திருமுறை 1 · 1.121 · 11

திருச்சிற்றம்பலம்

திருவிடைமருதூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
வியாழக்குறிஞ்சி
தலம்
இடைமருதூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்தபடைமரு தழலெழ மழுவல பகவன்புடைமரு திளமுகில் வளமமர் பொதுளியஇடைமரு தடையநம் இடர்கெடல் எளிதே.
சொற்பிரிப்பு
நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்தபடை மரு தழல் எழ மழு வல பகவன்,புடை மருது இள முகில் வளம் அமர் பொதுளிய,இடை மருது அடைய, நம் இடர் கெடல் எளிதே.
உரை

எப்பொழுதும்‌ அசைவுகளை உடைய திரிபுரங்கள்‌ எரிந்து அழிந்து போகுமாறு புன்சிரிப்பு அருளித்‌ தனது படைக்கலத்தால்‌ தீ எழும்பும்படி செய்தருளிய மழு ஏந்திய வெற்றி வீரர்‌ சிவபெருமானாராகும்‌. இப்பெருமான்‌ எழுந்தருளியுள்ளதும்‌, அருகில்‌ வளர்ந்துள்ள மருத மரங்களில்‌ இளமேகங்கள்‌ தவழ்ந்து மழை வளத்தை தருவதுமான திரு இடை மருதூரை அடைந்தால்‌ நம்‌ துயர்‌ கெடுவது எளிதாகும்‌.

2

மழைநுழை மதியமொ டழிதலை மடமஞ்ஞைகழைநுழை புனல்பெய்த கமழ்சடை முடியன்குழைநுழை திகழ்செவி அழகொடு மிளிர்வதொர்இழைநுழை புரியணல் இடமிடை மருதே.
சொற்பிரிப்பு
மழை நுழை மதியமொடு, அழிதலை, மடமஞ்ஞைகழை நுழை புனல், பெய்த கமழ் சடைமுடியன்;குழை நுழை திகழ் செவி, அழகொடு மிளிர்வது ஒர்இழை நுழை புரி அணல்; இடம் இடைமருதே.
உரை

சிவபெருமானார்‌ மேகங்களின்‌ ஊடே செல்லும்‌ பிறைமதியையும்‌ தசைவற்றிய மனிதத்‌ தலை ஓட்டையும்‌ மட மயில்கள்‌ மூங்கில்களின்‌ இடையில்‌ நுழைந்து செல்லும்‌ மலையில்‌ தோன்றிய கங்கையையும்‌ தனது சடைமுடியில்‌ சூடியிருப்பவர்‌. குழை நுழைந்து விளங்கும்‌ செவி அழகர்‌. இழையாகத்‌ திரண்ட முப்புரி நூலை விரும்பி அணியும்‌ அண்ணல்‌. இப்பெருமான்‌ எழுந்தருளிய இடம்‌ திரு இடை மருதூர்‌ ஆகும்‌.

3

அருமையன் எளிமையன் அழல்விட மிடறினன்கருமையின் ஒளிபெறு கமழ்சடை முடியன்பெருமையன் சிறுமையன் பிணைபெணொ டொருமையின்இருமையும் உடையணல் இடமிடை மருதே.
சொற்பிரிப்பு
அருமையன், எளிமையன், அழல் விட மிடறினன்,கருமையின் ஒளி பெறு கமழ் சடைமுடியன்,பெருமையன், சிறுமையன், பிணைபெணொடு ஒருமையின்இருமையும் உடை அணல், இடம் இடைமருதே.
உரை

சிவபெருமானார்‌ அன்பில்லாதவருக்குத்‌ தூரமானவராகவும்‌, அன்புடைய அடியவருக்கு அருகிலும்‌ இருக்கும்‌ எளியவர்‌. அழலும்‌ தன்மையுடைய விடத்தை உண்டு நிறுத்திய கண்டத்தினர்‌. பெருமையான ஒளிமிகுந்த சடை முடியை உடையவர்‌. பெரியவற்றுக்கு எல்லாம்‌ பெரியவர்‌. சிறியன யாவற்றிற்கும்‌ சிறியவர்‌. தன்னோடு பிணைந்துள்ள உமையம்மையோடு ஒரு உருவில்‌ இருவடிவாகத்‌ தோன்றுபவர்‌. இச்சிவபெருமான்‌ எழுந்தருளிய இடம்‌ திரு இடை மருதூர்‌ ஆகும்‌.

