திருமுறை 1 · 1.104 · 11

திருச்சிற்றம்பலம்

திருப்புகலி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
வியாழக்குறிஞ்சி
தலம்
சீர்காழி - 03-புகலி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

ஆடல் அரவசைத்தான் அருமாமறை தான்விரித்தான் கொன்றைசூடிய செஞ்சடையான் சுடுகா டமர்ந்தபிரான்ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம் அமர்ந்தடியார் ஏத்தஆடிய எம்மிறையூர் புகலிப் பதியாமே.
சொற்பிரிப்பு
ஆடல் அரவு அசைத்தான், அருமாமறை தான் விரித்தான், கொன்றைசூடிய செஞ்சடையான், சுடுகாடு அமர்ந்த பிரான்,ஏடு அவிழ் மாமலையாள் ஒரு பாகம் அமர்ந்து அடியார் ஏத்தஆடிய எம் இறை, ஊர் புகலிப் பதி ஆமே.
உரை

சிவபெருமான்‌ படம்‌ எடுத்து ஆடும்‌ பாம்பினை இடையில்‌ கட்டியிருப்பவன்‌. அரிய பெரிய வேதங்களை அருளிச்‌ செய்தவன்‌. கொன்றை மலர்‌ மாலையைச்‌ சூடிய செஞ்சடை முடியை உடையவன்‌. சுடுகாட்டில்‌ நடனம்‌ செய்பவன்‌. இதழ்‌ அவிழும்‌ மலர்கள்‌ பூத்த பெரிய இமய மலை அரசனின்‌ புதல்வியாகிய பார்வதி தேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்றிருப்பவன்‌. அடியவர்‌ போற்ற நடனம்‌ ஆடுபவன்‌. எம்‌ இறைவனான இப்பெருமான்‌ உறையும்‌ ஊர்‌ புகலிப்பதி என்னும்‌ சீகாழிப்‌ பதியாகும்‌.

2

ஏல மலிகுழலார் இசைபாடி யெழுந்தருளாற் சென்றுசோலை மலிசுனையிற் குடைந்தாடித் துதிசெய்யஆலை மலிபுகைபோ யண்டர்வானத்தை மூடிநின்று நல்லமாலை யதுசெய்யும் புகலிப் பதியாமே.
சொற்பிரிப்பு
ஏலம் மலி குழலார் இசை பாடி எழுந்து, அருளால் சென்று,சோலை மலி சுனையில் குடைந்து ஆடித் துதி செய்ய,ஆலை மலி புகை போய் அண்டர் வானத்தை மூடி நின்று நல்லமாலை அது செய்யும் புகலிப்பதி ஆமே.
உரை

மயிர்ச்‌ சாந்தணிந்த கூந்தலினை உடைய பெண்கள்‌ காலைப்‌ பொழுதில்‌ எழுகின்றனர்‌. இறையருள்‌ பெறும்‌ விருப்பத்துடன்‌ இசைபாடிக்‌ கொண்டு சுனையை நோக்கிச்‌ செல்கின்றனர்‌. சோலையினுள்‌ விளங்கும்‌ சுனையின்‌ நீரில்‌ மூழ்கி நீராடித்‌ துதி செய்கின்றனர்‌. கரும்பு ஆலைகளில்‌ நிறைந்தெழுந்த புகை மேலெழுந்து சென்று தேவர்கள்‌ உறையும்‌ வானகத்தை மூடி நிற்கிறது. இதனால்‌ நல்ல காலைப்‌ பொழுதுதான்‌ மாலைப்‌ பொழுது போன்று தெரியும்‌ பதி புகலிப்பதி என்னும்‌ சீகாழிப்‌ பதியாகும்‌.

3

ஆறணி செஞ்சடையான் அழகார்புர மூன்றும்அன்று வேவநீறணி யாகவைத்த நிமிர்புன்சடை எம்இறைவன்பாறணி வெண்டலையிற் பகலேபலி யென்றுவந்து நின்றவேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே.
சொற்பிரிப்பு
ஆறு அணி செஞ்சடையான்; அழகு ஆர் புரம் மூன்றும் அன்று வேவ,நீறு அணி ஆக வைத்த நிமிர் புன்சடை எம் இறைவன்;பாறு அணி வெண் தலையில் பகலே ”பலி” என்று வந்து நின்றவேறு அணி கோலத்தினான்; விரும்பும் புகலி அதே.
உரை

