திருமுறை 1 · 1.112 · 11

திருச்சிற்றம்பலம்

திருச்சிவபுரம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
வியாழக்குறிஞ்சி
தலம்
சிவபுரம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

இன்குர லிசைகெழும் யாழ்முரலத்தன்கரம் மருவிய சதுரன்நகர்பொன்கரை பொருபழங் காவிரியின்தென்கரை மருவிய சிவபுரமே.
சொற்பிரிப்பு
இன்குரல் இசை கெழும் யாழ் முரலத்தன் கரம் மருவிய சதுரன் நகர்பொன் கரை பொரு பழங்காவிரியின்தென் கரை மருவிய சிவபுரமே.
உரை

சிவபுரம்‌ என்ற நகரமானது, இனிய ஒலியும்‌, இசையும்‌ பொருந்திய யாழ்‌ இசை ஒலிக்குமாறு அதனைத்‌ தனது கரத்தில்‌ ஏந்தியவாறு விளங்கும்‌ சமர்த்தரான சிவபெருமானின்‌ நகரமாகும்‌. இந்த நகரம்‌ பழமையான காவிரி ஆற்றின்‌ நீர்‌ வந்து அழகிய கரையினை மோதுமாறு அமைந்த, அதன்‌ தென்கரையில்‌ அமைந்துள்ளது.

2

அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்பொன்றிட வுதைசெய்த புனிதன்நகர்வென்றிகொள் ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள்சென்றடி வீழ்தரு சிவபுரமே.
சொற்பிரிப்பு
அன்று அடல் காலனைப் பாலனுக்கு ஆய்ப்பொன்றிட உதை செய்த புனிதன் நகர்வென்றி கொள் எயிற்று வெண்பன்றி முன்நாள்சென்று அடி வீழ்தரு சிவபுரமே.
உரை

சிவபுரம்‌ என்ற நகரமானது, முற்காலத்தில்‌ மார்க்கண்டேயன்‌ என்ற பாலனுக்காக, யமன்‌ அழியுமாறு அவனை காலால்‌ உதைத்தருளிய புனிதரான சிவபெருமானின்‌ நகரமாகும்‌. இந்த நகரம்‌, தனது கோரைப்‌ பல்லால்‌ வெற்றி பெறும்‌, வெள்ளைப்‌ பன்றியாக அவதரித்த திருமால்‌, முற்காலத்தில்‌ சிவன்‌ திருவடியைப்‌ பணிந்து வழிபட்ட நகரமாகும்‌.

3

மலைமகள் மறுகிட மதகரியைக்கொலைமல்க வுரிசெய்த குழகன்நகர்அலைமல்கும் (*)அரிசிலி னதனயலேசிலைமல்கு மதிலணி சிவபுரமே.(*) அரிசில் என்பது ஒரு நதி.
சொற்பிரிப்பு
மலைமகள் மறுகிட, மதகரியைக்கொலை மல்க உரிசெய்த குழகன் நகர்அலை மல்கும் அரிசிலின் அதன் அயலேசிலை மல்கு மதில் அணி சிவபுரமே.
உரை

சிவபுரம்‌ என்ற நகரமானது, மலைமகளாகிய பார்வதி தேவி அஞ்சுமாறு மதம்‌ பொருந்திய யானை ஒன்று அவள்‌ எதிரே ஓடி வந்தது. உடனே சிவபெருமான்‌ அதன்‌ எதிரே சென்று அதனைக்‌ கொன்று, அதன்‌ தோலை உரித்துப்‌ போர்த்திக்‌ கொண்ட அழகிய சிவபெருமானின்‌ நகரமாகும்‌. இந்நகரம்‌ அலைகள்‌ நிறைந்த அரிசிலாற்றின்‌ கரை அருகே மலைபோன்ற மதில்களை உடையதுமாக விளங்குகின்றது.

