திருமுறை 1 · 1.108 · 11

திருச்சிற்றம்பலம்

திருப்பாதாளீச்சரம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
வியாழக்குறிஞ்சி
தலம்
பாதாளேச்சுரம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்லபொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும்அன்னம் அனநடையாள் ஒருபாகத் தமர்ந்தருளி நாளும்பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே.
சொற்பிரிப்பு
மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும் மதி மத்தமொடு நல்லபொன் இயல் கொன்றையினான்; புனல் சூடி; பொற்பு அமரும்அன்னம் அன நடையாள் ஒரு பாகத்து அமர்ந்து அருளி; நாளும்பன்னிய பாடலினான்; உறை கோயில் பாதாளே.
உரை

சிவபெருமான்‌ தனது மின்னல்‌ போன்ற செஞ்சடைமேல்‌ விளங்கும்‌ பிறைமதியையும்‌ ஊமத்தம்‌ மலர்‌ மற்றும்‌ பொன்‌ போன்ற நிறமுடைய கொன்றை மலரையும்‌ அணிந்திருப்பவன்‌. கங்கை நதியைச்‌ சூடியிருப்பவன்‌. அழகுடைய அன்னத்தைப்‌ போன்ற நடையை உடைய உமையம்மையை தனது உடம்பில்‌ ஒரு பாகத்தில்‌ அமர்ந்திருக்க அருளியவன்‌. நாள்தோறும்‌ வேத தீதங்களைப்‌ பாடியவனாய்‌ இப்பெருமான்‌ உறைந்திருக்கும்‌ கோயில்‌ திருப்பாதாளீச்சரம்‌ ஆகும்‌.

2

நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத்தோடமர் காதில்நல்ல குழையான் சுடுநீற்றான்ஆடர வம்பெருக அனலேந்திக் கைவீசி வேதம்பாடலி னாலினியான் உறைகோயில் பாதாளே.
சொற்பிரிப்பு
நீடு அலர் கொன்றையொடு நிரம்பா மதி சூடி; வெள்ளைத்-தோடு அமர் காதில் நல்ல குழையான்; சுடு நீற்றான்;ஆடு அரவம் பெருக அனல் ஏந்திக் கை வீசி, வேதம்பாடலினால் இனியான்; உறை கோயில் பாதாளே.
உரை

சிவபெருமான்‌ தனது திருமுடியில்‌ கொத்தாக நீண்டு மலர்ந்துள்ள கொன்றை மலர்களோடு பிறைமதியையும்‌ சூடி இருப்பவன்‌. ஒரு-காதில்‌ வெண்மையான தோட்டையும்,‌ மறுகாதில்‌ நல்ல குழையையும்‌ அணிந்திருப்பவனாக விளங்குபவன்‌. சுடப்பட்ட திருநீற்றைப்‌ பூசியிருப்பவன்‌, ஆடும்‌ பாம்பை அணிகலனாக அணிந்து அனல்‌ ஏந்திய கையை வீசிக்‌ கொண்டு இருப்பவனாக‌ விளங்குபவன்‌. வேதப்‌ பாடல்களைப்‌ பாடுதலில்‌ இனியனாய்‌ விளங்கும்‌ இப்பெருமான்‌ உறைந்திருக்கும்‌ கோயில்‌ பாதாளீச்சரம்‌ ஆகும்‌. ‌

3

நாகமும் வான்மதியும் நலம்மல்கு செஞ்சடையான் சாமம்போகநல் வில்வரையாற் புரம்மூன் றெரித்துகந்தான்தோகைநல் மாமயில்போல் வளர்சாயல் தூமொழியைக் கூடப்பாகமும் வைத்துகந்தான் உறைகோயில் பாதாளே.
சொற்பிரிப்பு
நாகமும் வான்மதியும் நலம் மல்கு செஞ்சடையான், சாமம்போக நல் வில்வரையால் புரம் மூன்று எரித்து உகந்தான்,தோகை நல் மாமயில் போல் வளர் சாயல் தூமொழியைக் கூடப்பாகமும் வைத்து உகந்தான், உறை கோயில் பாதாளே.
உரை