சிவபெருமான்‌ கங்கை சூடிய செஞ்சடையினை உடையவன்‌. அசுரர்களின்‌ வலிய முப்புரங்களைத்‌ தீயால்‌ வெந்து போகுமாறு செய்தவன்‌. திருநீற்றைத்‌ தன்‌ திருமேனியில்‌ அழகாகப்‌ பூசியிருப்பவன்‌. மேல்நோக்கிய சிவந்த சடையை உடையவன்‌. பருந்து சூழும்‌ வெள்ளிய தலையோட்டை கையில்‌ ஏந்திப்‌ பகலில்‌ ‘பலி இடுக’ என்று வந்து நிற்பவன்‌. வேறுபாடு உடைய கோலத்தினனாகிய எம்பெருமான்‌ விரும்பும்‌ தலம்‌ புகலிப்‌ பதி என்னும்‌ சீகாழிப்‌ பதியாகும்‌.

4

வெள்ள மதுசடைமேற் கரந்தான்விர வார்புரங்கள் மூன்றுங்கொள்ள எரிமடுத்தான் குறைவின்றி யுறைகோயில்அள்ளல் விளைகழனி யழகார்விரைத் தாமரைமேல் அன்னம்புள்ளினம் வைகியெழும் புகலிப் பதிதானே.
சொற்பிரிப்பு
வெள்ளம் அது சடைமேல் கரந்தான், விர வார் புரங்கள் மூன்றும்கொள்ள எரி மடுத்தான், குறைவு இன்றி உறை கோயில்அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரைத் தாமரைமேல் அன்னப்புள் இனம் வைகி எழும் புகலிப்பதிதானே.
உரை

சிவபெருமான்‌, பெருகி வந்த கங்கை வெள்ளத்தைத்‌ தன்‌ சடைமேல்‌ தாங்கியிருப்பவர்‌. பகைவர்களாகிய அசுரர்களின்‌ புரங்கள்‌ மூன்றையும்‌ எரியும்படி செய்தவர்‌. இப்பெருமான்‌ குறைவில்லாத நிறைவோடு உறைந்திருக்கும்‌ கோயில்‌ புகலிப்பதுி என்னும்‌ சீகாழியாகும்‌. இங்குள்ள சேறு நிறைந்த வயல்களில்‌ முளைத்திருக்கும்‌ அழகிய மணம்‌ கமழும்‌ தாமரை மலர்கள்‌ மேல்‌ அன்னமும்‌ பிற பறவைகளும்‌ தங்கிச்‌ செல்கின்றன.

5

சூடு மதிச்சடைமேற் சுரும்பார்மலர்க் கொன்றைதுன்ற நட்டம்ஆடும் அமரர்பிரான் அழகாருமை யோடும்உடன்வேடு படநடந்த விகிர்தன் குணம்பரவித் தொண்டர்பாட இனிதுறையும் புகலிப் பதியாமே.
சொற்பிரிப்பு
சூடும் மதிச் சடைமேல் சுரும்பு ஆர் மலர்க் கொன்றை துன்ற, நட்டம்-ஆடும் அமரர்பிரான், அழகு ஆர் உமையோடும் உடன்வேடுபட நடந்த விகிர்தன், குணம் பரவித் தொண்டர்பாட, இனிது உறையும் புகலிப்பதி ஆமே.
உரை

சிவபெருமான்‌ பிறைமதி சூடிய சடையினை உடையவர்‌. அதன்மீது வண்டுகள்‌ மொய்க்கும்‌ கொன்றை மலர்களைப்‌ பொருந்துமாறு அணிந்து நடனம்‌ ஆடுபவர்‌. அந்தத்‌ தேவர்பிரான்‌ உமையம்மையோடு உடனாய்‌ வேட்டுவக்‌ கோலத்தோடு தோன்றி அருச்சுனனுக்கு அருள்‌ புரிந்த விகிர்தர்‌. தொண்டர்கள்‌ இவரது குணங்களைப்‌ புகழ்ந்து போற்றிப்‌ பாட, இப்பெருமான்‌ இனிதாக உறைந்திருக்கும்‌ பதி புகலிப்பதியாகும்‌.