4

பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்குநரிவளர் சுடலையுள் நடமென நவில்வோன்வரிவளர் குளிர்மதி யொளிபெற மிளிர்வதொர்எரிவளர் சடையணல் இடமிடை மருதே.
சொற்பிரிப்பு
பொரி படு முதுகு உற முளி களி புடை புல்குநரி வளர் சுடலையுள் நடம் என நவில்வோன்,வரி வளர் குளிர்மதி ஒளி பெற மிளிர்வது ஒர்எரி வளர்சடை அணல், இடம் இடைமருதே.
உரை

சிவபெருமானார்‌, நன்கு காய்ந்து பொரிந்த முதுகினை உடைய நரிகள்‌, களிப்புடன்‌ நிறைந்து தோன்றும்‌ சுடுகாட்டில்‌, நடனம்‌ ஆடுபவர்‌. அழகிய கலைகளை கோடாகத்‌ தோன்றி பின்‌ வளரும்‌ தன்மையை உடைய குளிர்ந்த பிறை மதியை ஒளிபெற அணிந்த எரிபோன்று வளரும்‌ சடைமுடியை உடைய தலைமையாளர்‌. இச்சிவபெருமான்‌ எழுந்தருளிய இடம்‌ திருஇடை மருதூர்‌ ஆகும்‌.

5

வருநல மயிலன மடநடை மலைமகள்பெருநல முலையிணை பிணைசெய்த பெருமான்செருநல மதிலெய்த சிவனுறை செழுநகர்இருநல புகழ்மல்கும் இடமிடை மருதே.
சொற்பிரிப்பு
வரு நல மயில் அன மடநடை மலைமகள்பெரு நல முலை இணை பிணைசெய்த பெருமான்,செரு நல மதில் எய்த சிவன், உறை செழு நகர்இரு நல புகழ் மல்கும் இடம் இடைமருதே.
உரை

சிவபெருமான்‌ அழகோடு அசைந்து வரும்‌ மட நடையினளாகிய மலையரையனின்‌ மகளும்‌, பெருநல முலையாள்‌ என்ற திருப்பெயரையும்‌ உடையவளுமாகிய அம்மையின்‌ இரு தனபாரங்களைக்‌ கூடி இருப்பவர்‌. போர்‌ செய்தற்கு உரிய தகுதியோடு விளங்கிய அசுரர்களின்‌ மும்மதில்களை எய்து அழித்தவர்‌. இச்சிவபெருமான்‌ உறையும்‌ செழுமையான நகரம்‌ விரிந்த புகழால்‌ நிறைந்த திரு இடை மருதூர்‌ ஆகும்‌.

6

கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகைமலையுடை மடமகள் தனையிடம் உடையோன்விலையுடை அணிகலன் இலனென மழுவினொடிலையுடை படையவன் இடமிடை மருதே.
சொற்பிரிப்பு
கலை உடை விரி துகில், கமழ்குழல், அகில்புகை,மலை உடை மடமகள் தனை இடம் உடையோன்;விலை உடை அணிகலன் இலன் என மழுவினொடுஇலை உடை படையவன்; இடம் இடைமருதே.
உரை

மேகலை சூழ்ந்த விரிந்த ஆடையை தன்‌ இடுப்பில்‌ அணிந்தவளும்‌, அகிலின்‌ புகை கமழும்‌ கூந்தலை உடையவளுமான மலை அரசனின்‌ மடமகளாகிய பார்வதி தேவியை சிவபெருமானார்‌ தனது இடப்பாகத்தில்‌ வைத்திருப்பவர்‌. விலைமதிப்புள்ள அணிகலன்கள்‌ எவையும்‌ இல்லாதவர்‌ என்று சொல்லுமாறு, மழு, எலும்பு முதலியன பூண்டு இலை வடிவான சூலப்படையையும்‌ வைத்திருப்பவர்‌. இச்சிவபெருமான்‌ எழுந்தருளிய இடம்‌ திருஇடை மருதூர்‌ ஆகும்‌.

7

வளமென வளர்வன வரிமுரல் பறவைகள்இளமணல் அணைகரை யிசைசெயும் இடைமருதுளமென நினைபவர் ஒலிகழல் இணையடிகுளமண லுறமூழ்கி வழிபடல் குணமே.
சொற்பிரிப்பு
வளம் என வளர்வன வரி முரல் பறவைகள்இள மணல் அணை கரை இசைசெயும் இடைமருதுஉளம் என நினைபவர் ஒலிகழல் இணை அடி,குளம் அணல் உற மூழ்கி, வழிபடல் குணமே.
உரை

இடைமருதூர்‌ என்னும்‌ திருத்தலமானது வளமுடைய இடமாகும்‌. நாம்‌ வாழ்வதற்கு ஏற்ற இடமாகும்‌ என்று எண்ணி அழகிய பறவைகளும்‌ வண்டுகளும்‌ இணைந்து, இளமையான மணல்‌ அணைந்த கரையில்‌ இசை செய்யும்‌ இடமாகும்‌. இத்தகைய இடைமருதை மனமார நினைப்பவர்‌ அந்நகரை அடைந்து, அங்குள்ள தீர்த்தத்தில்‌ கழுத்தளவிருந்து மூழ்கி வீரக்கழல்‌ அணிந்த மருதவாணனை வழிபடுவதைப்‌ பண்பாகக்‌ கொள்க.

