌ பெரிதாகுமோ? வினை எளிதில்‌ நீங்கிவிடும்‌ என்பது குறிப்பு.

9

அரியொடு மலரவன் எனவிவ ரடிமுடிதெரிவகை அரியவர் திருவடி தொழுதெழஎரிதரும் உருவர்தம் இடைமரு தடைவுறல்புரிதரும் மன்னவர் புகழ்மிக உளதே.
சொற்பிரிப்பு
அரியொடு மலரவன் என இவர் அடி முடிதெரி வகை அரியவர், திருவடி தொழுது எழ,எரிதரும் உருவர்தம் இடைமருது அடைவு உறல்புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே.
உரை

திருமாலுடன்‌ பிரமனும்‌ அடிமுடியைக்‌ காண முயன்றபோது, அவர்களுக்குத்‌ தெரிய முடியாதவாறு அரியவராக நின்றவர்‌. அவர்கள்‌ பணிந்து தொழுது எழுந்தபோது சோதிவடிவாகக்‌ காட்சி தந்தவர்‌. இப்பெருமான்‌ எழுந்தருளிய இடைமருதூரை அடைய வேண்டும்‌ என்ற உறுதியான மனம்‌ உடையவர்களுக்கு மிகுந்த புகழ்‌ உண்டு.

10

குடைமயி லினதழை மருவிய வுருவினர்உடைமரு துவரினர் பலசொல வுறவிலைஅடைமரு திருவினர் தொழுதெழு கழலவர்இடைமரு தெனமனம் நினைவதும் எழிலே.
சொற்பிரிப்பு
குடை மயிலின தழை மருவிய உருவினர்,உடை மரு துவரினர், பல சொல உறவு இலை;அடை மரு திருவினர் தொழுது எழு கழலவர்இடை மருது என மனம் நினைவதும் எழிலே.
உரை

சமணர்கள்‌ குடையையும்‌, மயில்‌ தோகையையும்‌ கையில்‌ வைத்திருப்பவர்கள்‌. புத்தர்கள்‌ காவி உடைய அணிந்திருப்பவர்கள்‌. அவர்களின்‌ பொருளற்ற சொற்களிடம்‌ நமக்கு உறவு இல்லை என ஒதுக்கி விடுங்கள்‌. இறை அருளை முழுமையாகப்‌ பெற்ற அடியவர்களால்‌ தொழப்பெறும்‌ திருவடிகளை உடையது, சிவபெருமான்‌ எழுந்தருளியுள்ள இடைமருதூர்‌ ஆகும்‌ என மனதில்‌ நினைப்பது அழகைத்‌ தரும்‌.

11

பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடுவிரகினன் விரிதரு பொழிலிடைமருதினைப்பரவிய ஒருபது பயிலவல் லவரிடர்விரவிலர் வினையொடு வியனுல குறவே.
சொற்பிரிப்பு
பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடுவிரகினன், விரிதரு பொழில் இடைமருதினைப்பரவிய ஒருபது பயில வல்லவர் இடர்விரவிலர், வினையொடு; வியன் உலகு உறவே.
உரை

கரையைப்‌ பொருதுகின்ற கடலை அணித்தாக உள்ள புகலிப்பதியில்‌ தோன்றியவர்‌. தமிழ்‌ விரகனான ஞானசம்பந்தன்‌ ஆகும்‌. இவர்‌ விரிந்த பொழில்களால்‌ சூழப்பட்ட இடைமருதூரில்‌ எழுந்தருளிய சிவபெருமானைப்‌ போற்றிப்‌ பாடினார்‌. இத்திருப்பதிகத்தின்‌ பத்துப்‌ பாடல்களையும்‌ ஓத வல்லவர்களுக்குத்‌ துன்பம்‌ வராது, வினையும்‌ இராது. அவர்களுக்கு அகன்ற தேவர்‌ உலகம்‌ வாய்க்கப்‌ பெறும்‌.

திருச்சிற்றம்பலம்