திருமுறை 1 · 1.120 · 11

திருச்சிற்றம்பலம்

திருவையாறு

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
வியாழக்குறிஞ்சி
தலம்
ஐயாறு
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

பணிந்தவர் அருவினை பற்றறுத் தருள்செயத்துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்பிணிந்தவன் அரவொடு பேரெழி லாமைகொண்டணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
சொற்பிரிப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து அருள்செயத்துணிந்தவன், தோலொடு நூல் துதை மார்பினில்பிணிந்தவன், அரவொடு பேர் எழில் ஆமை கொண்டுஅணிந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே.
உரை

சிவபெருமானின்‌ திருவடிகளைப்‌ பணிந்து வணங்கும்‌ அடியவர்களின்‌ நீங்குவதற்கு அரிய வினைகளை அவர்‌ அடியோடு அழித்து அருள்‌ வழங்கத்‌ துணிந்திருப்பவர்‌. மான்‌ தோலோடு விளங்கும்‌ முப்புரிநூலைத்‌ திருமார்பில்‌ அணிந்திருப்பவர்‌. அரவத்துடன்‌ பேரழகு வாய்ந்த ஆமையோட்டை அணிந்திருப்பவர்‌. இப்பெருமான்‌ எழுந்தருளிய வளமையான நகரம்‌ குளிர்ச்சியான திருவையாறு ஆகும்‌.

2

கீர்த்திமிக் கவன்நகர் கிளரொளி யுடனடப்பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்துப்போர்த்தவன் கரியுரி புலியதள் அரவரைஆர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
சொற்பிரிப்பு
கீர்த்தி மிக்கவன் நகர் கிளர் ஒளி உடன் அடப்பார்த்தவன்; பனிமதி படர் சடை வைத்து,போர்த்தவன் கரி உரி; புலி அதள், அரவு, அரைஆர்த்தவன்; வள நகர் அம் தண் ஐயாறே.
உரை

பொருள்‌: சிவபெருமான்‌ புகழ்மிக்கவரும்‌, அசுரர்களின்‌ நகரமான முப்புரத்தைத்‌ தனது நெற்றிக்‌ கண்ணில்‌ இருந்து கிளர்ந்து எழுந்த பேரொளியால்‌ அழியுமாறு பார்த்தவரும்‌ ஆவர்‌. குளிர்ந்த தங்களை விரிந்த சடைமுடிமீது வைத்திருப்பவர்‌. யானையின்‌ தோலை உரித்துப்‌ போர்த்தியிருப்பவர்‌. புலித்தோல்‌ ஆடையின்‌ மேல்‌ பாம்பை இடையில்‌ கட்டியிருப்பவர்‌. இப்பெருமான்‌ எழுந்தருளியுள்ள வளமையான நகரம்‌ அழகிய குளிர்ச்சியான திருவையாறு ஆகும்‌.

3

வரிந்தவெஞ் சிலைபிடித் தவுணர்தம் வளநகர்எரிந்தற வெய்தவன் எழில்திகழ் மலர்மேல்இருந்தவன் சிரமது இமையவர் குறைகொளஅரிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
சொற்பிரிப்பு
வரிந்த வெஞ்சிலை பிடித்து, அவுணர்தம் வள நகர்எரிந்து அற எய்தவன்; எழில் திகழ் மலர்மேல்இருந்தவன் சிரம் அது, இமையவர் குறை கொள,அரிந்தவன்; வள நகர் அம் தண் ஐயாறே.
உரை

சிவபெருமானார்‌, இருமுனைகளும்‌ இழுத்துக்‌ கட்டப்பட்ட கொடிய வில்லைப்‌ பிடித்து அசுரர்களின்‌ வளமையான முப்புரங்கள்‌ எரிந்து அழியுமாறு கனை எய்தவர்‌. தேவர்களின்‌ வேண்டுகோளுக்கு இணங்கி, அழகிய தாமரை மலரின்மேல்‌ வீற்றிருக்கும்‌ பிரமனின்‌ தலைகளில்‌ ஒன்றைக்‌ கொய்தவர்‌. இப்பெருமான்‌ எழுந்தருளியுள்ள வளமையான நகரம்‌ குளிர்ச்சியான திருவையாறு ஆகும்‌.

