திருமுறை 1 · 1.113 · 11

திருச்சிற்றம்பலம்

திருவல்லம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
வியாழக்குறிஞ்சி
தலம்
வல்லம்
நாடு
தொண்டைநாடு

1

எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்கத்தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்விரித்தவன் வேதங்கள் வேறுவேறுதெரித்தவன் உறைவிடந் திருவல்லமே.
சொற்பிரிப்பு
எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க;தரித்தவன், கங்கையைத் தாழ்சடைமேல்;விரித்தவன் வேதங்கள்; வேறுவேறுதெரித்தவன், உறைவு இடம் திரு வல்லமே.
உரை

சிவபெருமான்‌ அசுரர்களின்‌ கோட்டையான முப்புரங்களையும்‌ தீயில்‌ மூழ்குமாறு செய்து அழித்தவன்‌. தனது தாழ்ந்து தொங்கும்‌ சடையின்மீது கங்கையைத்‌ தரித்தவன்‌. வேதங்களை அருளிச்‌ செய்தவன்‌. அவற்றின்‌ பொருள்களை ஆறு அங்கங்களுடன்‌ தெளிவாக உணர்த்தியவன். இப்பெருமான் உறைந்திருக்கும் இடம் திருவல்லமாகும்.

2

தாயவன் உலகுக்குத் தன்னொப்பிலாத்தூயவன் தூமதி சூடியெல்லாம்ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்குஞ்சேயவன் உறைவிடந் திருவல்லமே.
சொற்பிரிப்பு
தாயவன் உலகுக்கு, தன் ஒப்பு இலாத்தூயவன், தூ மதி சூடி, எல்லாம்ஆயவன், அமரர்க்கும் முனிவர்கட்கும்சேயவன், உறைவு இடம் திரு வல்லமே.
உரை

சிவபெருமான்‌ உலக உயிர்களுக்குத்‌ தாய்‌ போன்று இருப்பவன்‌ தனக்கு‌ யாரையும் உவமை சொல்ல முடியாத பரிசுத்தன்‌. தூய மதியை முடியில் சூடியிருப்பவன்.‌ எல்லாப்‌. பொருளுமாக ஆனவன்‌. ஞானம்‌ கைவரப்‌ பெறாத போகிகள் ஆன தேவர்களுக்கும் மானசீலராக முனிவர்‌ முதலானோர்க்குத்‌ தொலையாக இருப்பவன்‌ இப்பெருமான்‌ உறைந்திருக்கும்‌ இடம்‌ திருவல்லம்‌ ஆகும்‌.

3

பார்த்தவன் காமனைப் பண்பழியப்போர்த்தவன் போதகத் தின்னுரிவைஆர்த்தவன் நான்முகன் தலையையன்றுசேர்த்தவன் உறைவிடந் திருவல்லமே.
சொற்பிரிப்பு
பார்த்தவன், காமனைப் பண்பு அழிய;போர்த்தவன், போதகத்தின் உரிவை;ஆர்த்தவன் நான்முகன் தலையை, அன்றுசேர்த்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.
உரை

சிவபெருமான்‌ மன்மதனின்‌ அழகு கெடுமாறு அவனை நெற்றிக்‌ கண்ணால்‌ பார்த்து எரித்து அழித்தவன்.‌ யானையின்‌ தோலை உரித்துப்‌ போர்த்தவன்‌. ஆணவத்தால்‌ ஆர்ப்பரித்த பிரமனின்‌ ஐந்து தலைகளில்‌ ஒன்றை முன்னொரு காலத்தில்‌ பறித்‌து அத்தலையின்‌ ஓட்டைக்‌ கையில்‌ உண்கலனாகச்‌ சேர்த்தவன்‌. இப்பெருமான் உறைந்திருக்கும்‌ இடம்‌ திருவல்லம்‌ ஆகும்‌.