சிவபெருமான்‌ நாகப்பாம்பையும்‌, வானில்‌ விளங்கும்‌ மதியையும்‌ தனது அழகுமிக்க செஞ்சடையில்‌ சூடியிருப்பவன்‌. உரிய காலம்‌ கழிந்தவுடன்‌ நல்ல மேருமலையின்‌ வில்லினால்‌ முப்புரங்களை எரித்து மகிழ்ந்தவன்‌. நல்ல ஆண்‌ மயில்மீது வளர்கின்ற அழகிய தோகையைப்‌ போன்ற மென்மையும்‌, தூய மொழி பேசும்‌ உமையம்மையை தன்னோடு உடனாக இடப்பாகத்தில்‌ வைத்து மகழ்ந்திருப்பவன்‌. இந்தச்‌ சிவபெருமான்‌ உறையும்‌ கோயில்‌ பாதாளீச்சரம்‌ ஆகும்‌.

4

அங்கமும் நான்மறையு மருள்செய் தழகார்ந்த அஞ்சொல்மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்செங்கயல் நின்றுகளுஞ் செறுவில் திகழ்கின்ற சோதிப்பங்கயம் நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே.
சொற்பிரிப்பு
அங்கமும் நால்மறையும் அருள்செய்து, அழகு ஆர்ந்த அம் சொல்மங்கை ஓர் கூறு உடையான், மறையோன், உறை கோயில்செங்கயல் நின்று உகளும் செறுவில் திகழ்கின்ற சோதிப்பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே.
உரை

சிவபெருமான்‌ நான்கு வேதங்களையும்‌ ஆறு அங்கங்களையும்‌ அருளிச்‌ செய்தவன்‌. அழகிய இனிய சொற்களைப்‌ பேசும்‌ உமையம்மையை ஒரு பாகமாக உடையவன்‌. வேதங்களைப்‌ பாடி மகிழ்பவனுமாகிய பெருமான்‌ உறையும்‌ கோயிலானது செங்கயல்‌ மீன்கள்‌ புரளும்‌ வயல்களில்‌ விளங்கும்‌ ஒளியினால்‌ தாமரை மலர்கள்‌ மலருகின்ற வயல்கள்‌ சூழ்ந்த பாதாளீச்சரம்‌ ஆகும்‌.

5

பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங் காகவுன்னி நின்றுதீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்துத்தேய்பிறை யும்மரவும் பொலிகொன்றைச் சடைதன்மேற் சேரப்பாய்புன லும்முடையான் உறைகோயில் பாதாளே.
சொற்பிரிப்பு
பேய் பலவும் நிலவப் பெருங்காடு அரங்கு ஆக உன்னி நின்று,தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்து,தேய்பிறையும் அரவும் பொலி கொன்றைச் சடைதன் மேல் சேர,பாய் புனலும் உடையான் உறை கோயில் பாதாளே.
உரை

சிவபெருமான்‌, பலவிதமான பேய்கள்‌ நிறைந்துள்ள பெரிய சுடுகாட்டைத்‌ தனது நாடக மேடையாக எண்ணி நடனமாடுபவன்‌. கைகளில்‌ தீயையும்‌, மான்‌ மற்றும்‌ மழுவையும்‌ வைத்திருப்பவனாக விளங்குபவன்‌. தன்‌ சடைமேல்‌ தேய்ந்த பிறையும்‌, பாம்பும்‌, செழிப்புள்ள கொன்றை மலர்களோடு பாய்ந்துவரும்‌ கங்கையையும்‌ உடையவன்‌. இச்சிவபெருமான்‌ உறையும்‌ கோயில்‌ பாதாளீச்சரம்‌ ஆகும்‌.

6

கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன்மே னின்றும்விண்ணியல் மாமதியு முடன்வைத்தவன் விரும்பும்பெண்ணமர் மேனியினான் பெருங்கா டரங்காக ஆடும்பண்ணியல் பாடலினான் உறைகோயில் பாதாளே.
சொற்பிரிப்பு
கண் அமர் நெற்றியினான், கமழ் கொன்றைச் சடைதன்மேல் நன்றும்விண் இயல் மா மதியும் உடன் வைத்தவன், விரும்பும்பெண் அமர் மேனியினான், பெருங்காடு அரங்கு ஆக ஆடும்பண் இயல் பாடலினான், உறை கோயில் பாதாளே.
உரை

