திருமுறை 1 · 1.111 · 11

திருச்சிற்றம்பலம்

திருக்கடைமுடி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
வியாழக்குறிஞ்சி
தலம்
கடைமுடி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

அருத்தனை அறவனை அமுதனைநீர்விருத்தனைப் பாலனை வினவுதிரேல்ஒருத்தனை யல்லதிங் குலகமேத்துங்கருத்தவன் வளநகர் கடைமுடியே.
சொற்பிரிப்பு
அருத்தனை, அறவனை, அமுதனை, நீர்விருத்தனை, பாலனை, வினவுதிரேல்,ஒருத்தனை, அல்லது இங்கு உலகம் ஏத்தும்கருத்தவன், வள நகர் கடைமுடியே.
உரை

சிவபெருமான்‌ வேதத்தின்‌ பொருளாய்‌ விளங்குபவன்‌. அறத்தின்‌ வடிவு உடையவன்‌. அமுதமாக இனியவன்‌. உலகத்தின்‌ மூத்தவனும்‌ இளையவனும்‌ அவனே. உலக மக்கள்‌ யாவரும்‌ இவன்‌ ஒருவனையே போற்றித்‌ தியானித்து வழிபடுகின்றனர்‌. இப்பெருமான்‌ எங்கு இருக்கின்றான்‌ என நீர்‌ வினவினால்‌, அவன்‌ தியானிப்பவரின்‌ உள்ளத்திலும்‌, வளமான நகரமாகிய கடைமுடியிலும்‌ எழுந்தருளியுள்ளான்‌. அங்கு சென்று வழிபடுவீர்களாக!

2

திரைபொரு திருமுடி திங்கள்விம்மும்அரைபொரு புலியதள் அடிகளிடந்திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர்கரைபொரு வளநகர் கடைமுடியே.
சொற்பிரிப்பு
திரை பொரு திரு முடி திங்கள் விம்மும்அரை பொரு புலி அதள் அடிகள் இடம்,திரையொடு நுரை பொரு தெண் சுனை நீர்கரை பொரு வள நகர் கடைமுடியே.
உரை

சிவபெருமான்‌ தனது! திருமுடியில் ஒளியால்‌ விம்மித்‌ தோன்றும்‌ பிறைமதியையும்‌, அலைகளால் மோதும்‌ கங்கையையும்‌ கொண்டிருப்பவர்‌. புலித்தோலை தனது இடையில்‌ அணிந்திருப்பவர்‌. இப்பெருமான் எழுந்தருளியுள்ள தலமானது அலைகளுடன்‌ நுரைகள்‌ பொருந்திய தெளிந்த சுனைநீர்‌ ௧ரைகளில்‌ வந்து மோதும்‌ வளமுடைய நகரமான கடைமுடியாகும்‌.

3

ஆலிள மதியினொ டரவுகங்கைகோலவெண் ணீற்றனைத் தொழுதிறைஞ்சிஏலநன் மலரொடு விரைகமழுங்காலன வளநகர் கடைமுடியே.
சொற்பிரிப்பு
ஆல் இளமதியினொடு, அரவு, கங்கை,கோல வெண் நீற்றனைத் தொழுது இறைஞ்சி,ஏல நல்மலரொடு விரை கமழும்காலன வள நகர் கடைமுடியே.
உரை

சிவபெருமான்‌ கல்லால மரநிழலில்‌ இளமையான மதி, அரவு, கங்கை ஆகியனவற்றைச்‌ சூடிய சடைமுடியுடன்‌ விளங்குகின்றார்‌. அழகிய திருவெண்ணீறை உடல்‌ முழுதும்‌ பூசி உள்ளார்‌. நல்ல மணங்கமமும்‌ மாலைகளையும்‌ மார்பில்‌ அணிந்துள்ளார்‌. மணம்‌ கமழும்‌ திருவடியை உடையவர்‌. இப்பெருமானுடைய தொழுது வணங்குதற்குரிய வளமுடைய நகரம்‌ கடைமுடியாகும்‌.