4

மண்புன லனலொடு மாருதமும்விண்புனை மருவிய விகிர்தன்நகர்பண்புனை குரல்வழி வண்டுகெண்டிச்செண்பக மலர்பொழிற் சிவபுரமே.
சொற்பிரிப்பு
மண், புனல், அனலொடு, மாருதமும்,விண், புனை மருவிய விகிர்தன் நகர்பண் புனை குரல்வழி வண்டு கெண்டிச்செண்பகம் அலர் பொழில் சிவபுரமே.
உரை

சிவபுரம்‌ என்ற நகரமானது, மண்‌, நீர்‌, தீ, காற்று, ஆகாயம்‌ என்ற ஐம்பூதங்களாக பொருந்தி விளங்கும்‌ விகிர்தனான சிவபெருமானின்‌ நகரமாகும்‌. இந்நகரம்‌, பண்‌ இசை பொருந்திய குரலோடு வண்டுகள்‌ தோண்ட, செண்பகப்‌ பூக்கள்‌ மலரும்‌ பொழில்களால்‌ சூழப்பட்டுள்ளது.

5

வீறுநன் குடையவள் மேனிபாகங்கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்தேறலுண் டெழுதரு சிவபுரமே.
சொற்பிரிப்பு
வீறு நன்கு உடையவள் மேனி பாகம்கூறு நன்கு உடையவன் குளிர் நகர்தான்-நாறு நன் குர விரி வண்டு கெண்டித்தேறல் உண்டு எழுதரு சிவபுரமே.
உரை

ஒப்பற்ற அழகால்‌ தனித்தன்மை பெற்ற உமையம்மையைத்‌ தனது திருமேனியில்‌ ஒருபாகமாக உடையவனாகிய சிவபெருமான்‌ விரும்பும்‌ குளிர்ச்சியான நகரம்‌ சிவபுரம்‌ ஆகும்‌. இச்சிவபுரம்‌, மணம்‌ வீசுகின்ற நல்ல குராமலரை, வண்டுகள்‌ கிண்டி அதன்‌ தேனை உண்டு மகிழ்ந்து விளங்கும்‌ பொழில்களால்‌ சூழப்பட்டுள்ள நகரம்‌ ஆகும்‌.

6

மாறெதிர் வருதிரி புரமெரித்துநீறது வாக்கிய நிமலன்நகர்நாறுடை நடுபவர் உழவரொடுஞ்சேறுடை வயலணி சிவபுரமே.
சொற்பிரிப்பு
மாறு எதிர்வரு திரிபுரம் எரித்து,நீறு அது ஆக்கிய நிமலன் நகர்நாறு உடை நடுபவர் உழவரொடும்சேறு உடை வயல் அணி சிவபுரமே.
உரை

பகைமை உணர்வோடு மாறுபட்டுத்‌ தன்னை எதிர்த்து வந்த அசுரர்களின்‌ - முப்புரங்களை எரித்து நீறாக்கிய பரிசுத்தனான சிவபெருமானின்‌ நகரம்‌ சிவபுரம்‌ ஆகும்‌. இது, உழவர்களோடு நாற்று நடும்‌ மகளிர்‌ பலரைக்‌ கொண்ட, சேற்று வளம்‌ மிக்க வயல்களால்‌ அழகு பெறும்‌ நகரமாகும்‌.

7

ஆவிலைந் தமர்ந்தவன் அரிவையொடுமேவிநன் கிருந்ததொர் வியனகர்தான்பூவில்வண் டமர்தரு பொய்கையன்னச்சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே.
சொற்பிரிப்பு
ஆவில் ஐந்து அமர்ந்தவன் அரிவையொடுமேவி நன்கு இருந்தது ஒர் வியல் நகர்தான்-வில் வண்டு அமர்தரு பொய்கை அன்னச்-சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே.
உரை

பசுவிலிருந்து கிடைக்கும்‌ பால்‌, தயிர்‌ முதலிய ஐந்து பொருள்களை விரும்பும்‌ சிவபெருமான்‌ உமையம்மையோடு கூடி மகிழ்ந்து இருக்கும்‌ பெரிய நகரம்‌ சிவபுரம்‌ ஆகும்‌. இந்நகரம்‌, தேனைப்‌ பருகுவதற்காக வண்டுகள்‌ வந்து மொய்க்கும்‌ மலர்களை உடைய பொய்கைகளில்‌, அன்னச்‌ சேவல்‌ தன்‌ பெடையை புல்லி மகிழும்‌ அழகுடைய நகரம்‌ ஆகும்‌.