4

வாய்ந்தவல் லவுணர்தம் வளநகர் எரியிடைமாய்ந்தற எய்தவன் வளர்பிறை விரிபுனல்தோய்ந்தெழு சடையினன் தொன்மறை ஆறங்கம்ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
சொற்பிரிப்பு
வாய்ந்த வல் அவுணர் தம் வள நகர் எரி இடைமாய்ந்து அற எய்தவன், வளர்பிறை விரிபுனல்தோய்ந்து எழு சடையினன், தொல்மறை ஆறு அங்கம்ஆய்ந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே.
உரை

சிவபெருமானார்‌, வலிமை மிகுந்த அசுரர்களின்‌ வளமையான முப்புரங்களும்‌ தீயால்‌ அழிந்து ஒழிந்து போகுமாறு கணை எய்தவர்‌. வளர்கின்ற பிறையையும்‌, விரிந்த கங்கையையும்‌ பொருந்திய சடையினர்‌. பழமையான நான்கு வேதங்களாலும்‌ ஆறு அங்கங்களாலும்‌ ஆராயப்‌ பெற்றவன்‌ சிவபெருமான்‌. இப்பெருமான்‌ எழுந்தருளியுள்ள வளமையான நகரம்‌ அழகும்‌ குளிர்ச்சியானதுமான திருவையாறு ஆகும்‌ (மறைகளால்‌ ஆயப்‌ பெற்றவன்‌ எனலும்‌ கூடும்‌).

5

வானமர் மதிபுல்கு சடையிடை அரவொடுதேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்மானன மென்விழி மங்கையொர் பாகமும்ஆனவன் வளநகர் அந்தண் ஐயாறே.
சொற்பிரிப்பு
வான் அமர் மதி புல்கு சடை இடை அரவொடுதேன் அமர் கொன்றையன், திகழ்தரு மார்பினன்,மான் அன மென் விழி மங்கை ஒர் பாகமும்ஆனவன், வள நகர் அம் தண் ஐயாறே.
உரை

சிவபெருமானார்‌, வானில்‌ விளங்கும்‌ பிறைமதி பொருந்திய சடையின்மேல்‌ பாம்பையும்‌ தேன்நிறைந்த கொன்றை மாலையையும்‌ அணிந்திருப்பவர்‌. சிறப்பு மிக்க அழகு விளங்கும்‌ திருமார்பினை உடையவர்‌. மான்போன்ற மென்மையான விழிகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக்‌ கொண்டவர்‌. இப்பெருமான்‌ எழுந்தருளிய நகரம்‌, அழகும்‌ குளிர்ச்சியானதுமான திருவையாறு ஆகும்‌.

6

முன்பனை முனிவரொ டமரர்கள் தொழுதெழும்இன்பனை இணையில இறைவனை எழில்திகழ்என்பொனை யேதமில் வேதியர் தாந்தொழும்அன்பன வளநகர் அந்தண் ஐயாறே.
சொற்பிரிப்பு
முன்பனை, முனிவரொடு அமரர்கள் தொழுது எழும்இன்பனை, இணை இல இறைவனை, எழில் திகழ்என் பொனை, ஏதம் இல் வேதியர் தாம் தொழும்அன்பன வள நகர் அம் தண் ஐயாறே.
உரை

சிவபெருமானார்‌ ஒப்பற்ற முன்னவராகவும்‌ வலிமை உடையவராகவும்‌ விளங்குபவர்‌. முனிவர்களும், தேவர்களும் தொழுகின்ற திருவடியை உடைய இன்ப வடிவினர்‌. அழகுடன்‌ விளங்கும்‌ என்‌ பொன்னாக இருப்பவர்‌. குற்றமற்ற சான்றோர்களால்‌ தொழப்படுகின்ற அன்பராவர்‌. இப்பெருமான்‌ எழுந்தருளிய நகரம்‌ அழகும்‌ குளிர்ச்சியானதுமான திருவையாறு ஆகும்‌.

7

வன்றிறல் அவுணர்தம் வளநகர் எரியிடைவெந்தற எய்தவன் விளங்கிய மார்பினில்பந்தமர் மெல்விரல் பாகம தாகிதன்அந்தமில் வளநகர் அந்தண் ஐயாறே.
சொற்பிரிப்பு
வன்திறல் அவுணர்தம் வள நகர் எரி இடைவெந்து அற எய்தவன், விளங்கிய மார்பினில்பந்து அமர் மெல் விரல் பாகம் அது ஆகி, தன்அந்தம் இல் வள நகர் அம் தண் ஐயாறே.
உரை

சிவபெருமானார்‌, பெரும்‌ வலிமை படைத்த அசுரர்களின்‌ வளமையான முப்புரங்களும்‌ தீயால்‌ வெந்து அழியுமாறு கணை எய்தவர்‌. சிறப்பு மிக்க அழகு விளங்கிய திருமார்பினில்‌ பந்து தங்கும்‌ மெல்லிய விரலை உடைய உமையம்மையைப்‌ பாகமாகக்‌ கொண்டிருப்பவர்‌. இப்பெருமான்‌ எழுந்தருளியுள்ள வளமையான நகரம்‌ அழகும்‌ குளிர்ச்சியானதுமான திருவையாறு ஆகும்‌.