6

மைந்தணி சோலையின்வாய் மதுப்பாய்வரி வண்டினங்கள்வந்துநந்திசை பாடநடம் பயில்கின்ற நம்பன்இடம்அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள் பரவியெழ விரும்பும்புந்திசெய் நால்மறையோர் புகலிப் பதிதானே.
சொற்பிரிப்பு
மைந்துஅணி சோலையின் வாய் மதுப் பாய் வரி வண்டுஇனங்கள்வந்துநந்து இசை பாட, நடம் பயில்கின்ற நம்பன் இடம்அந்தி செய் மந்திரத்தால் அடியார்கள் பரவி எழ, விரும்பும்புந்தி செய் நால்மறையோர் புகலிப்பதிதானே.
உரை

இளமை குன்றாத மரங்களை உடைய அழகிய சோலையினுள்‌, வரி வண்டுகள்‌, மலர்ந்த பூக்களில்‌ உள்ள தேனில்‌ பரவி வந்து, வளரும்‌ இசையைப்‌ பாட, நம்பெருமான்‌ நடனம் புரியும் இடம் புகலிப்பதி என்னும் சீகாழி ஆகும். இப்பதியில்‌, நான்கு வேதங்களில்‌ வல்ல சான்றோர்கள்‌, அந்திக்‌ காலத்தில்‌ சந்தியா வந்தன மந்திரங்களைத்‌ தமது மனதில்‌ விருப்பத்தோடு நினைத்து வணங்கி இறைவழிபாடு செய்து வாழ்கின்றனர்‌.

7

மங்கையோர் கூறுகந்த மழுவாளன் வார்சடைமேல் திங்கள்கங்கை தனைச்சுரந்த கறைக்கண்டன் கருதும்இடம்செங்கயல் வார்கழனி திகழும் புகலிதனைச் சென்றுதம்அங்கையி னால்தொழுவார் அவலம் அறியாரே.
சொற்பிரிப்பு
மங்கை ஓர்கூறு உகந்த மழுவாளன், வார்சடைமேல்—திங்கள்கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன், கருதும் இடம்செங்கயல் வார் கழனி திகழும் புகலிதனைச் சென்று, தம்அம் கையினால்—தொழுவார் அவலம் அறியாரே.
உரை

சோலையில்‌ வண்டினங்கள்‌ இசைபாட நடம்புரியும்‌ நம்பன்‌ இடம்‌ புகலி என்கின்றது. மைந்து - இளமை. நந்து இசை - வளரும்‌ இசைகளை அந்திசெய்‌ மந்திரம்‌ - சந்தியா மந்திரம்‌. பரவி - வணங்கி. அந்தி - காலை அந்தி. நண்பகல்‌ அந்தி, மாலை அந்தி என்பன.

8

வல்லிய நுண்ணிடையாள் உமையாள் விருப்பனவன் நண்ணும்நல்லிட மென்றறியான் நலியும் விறலரக்கன்பல்லொடு தோள்நெரிய விரலூன்றிப் பாடலுமே கைவாள்ஒல்லை அருள்புரிந்தான் உறையும் புகலியதே.
சொற்பிரிப்பு
வில் இயல் நுண் இடையாள் உமையாள் விருப்பன் அவன் நண்ணும்நல் இடம் என்று அறியான் நலியும் விறல் அரக்கன்பல்லொடு தோள் நெரிய விரல் ஊன்றி, பாடலுமே, கை வாள்ஒல்லை அருள் புரிந்தான் உறையும் புகலி அதே.
உரை

ஒளி பொருந்திய நுண்ணிய இடையினை உடைய உமையம்மையிடம்‌ பெருவிருப்பத்தோடு சிவபெருமான்‌ எழுந்தருளிய மேம்பட்ட இடம்‌ திருக்கயிலை மலையாகும்‌. இராவணன்‌ இக்கயிலை மலையைப்‌ பெயர்த்தெடுக்க முயற்சி செய்தான்‌ அந்த வலிய அரக்கனின்‌ பற்களும்‌ தோள்களும்‌ நெரியுமாறு சிவன்‌ தன்‌ கால்விரலை ஊன்றி அவனை அடர்த்தான்‌. அவன்‌ தன்‌ தவறான செயலுக்கு வருந்தி இப்பெருமானைப்‌ புகழ்ந்து சாம வேதம்‌ பாடினான்‌. அதனைக்‌ கேட்டு மகிழ்ச்சி அடைந்த சிவன்‌, கையில்‌ ஏந்திப்‌ போர்‌ செய்யக்‌ கூடிய வாள்‌ ஒன்றை இராவணனுக்கு அருளி அவனை ஆசீர்வதித்தான்‌. இந்தச்‌ சிவபெருமான்‌ உறையும்‌ இடம்‌ திருப்புகலி ஆகும்‌.