சிவபெருமான்‌ மூன்றாவது ஒரு கண்‌ பொருந்திய நெற்றியை உடையவன்‌. சடைமுடிமீது மணம்‌ கமழும்‌ கொன்றை மலரோடு, விண்ணில்‌ உலாவும்‌ சிறந்த பிறைமதியையும்‌ உடனாக வைத்திருப்பவன்‌. தன்னால்‌ விரும்பப்‌ பெற்ற உமையம்மை பொருந்திய திருமேனியன்‌. பெரிய சுடுகாட்டை அரங்காகக்‌ கொண்டவன்‌. பண்‌ இசையோடு கூடிய பாடல்களுடன்‌ ஆடுபவனுமாகிய சிவபிரான்‌ உறைந்திருக்கும்‌ கோயில்‌ பாதாளீச்சரம்‌ ஆகும்‌.

7

விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள நாகம்வன்னி திகழ்வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான்விண்டவர் தம்புரம்மூன் றெரிசெய் துரைவேதம் நான்குமவைபண்டிசை பாடலினான் உறைகோயில் பாதாளே.
சொற்பிரிப்பு
விண்டு அலர் மத்தமொடு மிளிரும் இள நாகம், வன்னி, திகழ்வண்டு அலர் கொன்றை, நகு மதி,புல்கு வார்சடையான்;விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்து,உரை வேதம் நான்கும் அவைபண்டு இசைபாடலினான்; உறை கோயில் பாதாளே.
உரை

சிவபெருமான்‌ தனது நீண்ட சடையில்‌ தளை அவிழ்ந்து மலர்ந்த ஊமத்த மலரோடு, புரண்டு கொண்டிருக்கும்‌ இள நாகம்‌, வன்னி இலை, வண்டுகளால்‌ மலர்த்தப்‌ பெறும்‌ கொன்றை, பிறைமதி ஆகியவை பொருந்தியிருப்பவனாக விளங்குபவன்‌. பகைவரான அசுரர்களின்‌ முப்புரங்களையும்‌ எரித்தவன்‌. நான்கு வேதங்களையும்‌ உரைத்தவன்‌. அவற்றைப்‌ பண்டைய இசைமரபோடு பாடி மகிழ்பவனுமான சிவபிரான்‌ உறைந்திருக்கும்‌ கோயில்‌ பாதாளீச்சரம்‌ ஆகும்‌.

8

மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை மறுகஅன்று கையால்தொல்லை மலையெடுத்த அரக்கன்றலை தோள்நெரித்தான்கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் சடைக்க ணிந்தோன்பல்லிசை பாடலினான் உறைகோயில் பாதாளே.
சொற்பிரிப்பு
மல்கிய நுண் இடையாள் உமை நங்கை மறுக, அன்று, கையால்-தொல்லைமலை எடுத்த அரக்கன் தலைதோள் நெரித்தான்;கொல்லை விடை உகந்தான்; குளிர்திங்கள் சடைக்கு அணிந்தோன்;பல் இசை பாடலினான்; உறை கோயில் பாதாளே.
உரை

நெருங்கியதும்‌ நுண்மையானதுமான இடையினை உடைய உமையம்மை அஞ்சும்படி, பழமையான கயிலை மலையை முன்னொரு காலத்தில்‌ இராவணன்‌ பெயர்க்க முயற்சித்தான்‌. அப்போது, சிவபெருமான்‌ அவனுடைய தலைகளையும்‌ தோள்களையும்‌ நெரித்தவர்‌. இவர்‌ முல்லை நிலத்து தெய்வமான திருமாலாகிய இடபத்தை விரும்புபவர்‌. குளிர்ந்த திங்களைச்‌ சடையின்கண்‌ அணிந்திருப்பவர்‌. பல்வகையான இசைப்பாடல்களைப்‌ பாடுபவனுமாகிய இச்சிவபெருமான்‌ உறைந்திருக்கும்‌ கோயில்‌ திருப்பாதாளீச்சரம்‌ ஆகும்‌.