8

விடைத்தவல் லரக்கன்நல் வெற்பினை யெடுத்தலும்அடித்தலத் தால்இறை யூன்றிமற் றவனதுமுடித்தலை தோளவை நெரிதர முறைமுறைஅடர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
சொற்பிரிப்பு
விடைத்த வல் அரக்கன் நல் வெற்பினை எடுத்தலும்,அடித்தலத்தால் இறை ஊன்றி, மற்று அவனதுமுடித்தலை தோள் அவை நெரிதர, முறைமுறைஅடர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே.
உரை

செருக்குடன்‌ வந்த வீரம்மிக்க இராவணன்‌ வலிய கயிலை மலையைப்‌ பெயர்த்து எடுக்க முயற்சித்த அளவில்‌, தனது அடித்தலத்தால்‌ சிறிது ஊன்றியவர்‌ சிவபெருமான்‌ ஆவர்‌. இராவணனின்‌ கிரீடம்‌ அணிந்த தலைகளையும்‌ தோள்களையும்‌ நெரித்தவர்‌. இப்பெருமான்‌ எழுந்தருளிய வளமையான நகரம்‌, அழகும்‌ குளிர்ச்சியானதுமான திருவையாறு ஆகும்‌.

9

விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனனல்எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபடகண்ணனும் பிரமனும் காண்பரி தாகியஅண்ணல்தன் வளநகர் அந்தண் ஐயாறே.
சொற்பிரிப்பு
விண்ணவர் தம்மொடு, வெங்கதிரோன், அனல்,எண் இலி தேவர்கள், இந்திரன், வழிபட,கண்ணனும் பிரமனும் காண்பு அரிது ஆகியஅண்ணல் தன் வள நகர் அம் தண் ஐயாறே.
உரை

சிவபெருமானாரை வானகத்தில்‌ வாழ்பவர்களும்‌, சூரியன்‌, அக்கினி மற்றும்‌ எண்ணற்ற தேவர்கள்‌ இந்திரன்‌ ஆகியோர்‌ வழிபட்டனர்‌. ஆனால்‌ திருமால்‌, பிரமர்‌ இருவருக்கும்‌ காண்பதற்கு அரியவராக நின்ற தலைவன்‌ ஆவார்‌ இப்பெருமான்‌ எழுந்தருளியுள்ள வளமையான நகரம்‌, அழகும்‌ குளிர்ச்சியானதுமான திருவையாறு ஆகும்‌. காண்டற்கரிய கடவுள்‌ நகர்‌ ஐயாறு என்கின்றது. அண்ணல்‌ - பெருமையிற்‌ சிறந்தவன்‌

10

மருளுடை மனத்துவன் சமணர்கள் மாசறாஇருளுடை இணைத்துவர்ப் போர்வையி னார்களுந்தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமாஅருளுடை யடிகள்தம் அந்தண் ஐயாறே.
சொற்பிரிப்பு
மருள் உடை மனத்து வன் சமணர்கள், மாசு அறாஇருள் உடை இணைத்துவர்ப் போர்வையினார்களும்,தெருள் உடை மனத்தவர்; தேறுமின், திண்ணமாஅருள் உடை அடிகள் தம் அம் தண் ஐயாறே!
உரை

தெளிந்த மனத்தினை உடையவர்களே! வலிய சமணர்கள்‌ மருட்சியை உடைய மனத்தை உடையவர்கள்‌. புத்தர்கள்‌ குற்றம்‌ நீங்காத துவர்நிற ஆடையைப்‌ போர்த்தி இருப்பவர்கள்‌. இவர்கள்‌ கூறுவதைக்‌ கேட்காதீர்கள்‌. சிவபிரானாரை உறுதியாகப்‌ பற்றிக்‌ கொண்டு தெளிந்த மனத்துடையவர்களாக மாறுங்கள்‌. பெருங்‌ கருணையாளனாக விளங்கும்‌ இப்பெருமான்‌ எழுந்தருளிய வளமான நகரம்‌ அழகும்‌, குளிர்ச்சியானதுமான திருவையாறு ஆகும்‌.

11

நலம்மலி ஞானசம் பந்தன தின்றமிழ்அலைமலி புனல்மல்கும் அந்தண்ஐ யாற்றினைக்கலைமலி தமிழிவை கற்றுவல் லார்மிகநலமலி புகழ்மிகு நன்மையர் தாமே.
சொற்பிரிப்பு
நலம் மலி ஞானசம்பந்தனது இன்தமிழ்அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினைக்கலை மலி தமிழ் இவை கற்று வல்லார் மிகநலம் மலி புகழ் மிகு நன்மையர்தாமே.
உரை

அலைகள்‌ வீசும்‌ ஆறு குளம்‌ முதலிய நீர்‌ நிலைகளால்‌ சூழப்பட்ட திருவையாறில்‌ எழுந்தருளிய சிவபெருமானாரை, நன்மைகளால்‌ நிறைந்த ஞானசம்பந்தன்‌ போற்றிப்‌ பாடினார்‌. இனிய தமிழால்‌ இயன்ற கலைநலம்‌ நிறைந்த இத்திருப்பதிகத்தைத்‌ திறம்படக்‌ கற்று வல்லவர்கள்‌ ஆனால்‌ நன்மை மிக்க புகழ்‌ அவர்களை வந்தடையும்‌.

திருச்சிற்றம்பலம்