திருமுறை 1 · 1.107 · 11

திருச்சிற்றம்பலம்

திருக்கொடிமாடச்செங்குன்றூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
வியாழக்குறிஞ்சி
தலம்
கொடிமாடச்செங்குன்றூர்
நாடு
கொங்குநாடு

1

வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பின் நல்லபந்தணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்றஅந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.
சொற்பிரிப்பு
வெந்த வெண் நீறு அணிந்து, விரிநூல் திகழ் மார்பில் நல்லபந்து அணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து அருளி,கொந்து அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்றஅந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.
உரை

சிவபெருமான்‌ விரிக்கப்‌ பெற்ற பூணூல்‌ திகழ்கின்ற மார்பில்‌ திருவெண்ணீற்றை அணிந்திருப்பவன்‌. பந்து பொருந்தும்‌ கைவிரல்களை உடைய உமையம்மையை தனது திருமேனியில்‌ ஒரு பாகத்தில்‌ அமர்ந்திருக்கும்படி அருளியவன்‌. பூங்கொத்துக்கள்‌ நிறைந்த பொழில்‌ சூழந்த கொடிமாடச்‌ செங்குன்றூரில்‌ எழுந்தருளி இருப்பவன்‌. இத்தகைய இறைவனைத்‌ தொழுபவர்கள்‌ தங்கள்‌ துன்பங்களை நீக்கப்‌ பெறுவர்‌.

2

அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம்மலைமகள் கூறுடையான் மலையார் இளவாழைக்குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்றதலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே.
சொற்பிரிப்பு
அலை மலி தண்புனலோடு அரவம் சடைக்கு அணிந்து, ஆகம்மலைமகள் கூறு உடையான், மலை ஆர் இள வாழைக்குலை மலி தண் பொழில் சூழ் கொடி மாடச் செங்குன்றூர் நின்றதலைமகனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.
உரை

சிவபெருமான்‌, அலைகள்‌ நிறைந்த குளிர்ந்த கங்கை நதியோடு, பாம்பினையும்‌ சடையின்கண்‌ அணிந்திருப்பவன்‌. தனது திருமேனியில்‌ மலைமகளை ஒரு பாகமாகக்‌ கொண்டிருப்பவன்‌. மலையின்கண்‌ வளரும்‌ குலைகள்‌ நிறைந்துள்ள இளவாழை மரங்களை உடைய குளிர்ந்த பொழில்கள்‌ சூழ்ந்துள்ள கொடிமாடச்‌ செங்குன்றூரில்‌ எழுந்தருளி இருப்பவன்‌. இத்தகைய தலைமகனான சிவபெருமானைத்‌ தொழுபவர்கள்‌ தங்கள்‌ வாழ்க்கையின்‌ தடுமாற்றத்தைத்‌ தவிர்த்து விடுவர்‌.

3

பாலன நீறுபுனை திருமார்பிற் பல்வளைக்கை நல்லஏலம லர்க்குழலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே.
சொற்பிரிப்பு
பால் அன நீறு புனை திருமார்பில், பல்வளைக்கை நல்லஏலமலர்க் குழலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி,கோல மலர்ப்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்நீலநல் மாமிடற்றான் கழல ஏத்தல் நீதியே.
உரை

சிவபெருமான்‌ பால்போன்ற வெள்ளிய திருநீற்றைப்‌ புனைந்து விளங்கும்‌ மார்பினன்‌. பலவகை வளையல்களைக்‌ கையில்‌ நல்லமுறையில்‌ அணிந்‌தும்‌ மணம்‌ கமழும்‌ நறுமலர்களைக்‌ கூந்தலில்‌ சூடியும்‌ உள்ள உமையம்மையை ஒரு பாகமாக அமர்ந்திருக்கும்படி அருளிய கோலத்தையும்‌ உடையவன்‌. தேவர்க்கு நன்மைகள்‌ பல செய்த நீகலகண்டன்‌; அழகிய மலர்கள்‌ பூத்த பொழில்கள்‌ சூழ்ந்த கொடிமாடச்‌ செங்குன்றூரில்‌ எழுந்தருளி இருப்பவன்‌. இப்பெருமானின்‌ கழலணிந்த திருவடிகளைத்‌ துதிப்பதே நீதியாகும்‌.

