திருமுறை 2 · 2.101 · 11

திருச்சிற்றம்பலம்

திருவாரூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
நட்டராகம்
தலம்
ஆரூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பருக்கையானை மத்தகத் தரிக்குலத் துகிர்ப்புகநெருக்கிவாய நித்திலந் நிரக்குநீள் பொருப்பனூர்கருக்கொள்சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடிஅருக்கன்மண்ட லத்தணாவும் அந்தணாரூ ரென்பதே.
சொற்பிரிப்பு
பருக்கை யானை மத்தகத்து அரிக்குலத்து உகிப்புகநெருக்கி வாய நித்திலம் நிரக்குநீள் பொருப்பன் ஊர்கருக்கொள் சோலைசூழ நீடு மாட மாளிகைக் கொடிஅருக்கன் மண்டலத்து அணாவும் அம்தண் ஆரூர் என்பதே.
உரை

மத்தகம்- தலை, நெற்றி. அரி -சிங்கம். அருக்கன்- சூரியன். அணாவும் - கிட்டும். ஆரூர் - 'ஆத்தி' பற்றி வந்த காரணப்பெயர். அது சோழ மன்னரது தார்.

2

விண்டவெள்ளெ ருக்கலர்ந்த வன்னிகொன்றை மத்தமும்இண்டைகொண்ட செஞ்சடை முடிச்சிவனி ருந்தவூர்கெண்டைகொண்ட லர்ந்தகண்ணி னார்கள்கீத வோசைபோய்அண்டரண்டம் ஊடறுக்கும் அந்தணரூ ரென்பதே.
சொற்பிரிப்பு
விண்ட வெள்ளெருக்கு அலர்ந்த வன்னி கொன்றை மத்தமும்இண்டை கொண்ட செஞ்சடை முடிச்சிவன் இருந்த ஊர்கெண்டை கொண்டு அலர்ந்த கண்ணி னார்கள் கீதஓசை போய்அண்டர் அண்டம் ஊடறுக்கும் அம்தண் ஆரூர் என்பதே.
உரை

இண்டை - திங்கள் வட்டம்போலத் திரட்சியுள்ள பத்திரபுட்பங் கலந்த மாலை வகை.சிவலிங்கத்திற்கு இண்டை இன்றியமையாதது. அண்டம் - மேலுலகம்.

3

கறுத்த நஞ்சம் உண்டிருண்ட கண்டர்காலன் இன்னுயிர்மறுத்துமாணி தன்றன்ஆகம் வண்மைசெய்த மைந்தனூர்வெறித்துமேதி யோடிமூசு வள்ளைவெள்ளை நீள்கொடிஅறுத்துமண்டி யாவிபாயும் அந்தணாரூ ரென்பதே.
சொற்பிரிப்பு
கறுத்த நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் காலன் இன்னுயிர்மறுத்த மாண் இதன்று அனாகம் வண்மை செய்த மைந்தன் ஊர்வெறித்து மேதியோடி மூசு வள்ளை வெள்ளை நீள்கொடிஅறுத்து மண்டி ஆவிபாயும் அம்தண் ஆரூர் என்பதே.
உரை

பாலாகித்தோன்றிப் பருகினாராவிகொள்ளும் ஆலாலம்' கந்தபுராணம் - வள்ளியம்மையார், மாணி-பிரமசாரி. மார்க்கண்டேய முனிவர், வண்மை- கொடைமை, வண்மை என்றும் பாடம் இருத்தல் கூடும். வெறித்து - மயங்கி, கலங்கி, வள்ளை என்பது ஒரு கொடி. ஆவி -குளம்.