4

கொய்தஅம் மலரடி கூடுவார்தம்மைதவழ் திருமகள் வணங்கவைத்துப்பெய்தவன் பெருமழை யுலகமுய்யச்செய்தவன் உறைவிடந் திருவல்லமே.
சொற்பிரிப்பு
கொய்த அம் மலர் அடி கூடுவார் தம்-மை, தவழ் திருமகள் வணங்க வைத்து,பெய்தவன், பெரு மழை; உலகம் உய்யச்செய்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.
உரை

கொய்த அழகிய மலரை கொண்டு, மனம் ஒருமித்து தூவி போர்றி வழிபடுபவர்களுக்கு திருமகள் செல்வச் செழிப்பினை இணங்கி அருளுமாறு செய்ய வைத்தும், உலகம் உய்யபெருமழை பெய்யுமாறு செய்து பஞ்சத்தைப்‌ போக்கும்‌ ஈசன்‌ உறையும்‌ இடம்‌ திருவல்லம்‌ ஆகும்‌.

5

சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும்வண்ணம்நேர்ந்தவன் நேரிழை யோடுங்கூடித்தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தேசேர்ந்தவன் உறைவிடந் திருவல்லமே.
சொற்பிரிப்பு
சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும் வண்ணம்நேர்ந்தவன்; நேரிழையோடும் கூடி,தேர்ந்தவர் தேடுவார் தேடச் செய்தேசேர்ந்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.
உரை

சிவபெருமானது திருவடியே சரணம்‌ என்று சார்ந்து உள்ள அடியவர்களுக்கு எல்லாவிதமான இன்பங்களும்‌ தழைக்கும்‌ வண்ணம்‌ செய்கின்றான்‌. உமையம்மையோடு கூடி அருள்‌ வழங்குபவன்‌: தேர்ந்த ஞானியரையும்‌ தேடுபவர்களையும்‌ தொடர்ந்து இடைவிடாமல்‌ தேடச்‌ செய்து, அவர்களுக்கு உள்நின்று அருள்‌ செய்பவன்‌. இப்பெருமான்‌ உறைந்திருக்கும்‌ இடம்‌ திருவல்லம்‌ ஆகும்.

6

பதைத்தெழு காலனைப் பாதமொன்றால்உதைத்தெழு மாமுனிக் குண்மைநின்றுவிதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்றுசிதைத்தவன் உறைவிடந் திருவல்லமே.
சொற்பிரிப்பு
பதைத்து எழு காலனைப் பாதம் ஒன்றால்உதைத்து, எழு மா முனிக்கு உண்மை நின்று,விதிர்த்து எழு தக்கன் தன் வேள்வி அன்றுசிதைத்தவன் உறைவு இடம் திரு வல்லமே.
உரை

தன்னைச்சினந்து வந்த யமனை இடக்காலால் உதைத்தவன் தன்னை வணங்கி எழுந்த மார்க்கண்டேயனுக்கு உண்மைப் பொருளாய் எதிர்‌ நின்று உணர்த்தி அருள்‌ செய்தவன்‌. நன்னெறியிலிருந்து பிறழ்ந்து தடுமாறிய தக்கன்‌ செய்த வேள்வியை முன்னொரு காலத்தில்‌ சிதைக்க வீரபத்திரனை ஏவியவன்‌ சிவபெருமான்‌ இப்பெருமான்‌ உறைந்திருக்கும்‌ இடம்‌ திருவல்லம்‌ ஆகும்‌

7 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

இப்பதிகத்தில் 7-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

8

இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங்ககழ்ந்தவல் லரக்கனை அடர்த்தபாதம்நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தேதிகழ்ந்தவன் உறைவிடந் திருவல்லமே.
சொற்பிரிப்பு
இகழ்ந்து அரு வரையினை எடுக்கல் உற்று, ஆங்குஅகழ்ந்த வல் அரக்கனை அடர்த்த பாதம்நிகழ்ந்தவர், நேடுவார், நேடச் செய்தேதிகழ்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே.
உரை