4

வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பில் நண்ணுங்காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளிச்சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்றநீருறு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே.
சொற்பிரிப்பு
வார் உறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பில், நண்ணும்கார் உறு கொன்றையொடும் கதநாகம் பூண்டு அருளி,சீர் உறும் அந்தணர் வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்றநீர் உறு செஞ்சடையான் கழல் ஏத்தல் நீதியே.
உரை

சிவபெருமான்‌, அழகிய கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மை விளங்கும்‌ திருமார்பினன்‌. கார்காலத்தில்‌ மலரும்‌ கொன்றை மலர்‌ மாலையோடு சினம்‌ பொருந்திய பாம்பையும்‌ அணிகலனாகப்‌ பூண்டுள்ளவன்‌. கங்கையை முடியில்‌ கொண்டுள்ள செஞ்சடையன்‌. சிறப்புடைய சான்றோர்கள்‌ வாழும்‌ கொடிமாடச்‌ செகங்குன்றூரில்‌ எழுந்தருளி இருப்பவன்‌. இப்பெருமானின்‌ கழலணிந்த திருவடிகளைத்‌ துதிப்பதே நீதியாகும்‌.

5

பொன்றிகழ் ஆமையொடு புரிநூல் திகழ்மார்பில் நல்லபன்றியின் கொம்பணிந்து பணைத்தோளியோர் பாகமாகக்குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்றூர் வானில்மின்றிகழ் செஞ்சடையான் கழலேத்தல் மெய்ப்பொருளே.
சொற்பிரிப்பு
பொன் திகழ் ஆமையொடு புரிநூல் திகழ் மார்பில், நல்லபன்றியின் கொம்பு அணிந்து, பணைத்தோளி ஓர்பாகம் ஆக,குன்று அன மாளிகை சூழ் கொடி மாடச் செங்குன்றூர், வானில்மின்திகழ் செஞ்சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே.
உரை

சிவபெருமான்‌ ஆமையின்‌ ஓட்டினோடு முப்புரி நூலையும்‌ தனது மார்பில்‌ அணிந்துள்ளான்‌. நல்ல பன்றியின்‌ கொம்புகளையும்‌ அணிந்து மூங்கில்‌ போன்ற தோள்களை உடைய உமையம்மையை தனது திருமேனியில்‌ ஒருபாகமாகக்‌ கொண்டு விளங்குபவன்‌. வானில்‌ திகழும்‌ மின்னல்‌ போன்று விளங்கும்‌ செஞ்சடையை உடையவன்‌. குன்றுகள்‌ போன்ற மாளிகைகள்‌ சூழ்ந்த கொடிமாடச்‌ செங்குன்றூரில்‌ எழுந்தருளி இருப்பவன்‌. இப்பெருமானின்‌ கழலணிந்த திருவடிகளைத்‌ துதிப்பதே மெய்ப்பொருளாகும்‌.

6

ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னிதாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்துகோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்தபாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே.
சொற்பிரிப்பு
ஓங்கிய மூஇலை நல் சூலம் ஒரு கையன், சென்னிதாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கு அணிந்து,கோங்கு அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்தபாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்று அறுமே.
உரை

பெருமான்‌, ஆற்றல்‌ மிக்க மூவிலை வடிவமான நல்ல சூலத்தை ஒரு கையில்‌ ஏந்தியிருப்பவன்‌. திருமுடியில்‌ கங்கையைத்‌ தாங்கியிருப்பதோடு பிறையையும்‌ அணிந்து இருப்பவன்‌. கோங்கு மரங்கள்‌ நிறைந்த சோலைகளால்‌ சூழப்பட்ட கொடிமாடச்‌ செங்குன்றூரில்‌ எழுந்தருளி இருப்பவன்‌. பொருந்திய தோழனாக விளங்குபவன்‌. இப்பெருமானின்‌ திருவடிகளைத்‌ தொழுபவர்கள்‌ தங்கள்‌ வினைப்பற்றுகளை வேரோடு அறுத்துவிடுவர்‌.