9

தாதலர் தாமரைமேல் அயனுந் திருமாலுந் தேடிஓதியுங் காண்பரிய உமைகோன் உறையுமிடம்மாதவி வான்வகுளம் மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்தபோதலர் சோலைகள்சூழ் புகலிப் பதிதானே.
சொற்பிரிப்பு
தாது அலர் தாமரை மேல் அயனும் திருமாலும் தேடிஓதியும் காண்பு அரிய உமைகோன் உறையும் இடம்மாதவி, வான் வகுளம், மலர்ந்து எங்கும் விரை தோய, வாய்ந்தபோது அலர் சோலைகள் சூழ் புகலிப்பதிதானே.
உரை

இறைவன்‌ உமாதேவியோடு எழுந்தருளியிருக்கின்ற இடம்‌ இது என்று அறியாதவனாய்த்‌ தூக்கிய இராவணனை அடர்த்து அருள்புரிந்தான்‌ உறையும்‌ இடம்‌ புகலி என்கின்றது. வில்லிய - ஒளி பொருந்திய. பாடலும்‌ - சாமவேதத்தைப்‌ பாடலும்‌. ஒல்லை - விரைவு.

10

வெந்துவர் மேனியினார் விரிகோ வணம்நீத்தார் சொல்லும்அந்தர ஞானமெல்லாம் அவையோர் பொருளென்னேல்வந்தெதி ரும்புரமூன் றெரித்தான் உறைகோயில் வாய்ந்தபுந்தியி னார்பயிலும் புகலிப் பதிதானே.
சொற்பிரிப்பு
வெந் துவர் மேனியினார், விரி கோவணம் நீத்தார், சொல்லும்அந்தர ஞானம் எல்லாம் அவை ஓர் பொருள் என்னேல்!வந்து எதிரும் புரம் மூன்று எரித்தான் உறை கோயில் வாய்ந்தபுந்தியினார் பயிலும் புகலிப்பதிதானே.
உரை

போலியாகத்‌ திரியும்‌ புத்தமதத்‌ துறவிகள்‌ கொடிய மருதநிற துவராடையை மேனியில்‌ உடுத்துள்ளனர்‌. வெளி வேஷக்‌ காரர்களாகத்‌ திரியும்‌ சமணர்கள்‌ கோவணம்‌ உடுப்பதையும்‌ துறந்து திகம்பரராகத்‌ திரிகின்றனர்‌. இவர்கள்‌ சொல்லும்‌ அழிவுதரும்‌ ஞானங்களை, ஒரு பொருட்டாக ஏற்றுக்‌ கொள்ளாதீர்கள்‌. பொருந்திய அறிவு உடைய சான்றோர்கள்‌ வாழும்‌ புகலிப்பதியில்‌ முப்புரங்களையும்‌ எரித்தவனாகிய சிவபெருமானும்‌ உறைகின்றார்‌. அதனை அடைந்து தொழுங்கள்‌.

11

வேதமோர் கீதம்உணர் வாணர்தொழு தேத்தமிகு வாசப்போதனைப் போல்மறையோர் பயிலும் புகலிதன்னுள்நாதனை ஞானமிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில்ஓதவல் லார்உலகில் உறுநோய் களைவாரே.
சொற்பிரிப்பு
வேதம் ஓர் கீதம் உணர்வாணர் தொழுது ஏத்த, மிகு வாசப்போதனைப் போல் மறையோர் பயிலும் புகலிதன்னுள்நாதனை, ஞானம் மிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில்ஓத வல்லார் உலகில் உறு நோய் களைவாரே.
உரை

திருப்புகலி என்னும்‌ சீகாழிப்‌ பதியினுள்‌ உறையும்‌ சிவபெருமானை வேத கீதங்களை உணர்ந்து வாழ்பவர்கள்‌ தொழுது போற்றுகின்றனர்‌. மிகுந்த மணமுடைய தாமரை மலர்மேல்‌ உறையும்‌ நான்முகனைப்‌ போல விளங்கும்‌ சான்றோர்களும்‌ போற்றித்‌ துதிக்கின்றனர்‌. இப்பதியினுள்‌ உறையும்‌ சிவபெருமானை ஞானம்‌ நிறைந்த ஞானசம்பந்தன்‌ போற்றி இப்பதிகத்தைப்‌ பாடினார்‌. இத்தமிழ்‌ மாலையை நாவினால்‌ ஓதி வழிபட வல்லவர்கள்‌ இவ்வுலகில்‌ பிறவிப்‌ பிணியை நீக்கிவிடுவர்‌.

திருச்சிற்றம்பலம்