தனது வலிமைக்கு இது எம்மாத்திரம்‌ என்று இகழ்ந்து, அரிய கயிலை மலையை எடுத்து அப்புறப்படுத்தும்‌ பொருட்டு முயற்சி செய்த இராவணனை நெரித்த திருவடியை உடையவன்‌. அந்தத்‌ திருவடியையே எப்பொழுதும்‌ சரணடைந்து தேடுபவர்களுக்கு அவர்கள்‌ உள்ளத்திலேயே ஒளியாக விளங்குபவன்‌. இப்பெருமான்‌ உறைந்திருக்கும்‌ இடம்‌ திருவல்லம்‌ ஆகும்‌.

9

பெரியவன் சிறியவர் சிந்தைசெய்யஅரியவன் அருமறை யங்கமானான்கரியவன் நான்முகன் காணவொண்ணாத்தெரியவன் உறைவிடந் திருவல்லமே.
சொற்பிரிப்பு
பெரியவன்; சிறியவர் சிந்தைசெய்யஅரியவன்; அருமறை அங்கம் ஆனான்;கரியவன், நான்முகன், காண ஒண்ணாத்தெரியவன்; உறைவு இடம் திரு வல்லமே.
உரை

சிவபெருமான், யாவற்றுக்கும் முதல் பொருளாய்‌ இருத்தல்‌ போன்று யாவர்க்கும்‌ பெரியவனாய்‌ விளங்குபவர்‌. அறிவிற்‌ சிறியவர்கள்‌ சிந்தித்து உணர்தற்கு இயலாதவன்‌. அரிய வேதங்களும் அவற்றின் அங்கங்களும் ஆனவன். திருமாலாலும், பிரம்மாவாலும் காண இயலாதவன். முனைப்படங்கிய முத்தான்மாக்களுக்கு விளங்கி நிற்பவன். இப்பெருமான் எழுந்தருளியிருக்கும்‌ வளமான நகரம்‌ திருவல்லம்‌ ஆகும்‌.

10

அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்குன்றிய அறவுரை கூறாவண்ணம்வென்றவன் புலனைந்தும் விளங்கவெங்குஞ்சென்றவன் உறைவிடந் திருவல்லமே.
சொற்பிரிப்பு
அன்றிய அமணர்கள், சாக்கியர்கள்,குன்றிய அற உரை கூறா வண்ணம்வென்றவன், புலன் ஐந்தும்; விளங்க எங்கும்சென்றவன்; உறைவு இடம் திரு வல்லமே.
உரை

சமணர்களும்‌ புத்தர்களும்‌ அறம்‌ குன்றிய உரைகளைக்‌ கூறுகின்றனர்‌. ஐம்புலன்களை வென்ற சான்றோர்களுக்கு எங்கும்‌ விளங்கித்‌ தோன்றுபவனாகிய சிவபெருமானின்‌ உறைவிடம்‌ திருவல்லம்‌ ஆகும்‌.

11

கற்றவர் திருவல்லங் கண்டுசென்றுநற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்னகுற்றமில் செந்தமிழ் கூறவல்லார்பற்றுவர் ஈசன்பொற் பாதங்களே.
சொற்பிரிப்பு
கற்றவர் திரு வல்லம் கண்டு சென்று,நல் தமிழ் ஞானசம்பந்தன் சொன்னகுற்றம் இல் செந்தமிழ் கூற வல்லார்பற்றுவர், ஈசன் பொன்பாதங்களே.
உரை

சிறந்த அறிவுடையவர்‌ வாழும்‌ திருவல்லத்தைத்‌ தரிசித்துச்‌ சென்று, நற்றமிழில்‌ வல்ல ஞானசம்பந்தன்‌ இப்பதிகத்தைப்‌ பாடினார்‌. குற்றமற்ற இச்செந்தமிழ்ப்‌ பதிகத்தைப்‌ பாடவல்லவர்கள்‌ சிவபெருமானின்‌ அழகிய திருவடிகளை அடைவர்‌.

திருச்சிற்றம்பலம்