7

நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளைவாடலுடை தலையிற் பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க்கோடல் வளம்புறவிற் கொடிமாடச் செங்குன்றூர் நின்றசேடன தாள்தொழுவார் வினையாய தேயுமே.
சொற்பிரிப்பு
நீடு அலர்கொன்றையொடு நிமிர்புன் சடை தாழ, வெள்ளை-வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய்,கோடல் வளம் புறவில் கொடிமாடச் செங்குன்றூர் நின்றசேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே.
உரை

சிவபெருமான்‌, கொத்தாக நீண்டு மலர்கின்ற கொன்றை மலர்களைத்‌ தன்‌ சடையில்‌ அணிந்துள்ளவன்‌. நிமிர்ந்து தோன்றும்‌ சிவந்த சடைகள்‌ தாழ்ந்து தொங்குமாறு விளங்குபவன்‌. வெண்மையான புலால்‌ நீங்க தலையோட்டில்‌ பலி ஏற்று உண்ணும்‌ வாழ்க்கையை உடையவன்‌. வெண்‌ காந்தள்‌ மலர்ந்த புதர்களை உடைய வளமான முல்லை நிலங்களால்‌ சூழப்பட்ட கொடிமாடச்‌ செங்குன்றூரில்‌ எழுந்தருளி இருப்பவன்‌. இப்பெரியோனின்‌ திருவடிகளைத்‌ தொழுபவர்களின்‌ வினைகள்‌ தேய்ந்து ஒழியும்‌.

8

மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்றுதொத்தலர் செஞ்சடைமேல் துதைய வுடன்சூடிக்கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேயதத்துவனைத் தொழுவார் தடுமாற் றறுப்பாரே.
சொற்பிரிப்பு
மத்த நல் மாமலரும் மதியும் வளர் கொன்றை உடன் துன்றுதொத்து அலர் செஞ்சடைமேல் துதைய உடன் சூடி,கொத்து அலர் தண்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேயதத்துவனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.
உரை

சிவபெருமான்‌ தமது செஞ்சடைமீது நல்ல ஊமத்தமலரையும்‌ இளமதியையும்‌ கொத்தாக மலரும்‌ கொன்றை மலருடன்‌ ஒருசேர நெருங்கச்‌ சூடியிருப்பவன்‌. பூங்கொத்துக்கள்‌ மலர்ந்திருக்கும்‌ குளிர்ந்த பொழில்கள்‌ சூழ்ந்துள்ள கொடிமாடச்‌ செங்குன்றூரில்‌ விரும்பி எழுந்தருளி இருப்பவன்‌. இத்தகைய மெய்ப்பொருளான பெருமானைத்‌ தொழுபவர்கள்‌ தடுமாற்றங்கள்‌ இல்லாதவர்கள்‌ ஆவர்‌.

9

செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு மாலுந்தேட நின்றஅம்பவ ளத்திரள்போல் ஒளியாய ஆதிபிரான்கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேயநம்பன தாள்தொழுவார் வினையாய நாசமே.
சொற்பிரிப்பு
செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்றஅம் பவளத்திரள் போல் ஒளி ஆய ஆதிபிரான்,கொம்பு அணவும் பொழில் சூழ் கொடி மாடச் செங்குன்றூர் மேயநம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே.
உரை