4

கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார்மையணி மிடறுடை மறையவனூர்பையணி யரவொடு மான்மழுவாள்கையணி பவனிடங் கடைமுடியே.
சொற்பிரிப்பு
கொய் அணி நறுமலர்க் கொன்றை அம்தார்மை அணி மிடறு உடை மறையவன் ஊர்,பை அணி அரவொடு மான் மழுவாள்கை அணிபவன் இடம் கடைமுடியே.
உரை

சிவபெருமான்‌ தேர்ந்து எடுக்கப்பட்ட அழகிய மணம்‌ கமழும்‌ கொன்றை மலர்‌ மாலையை அணிந்திருப்பவர்‌. விடம்‌ பொருந்திய கண்டத்தை உடையவர்‌. படம்‌ பொருந்திய பாம்பையும்‌, மான்‌, மழு, வாள்‌ ஆகியனவற்றையும்‌ கையில்‌ ஏந்திருப்பவர்‌. விளக்கமாய்‌ உள்ள வேதங்களும்‌ முதல்வனாய்‌ உள்ள இப்பெருமானின்‌ ஊரும்‌ இடமும்‌ கடைமுடியாகும்‌.

5

மறையவன் உலகவன் மாயமவன்பிறையவன் புனலவன் அனலுமவன்இறையவன் எனவுல கேத்துங்கண்டங்கறையவன் வளநகர் கடைமுடியே.
சொற்பிரிப்பு
“மறை அவன், உலகு அவன், மாயம் அவன்,பிறையவன், புனல் அவன், அனலும் அவன்,இறையவன்” என உலகு ஏத்தும் கண்டம்-கறையவன் வள நகர் கடைமுடியே.
உரை

சிவபெருமான்‌ ஒலி வடிவானவன்‌. பொருட்பிரபஞ்ச வடிவானவன்‌. இவையிரண்டிற்கும்‌ அடியாகிய சுத்தமும்‌ அசுத்தமும்‌ ஆன மாயையும்‌ அவன்‌. உலகம்‌ முழுவதிலும்‌ ஊடுருவி இருப்பவன்‌. சடைமுடியில்‌ பிறையை அணிந்திருப்பவன்‌. கையில்‌ தீயை ஏந்தியிருப்பவன்‌. விடம்‌ பொருந்திய நீல கண்டன்‌. உலகமெல்லாம்‌ இவனே இறைவன்‌ என்று போற்றப்படுபவனாக எழுந்தருளியுள்ள வளமான நகரம்‌ கடைமுடியாகும்‌.

6

படவர வேரல்குற் பல்வளைக்கைமடவர லாளையொர் பாகம்வைத்துக்குடதிசை மதியது சூடுசென்னிக்கடவுள்தன் வளநகர் கடைமுடியே.
சொற்பிரிப்பு
பட அரவு ஏர் அல்குல் பல்வளைக்கைமடவரலாளை ஒர்பாகம் வைத்து,குடதிசை மதி அது சூடு சென்னிக்கடவுள் தன் வள நகர் கடைமுடியே.
உரை

பாம்பின்‌ படம்‌ போன்ற அழகிய அல்குலையும்‌ பலவகையான வளையல்களையும்‌ அணிந்த கைகளை உடைய உமாதேவியை ஒரு பாகமாக வைத்திருப்பவர்‌ சிவபெருமான்‌ மேற்குத்‌ இசையில்‌ தோன்றும்‌ பிறைமதியைச்‌ சடைமுடியில்‌ சூடியிருப்பவர்‌. இக்கடவுளின்‌ வளமான நகரம்‌ கடைமுடியாகும்‌.

7

பொடிபுல்கு மார்பினிற் புரிபுல்குநூல்அடிபுல்கு பைங்கழல் அடிகளிடங்கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர்கடிபுல்கு வளநகர் கடைமுடியே.
சொற்பிரிப்பு
பொடி புல்கு மார்பினில் புரி புல்கு நூல்,அடி புல்கு பைங்கழல், அடிகள் இடம்;கொடி புல்கு மலரொடு குளிர் சுனை நீர்கடி புல்கு வள நகர் கடைமுடியே.
உரை

சிவபெருமானார்‌ தனது திருநீறு அணிந்த மார்பின்கண்‌ முறுக்கேறிய பூணூலை அணிந்திருப்பவர்‌. திருவடிகளில்‌ பொருந்திய அழகிய கழல்களை உடையவர்‌. இப்பெருமான்‌ எழுந்தருளியிருக்கும்‌ இடமானது குளிர்ந்த சுனை நீரில்‌ படர்ந்திருக்கும்‌ கொடிகளில்‌ பூத்துக்‌ குலுங்கும்‌ மலர்களின்‌ மணம்‌ கமழும்‌ வளமான நகரமான கடைமுடியாகும்‌.