9

தாமரை மேலயனும் அரியுந்தம தாள்வினையாற் றேடிக்காமனை வீடுவித்தான் கழல்காண்பில ராயகன்றார்பூமரு வுங்குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்லபாமரு வுங்குணத்தான் உறைகோயில் பாதாளே.
சொற்பிரிப்பு
தாமரைமேல் அயனும் அரியும் தமது ஆள்வினையால்—தேடி,காமனை வீடுவித்தான் கழல் காண்பு இலராய் அகன்றார்;பூ மருவும் குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்லபா மருவும் குணத்தான் உறை கோயில் பாதாளே.
உரை

மன்மதனை எரித்த சிவபெருமானின்‌ திருவடிகளைத்‌ தமது முயற்சியால்‌ தேடியும்‌ காண இயலாதவர்களைத்‌ தாமரை மலர்மேல்‌ உறையும்‌ அயனும்‌ திருமாலும்‌ அகன்று விட்டனர்‌. இப்பெருமான்‌ மலர்கள்‌ சூடிய கூந்தலை உடைய உமை நங்கையை தனது உடலில்‌ ஒரு பாகமாகப்‌ பொருந்தி இருப்பவர்‌. வேதப்‌ பாடல்களைப்‌ பாடும்‌ நல்ல குணத்தினனும்‌ ஆகிய இப்பெருமான்‌ உறைந்திருக்கும்‌ கோயில்‌ திருப்பாதாளீச்சரம்‌ ஆகும்‌.

10

காலையில் உண்பவருஞ் சமண்கையருங் கட்டுரைவிட் டன்றுஆலவிடம் நுகர்ந்தான் அவன்றன் அடியேபரவிமாலையில் வண்டினங்கள் மதுவுண் டிசைமுரல வாய்த்தபாலையாழ்ப் பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே.
சொற்பிரிப்பு
காலையில் உண்பவரும் சமண்கையரும் கட்டுரை விட்டு, அன்றுஆலவிடம் நுகர்ந்தான் அவன்தன் அடியே பரவி,மாலையில் வண்டு இனங்கள் மது உண்டு இசை முரல, வாய்த்தபாலையாழ்ப் பாட்டு உகந்தான் உறை கோயில் பாதாளே.
உரை

காலையில்‌ சோறுண்ணும்‌ புத்தர்களும்‌ சமணர்களும்‌ கூறும்‌ பொய்யுரைகளைக்‌ கேட்காதீர்கள்‌. ஆலகால விடமுண்டு அமரர்களைக்‌ காத்த சிவபெருமானின்‌ திருவடிகளைப்‌ போற்றுங்கள்‌. மாலைக்‌ காலத்தில்‌ வண்டினங்கள்‌ தேனை உண்டு இசை பாடுகின்றன. இந்த இசையானது பாலைப்‌ பண்ணில்‌ பாடும்‌ யாழ்‌ இசை போல்‌ ஒலிக்கின்றன. இந்த இசையில்‌ மகிழ்ந்திருப்பவனுமான இப்பெருமான்‌ உறைந்திருக்கும்‌ கோயில்‌ திருப்பாதாளீச்சரம்‌ ஆகும்‌.

11

பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப்பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன்தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்னஇன்னிசை பத்தும்வல்லார் எழில்வானத் திருப்பாரே.
சொற்பிரிப்பு
பல்மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளைச் சேர,பொன் இயல் மாடம் மல்கு புகலி நகர் மன்னன்தன் ஒளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன்—சொன்னஇன் இசைபத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே.
உரை

பொன்னால்‌ இயன்ற மாடவீடுகள்‌ நிறைந்த புகலி நகர்‌ மன்னனும்‌, தனது புகழ்‌ உலகு எங்கும்‌ பரவி உயர்ந்து விளங்கும்‌ புதல்வனுமாகியவன்‌ தமிழ்‌ ஞானசம்பந்தன்‌. பலவகையான மலர்கள்‌ பூத்துள்ள பொழில்களால்‌ சூழப்பட்ட திருப்பாதாளீச்சரத்தை நாம்‌ சென்று தரிசிக்குமாறு இவர்‌ இப்பதிகத்தைப்‌ பாடினார்‌. இன்னிசையோடு கூடிய இப்பதிகப்‌ பாடல்கள்‌ பத்தையும்‌ பாட வல்லவர்கள்‌ வாணுலகத்தின்கண்‌ இருப்பார்கள்‌.

திருச்சிற்றம்பலம்