சிவபெருமானார்‌, சிவந்த பொன்‌ நிறமான பிரமனும்‌, திருமாலும்‌ தேடியும்‌ காண முடியாதவாறு, பவளத்‌ திரள்‌ போன்ற ஒளி வடிவினனாக ஓங்கி நின்ற ஆதி பிரான்‌ ஆவார்‌. கொம்புகளாக நெருங்கி வளர்ந்த மரங்கள்‌ நிறைந்த பொழில்கள்‌ சூழ்ந்த கொடிமாடச்‌ செங்குன்றூரில்‌ விரும்பி எழுந்தருளி இருப்பவன்‌. கடவுளான இப்பெருமானின்‌ திருவடிகளைத்‌ தொழுபவர்கள்‌ தங்களின்‌ வினைகள்‌ யாவையும்‌ நாசம்‌ செய்து விடுவர்‌.

10

போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல்ஓதிய கட்டுரைகேட் டுழல்வீர் வரிக்குயில்கள்கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்றவேதியனைத் தொழநும் வினையான வீடுமே.
சொற்பிரிப்பு
போதியர் பிண்டியர் என்று இவர்கள் புறம் கூறும் பொய்ந்நூல்ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர்! வரிக்குயில்கள்கோதிய தண்பொழில் சூழ் கொடி மாடச் செங்குன்றூர் நின்றவேதியனைத் தொழ, நும் வினை ஆன வீடுமே.
உரை

போதி மரத்தை வழிபடுவதாகக்‌ கூறி போலி புத்தத்‌ துறவிகள்‌ திரிகின்றனர்‌. அசோக மரத்தை வழிபடுவதாகக்‌ கூறி வெளி வேஷக்காரர்களாகச்‌ சமணத்‌ துறவிகள்‌ திரிகின்றனர்‌. அவர்கள்‌ உண்மைக்கு மாறான நூல்களில்‌ இருந்து மேற்கோள்களைக்‌ கூறுகின்றனர்‌. அவைகளை உண்மை என்று நம்பி ஏமாந்து உழல்பவர்கனளே! இசைபாடும்‌ குயில்கள்‌ மகிழ்ச்சியுடன்‌ வாழும்‌ குளிர்ந்த பொழில்கள்‌ சூழ்ந்த கொடிமாடச்‌ செங்குன்றூரில்‌ சிவபெருமான்‌ எழுந்தருளி உள்ளார்‌. வேதங்களை அருளிய இப்பெருமானைத்‌ தொழுங்கள்‌! உங்கள்‌ வினைகள்‌ யாவும்‌ அழிந்துவிடும்‌.

11

அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார் புகலிந்நகர் பேணுந்தலைமக னாகிநின்ற தமிழ்ஞான சம்பந்தன்கொலைமலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்றூ ரேத்தும்நலம்மலி பாடல்வல்லார் வினையான நாசமே.
சொற்பிரிப்பு
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலிநகர் பேணும்தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்,கொலை மலி மூஇலையான் கொடி மாடச் செங்குன்றூர் ஏத்தும்நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே.
உரை

அலைகள்‌ மிகுந்த குளிர்ந்த நீரால்‌ சூழப்பட்ட நகர்‌, புகலி என்னும்‌ அழகிய சீகாழியாகும்‌. இந்நகரை விரும்பும்‌ தலைமகனாக நிற்பவர்‌ தமிழ்‌ ஞானசம்பந்தன்‌ ஆகும்‌. கொல்லும்‌ தொழிலில்‌ வல்ல மூவிலைச்‌ சூலத்தை ஏந்திய சிவபெருமான்‌ எழுந்தருளியுள்ள கொடிமாடச்‌ செங்குன்றூரைப்‌ போற்றிப்‌ பாடினார்‌. இப்பதிகப்‌ பாடல்கள்‌ பத்தையும்‌ பாட வல்லவர்களின்‌ வினைகள்‌ யாவும்‌ நாசமாகிவிடும்‌.

திருச்சிற்றம்பலம்