8

மறையவன் உலகவன் மதியவன் மதிபுல்குதுறையவன் எனவல அடியவர் துயரிலர்கறையவன் மிடறது கனல்செய்த கமழ்சடைஇறையவன் உறைதரும் இடமிடை மருதே.
சொற்பிரிப்பு
“மறை அவன், உலகு அவன், மதியவன், மதி புல்குதுறையவன்” என வல அடியவர் துயர் இலர்;கறையவன் மிடறு அது, கனல் செய்த கமழ் சடைஇறையவன், உறைதரும் இடம் இடைமருதே.
உரை

வேதங்களை அருளியவர்‌. அனைத்து உலகங்களாக விளங்குபவர்‌. திங்களாய்த்‌ திகழ்பவர்‌. அறிவோடு பட்ட கலைத்துறைகளாக விளங்குபவர்‌. நீலகண்டத்தை உடையவர்‌ கனல்‌ போன்று விளங்கும்‌ சடையை உடையவர்‌. எல்லோருக்கும்‌ தலைவனாக இருப்பவர்‌. இப்பெருமான்‌ சிவபெருமானே என்று போற்ற வல்ல அடியவர்கள்‌ துன்பம் இல்லாதவர்களாக ஆகுவர்‌. இப்பெருமான்‌ எழுந்தருளிய இடம்‌ திருஇடை மருதூர்‌ ஆகும்‌.

9

மருதிடை நடவிய மணிவணர் பிரமரும்இருதுடை யகலமொ டிகலின ரினதெனக்கருதிடல் அரியதொர் உருவொடு பெரியதொர்எருதுடை யடிகள்தம் இடமிடை மருதே.
சொற்பிரிப்பு
மருது இடை நடவிய மணிவணர், பிரமரும்இருது உடை அகலமொடு இகலினர், இனது எனக்கருதிடல் அரியது ஒர் உருவொடு பெரியது ஒர்எருது உடை அடிகள் தம் இடம் இடைமருதே.
உரை

மருத மரங்களின்‌ இடையே கட்டிய உரலோடு தவழ்ந்த நீலமணி போன்ற நிறத்தை உடைய திருமாலும்‌, பிரமனும்‌ தம்முள்‌ மிக்க பெருமை உடையவர்‌ யார்‌ என மாறுபட்டவராய்‌ நிற்க இன்னது என்று கருதுவதற்கு இயலாத பெரிய ஒளி உருவோடு நின்றவர்‌ சிவபெருமானாகும்‌. இச்சிவபெருமான்‌ இடப வாகனத்துடன்‌ எழுந்தருளிய இடம்‌ இடை மருதூர்‌ ஆகும்‌.

10

துவருறு விரிதுகில் உடையரும் அமணரும்அவருறு சிறுசொலை நயவன்மின் இடுமணல்கவருறு புனலிடை மருதுகை தொழுதெழும்அவருறு வினைகெடல் அணுகுதல் குணமே.
சொற்பிரிப்பு
துவர் உறு விரிதுகில் உடையரும் அமணரும்அவர் உறு சிறுசொலை நயவன்மின்! இடு மணல்கவர் உறு புனல் இடைமருது கைதொழுது எழும்அவர் உறு வினை கெடல் அணுகுதல் குணமே.
உரை

நீண்ட துவர்‌ ஆடையை உடுத்தும்‌ புத்தரும்‌, சமணரும்‌ கூறும்‌ சிறுமையான சொற்களை விரும்பாதீர்கள்‌. காவிரி நதி பல கிளைகளாகப்‌ பிரிந்து செல்லும்‌ வாய்க்கால்களை உடைய இடைமருதூரைக்‌ கைகளால்‌ வணங்குபவர்களுக்கு வினைகள்‌ கெடுதலும்‌ நல்ல குணங்கள்‌ உண்டாதலும்‌ கூடும்‌.

11

தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்இடமலி பொழிலிடை மருதினை யிசைசெய்தபடமலி தமிழிவை பரவவல் லவர்வினைகெடமலி புகழொடு கிளரொளி யினரே.
சொற்பிரிப்பு
தட மலி புகலியர் தமிழ் கெழு விரகினன்,இடம் மலி பொழில் இடைமருதினை இசை செய்த,படம் மலி, தமிழ் இவை பரவ வல்லவர் வினைகெட, மலி புகழொடு கிளர் ஒளியினரே.
உரை

நீர்‌ நிலைகள்‌ பலவற்றை உடைய புகலிப்பதியில்‌ தோன்றிய தமிழ்‌ வல்லுனர் ஞானசம்பந்தன் ஆகும். இவர் விரிந்த பொழில்களால் சூழப்பட்ட இடை மருதூரில் எழுந்தருளிய இடைமருதீசனை இசையால்‌ பரவிய, சொல்‌ ஓவியமாக இத்திருப்பதித்‌ தமிழைப்‌ பாடிப்‌பரவ வல்லவர்களின் வினைகள்‌ அழிந்துவிடும்‌. அவர்கள்‌ புகழோடு ஒளிமிகுந்து விளங்குபவர்.

திருச்சிற்றம்பலம்