8

நோதல்செய் தரக்கனை நோக்கழியச்சாதல்செய் தவனடி சரணெனலும்ஆதர வருள்செய்த அடிகளவர்காதல்செய் வளநகர் கடைமுடியே.
சொற்பிரிப்பு
நோதல் செய்து அரக்கனை, நோக்கு அழியச்சாதல் செய்து, அவன், ”அடி சரண்!” எனலும்,ஆதரவு அருள் செய்த அடிகள் அவர்காதல் செய் வள நகர் கடைமுடியே.
உரை

இராவணனுக்கு முதலில்‌ கருணை செய்யாமல்‌ துன்புறச்‌ செய்தவர்‌. பின்பு அவன்‌ சிவன்‌ திருவடியே சரணம்‌ என்று கூறிய அளவில்‌ ஆதரவு காட்டி அருள்‌ செய்தவர்‌. இப்பெருமானான சிவபெருமான்‌ பேரன்புடன்‌ விரும்பி எழுந்தருளியிருக்கும்‌ வளமான நகரம்‌ கடைமுடியாகும்‌.

9

அடிமுடி காண்கிலர் ஓரிருவர்புடைபுல்கி யருளென்று போற்றிசைப்பச்சடையிடைப் புனல்வைத்த சதுரனிடங்கடைமுடி யதனயல் காவிரியே.
சொற்பிரிப்பு
அடி முடி காண்கிலர் ஓர் இருவர்புடை புல்கி, ”அருள்!” என்று போற்று இசைப்ப,சடை இடைப் புனல் வைத்த சதுரன் இடம்கடை முடி; அதன் அயல் காவிரியே.
உரை

திருமாலும்‌ பிரமனும்‌ சிவபெருமானது அடிமுடியைக்‌ காணாதவராக அவரை அணுகி, “அருள்‌ செய்க” என்று போற்றி வழிபட்டனர்‌. அவர்‌ தனது சடைமுடியில்‌ கங்கையை அணிந்த பேராற்றல்‌ மிக்கவர்‌. அவருடைய தலமாக விளங்குவது, காவிரியின்‌ அருகில்‌ உள்ள கடைமுடியாகும்‌.

10

மண்ணுதல் பறித்தலு மாயமிவைஎண்ணிய காலவை யின்பமல்லஒண்ணுத லுமையையொர் பாகம்வைத்தகண்ணுதல் வளநகர் கடைமுடியே.
சொற்பிரிப்பு
மண்ணுதல் பறித்தலும் மாயம் இவை;எண்ணியகால், அவை இன்பம் அல்ல;ஒண் நுதல் உமையை ஒர் பாகம் வைத்தகண்ணுதல் வள நகர் கடைமுடியே.
உரை

நீரில்‌ பலகாலம்‌ மூழ்குதலும்‌, தங்களது முடியைப்‌ பறித்தலுமாகிய புத்த, சமண விரதங்கள்‌ பொய்யானவை. ஆராய்ந்து பார்க்கையில்‌ இவை இன்பத்தைத்‌ தரா. ஒளி பொருந்திய நெற்றியை உடைய உமாதேவியை ஒருபாகமாக வைத்துள்ள கண்ணுதலோனின்‌ (சிவபெருமானின்‌) வளமான நகரம்‌ கடைமுடியாகும்‌.

11

பொன்றிகழ் காவிரிப் பொருபுனல்சீர்சென்றடை கடைமுடிச் சிவனடியைநன்றுணர் ஞானசம் பந்தன்சொன்னஇன்றமி ழிவைசொல இன்பமாமே.
சொற்பிரிப்பு
பொன் திகழ் காவிரிப் பொரு புனல் சீர்சென்று அடை கடைமுடிச் சிவன் அடியைநன்று உணர் ஞானசம்பந்தன் சொன்னஇன்தமிழ் இவை சொல, இன்பம் ஆமே.
உரை

அழகு பொருந்திய காவிரி ஆற்றின்‌ அலைகளின்‌ நீர்‌ முறையாகச்‌ சென்று அடையும்‌ தலம்‌ கடைமுடியாகும்‌. இங்கு எழுந்தருளி இருக்கும்‌ சிவபெருமானின்‌ திருவடிப்‌ பெருமைகளை நன்கு உணர்ந்த ஞானசம்பந்தன்‌ இப்பதிகத்தைப்‌ பாடினார்‌. இனிய தமிழாகிய இத்திருப்பதிகப்‌ பாடல்களை ஓதி வழிபடுவோர்க்கு இன்பம்‌ பிறக்கும்‌.

திருச்சிற்றம்பலம்