8

எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன்முழுவலி யடக்கிய முதல்வன்நகர்விழவினி லெடுத்தவெண் கொடிமிடைந்துசெழுமுகி லடுக்கும்வண் சிவபுரமே.
சொற்பிரிப்பு
எழில் மலை எடுத்த வல் இராவணன் தன்முழுவலி அடக்கிய முதல்வன் நகர்விழவினில் எடுத்த வெண்கொடி மிடைந்து,செழு முகில் அடுக்கும் வண் சிவபுரமே.
உரை

அழகிய கயிலை மலையைப்‌ பெயர்க்க முயற்சி செய்த வலிமை மிகுந்த இராவணனின்‌ முழுவலிமையையும்‌ அடக்கிய முதல்வனாகிய சிவபெருமான்‌ விரும்பித்‌ தங்கும்‌ ஊர்‌ சிவபுரம்‌ ஆகும்‌. இந்நகரில்‌, விழாக்காலங்களில்‌ உயர்த்திய வெண்மையான கொடிகள்‌ வானில்‌ நிறைந்து, மேகத்தை அணுகும்‌. அவைகள்‌ கரிய மேகங்களோடு கலந்து நிற்கும்‌ வளமை மிகுந்த நகரமாகும்‌.

9

சங்கள வியகையன் சதுர்முகனும்அங்கள வறிவரி யவன்நகர்தான்கங்குலும் பறவைகள் கமுகுதொறுஞ்செங்கனி நுகர்தரு சிவபுரமே.
சொற்பிரிப்பு
சங்கு அளவிய கையன், சதுர்முகனும்,அங்கு அளவு அறிவு அரியவன் நகர்தான்-கங்குலும் பறவைகள் கமுகுதொறும்செங்கனி நுகர்தரு சிவபுரமே.
உரை

சங்கு ஏந்திய கையினை உடைய திருமாலும்‌, நான்முகனும்‌ அடிமுடியைத் ‌தேடியும்‌ அறியப்‌ பெறாத சிவபெருமானின்‌ நகரம்‌ சிவபுரம்‌ ஆகும்‌. இந்நகரத்தில்‌ இரவிலும்‌ பறவைகள்‌ கமுக மரங்களில்‌ தங்கிச்‌ செங்கனிகளை நுகரும்‌ வளமை மிக்க நகரமாகும்‌

10

மண்டையின் குண்டிகை மாசுதரும்மிண்டரை விலக்கிய விமலன்நகர்பண்டமர் தருபழங் காவிரியின்தெண்டிரை பொருதெழு சிவபுரமே.
சொற்பிரிப்பு
மண்டையின், குண்டிகை, மாசு தரும்,மிண்டரை விலக்கிய விமலன் நகர்-பண்டு அமர்தரு பழங்காவிரியின்தெண்திரை பொருது எழு சிவபுரமே.
உரை

உண்கலம்‌, கமண்டலம்‌ ஆகியவற்றை கையில்‌ ஏந்தி, அழுக்குடைய உடம்போடு அறிவற்ற பிறச்‌ சமயத்தினரை விலக்கும்‌ சிவபெருமானின்‌ நகரம்‌ சிவபுரம்‌ ஆகும்‌. இந்நகரம்‌ பழமையான காலத்திலிருந்தே காவிரி நீரால்‌ வளமை சேர்க்கப்பட்ட நகரம்‌ ஆகும்‌.

11

சிவனுறை தருசிவ புரநகரைக்கவுணியர் குலபதி காழியர்கோன்தவமல்கு தமிழிவை சொல்லவல்லார்நவமொடு சிவகதி நண்ணுவரே.
சொற்பிரிப்பு
சிவன் உறைதரு, சிவபுரநகரைக்கவுணியர் குலபதி காழியர்கோன்-தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார்நவமொடு சிவகதி நண்ணுவரே. 11திருச்சிற்றம்பலம்
உரை

சிவபெருமான்‌ எழுந்தருளியுள்ள சிவபுரம்‌ ந கரைப்‌ போற்றி, கவுணிய குலப்பதியாகிய காழியர்‌ தலைவன்‌ ஞான சம்பந்தன்‌ இப்பதிகத்தைப்‌ பாடினார்‌. தவத்தைத்‌ தரும்‌ இத்தமிழ்ப்‌ பதிகத்தை ஓதவல்லவர்கள்‌ புதுமைகள்‌ பலவும்‌ பெற்று முடிவில்‌ சிவகதி சேர்வர்‌.

திருச்சிற்றம்பலம்