4

அஞ்சுமொன்றி ஆறுவீசி நீறுபூசி மேனியில்குஞ்சியார வந்திசெய்ய அஞ்சலென்னி மன்னுமூர்பஞ்சியாரு மெல்லடிப் பணைத்தகொங்கை நுண்ணிடைஅஞ்சொலார் அரங்கெடுக்கும் அந்தணாரூ ரென்பதே.
சொற்பிரிப்பு
அஞ்சும் ஒன்றி ஆறுவீசி நீறுபூசி மேனியில்குஞ்சி ஆர வந்திசெய்ய அஞ்சல் என்னிமன்னும் ஊர்பஞ்சி ஆரும் மெல்லடிப் பணைத்த கொங்கை நுண் இடைஅஞ்சொலார் அரங்கெடுக்கும் அம்தண் ஆரூர் என்பதே.
உரை

அஞ்சும் ஒன்றுதல்- ஐம்பொறிகளும் தத்தம் புலன்களைக் கொள்வதில் சிவபெருமான் திறத்திலன்றி மற்றெத்திறத்திலும் ஈடுபடாமை. 'ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள' ஆறு வீசுதல் -காமக் குரோத லோப மோக மத மாற்சரியம், அறு பகையும் செற்று ஐம்புலனும் அடக்கி நிற்றல். குஞ்சி - தலைமயிர். ஈண்டுத் தலைக்கு ஆகு பெயர். குஞ்சி ஆர- தலையார. வந்தி - வந்தனை. தலையாரக் கும்பிட்டு. அஞ்சல் என்னி - அஞ்சாதே என்னும் சிவபிரான். பஞ்சியாருமெல்லடி - பஞ்சுலாவிய மெல்லடி (தி.2 ப. 105 பா.9). அடியின் மென்மைக்குப் பஞ்சு ஒப்பு. மகளிர் அரங்கில் ஏறி நடஞ்செய்யும் திறம் அவையோரால் எடுத்துப் புகழ்ந்து பாராட்டும் அளவுடையதாகும்.

5

சங்குலாவு திங்கள்சூடி தன்னையுன்னு வார்மனத்தங்குலாவி நின்றஎங்க ளாதிதேவன் மன்னுமூர்தெங்குலாவு சோலைநீடு தேனுலாவு செண்பகம்அங்குலாவி யண்டநாறும் அந்தணாரூ ரென்பதே.
சொற்பிரிப்பு
சங்கு உலாவு திங்கள்சூடி தன்னை உன்னுவார் மனத்தங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர்தெங்கு உலாவு சோலை நீடு தேன் உலாவு செண்பகம்அங்கு உலாவி அண்ட நாறும் அம்தண் ஆரூர் என்பதே.
உரை

சங்கு உலாவு திங்கள்- சங்கினைப் போலும் வெண்டிங்கள். சூடி- சூடிய சிவபிரான்,எங்கள் ஆதி தேவன் என்று உரைக்கும் உரிமை ஆசிரியர்க்கு உண்டு.

6

கள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட் டருத்தியோடுள்ளமொன்றி யுள்குவார் உளத்துளான் உகந்தவூர்துள்ளிவாளை பாய்வயற் சுரும்புலாவு நெய்தல்வாய்அள்ளல்நாரை ஆரல்வாரும் அந்தணாரூ ரென்பதே.
சொற்பிரிப்பு
கள்ள நெஞ்ச வஞ்சக் கருத்தை விட்டருத்தியோடுஉள்ளம் ஒன்றி உள்குவார் உளத்துளான் உகந்த ஊர்துள்ளி வாளை பாய் வயல் சுரும்பு உலாவு நெய்தல் வாய்அள்ளல் நாரை ஆரல்வாரும் அம்தண் ஆரூர் என்பதே.
உரை

கள்ளநெஞ்சு வஞ்சகக்கருத்து- நெஞ்சத்தின் இயல்பும் அது காரணமாகத் தோன்றும் வஞ்சகமாகிய காரியமும், அக்காரியத்தின் விளைவான தீயகருத்தும் உணர்த்தப்பட்டன. அத்தீயகருத்து உள்ளவரை அருள்பெறலரிது. அக்கருத்தை ஒழித்து, அன்போடு, உள்ளம் ஒன்றியிருந்து, தியாநம் புரிபவர் உள்ளத்தில் உள்ள சிவபெருமான், வாளைகள் துள்ளிப்பாய்கின்ற வயல். வயலில் நாரை ஆரும் ஆரூர், நெய்தற் பூக்களைச் சூழ்ந்து வண்டுகள் உலாவும். அள்ளல் - சேறு. நெய்தற்கண் உள்ள ஆரல் மீன்கள்.

7

கங்கைபொங்கு செஞ்சடைக் கரந்தகண்டர் காமனைமங்கவெங்க ணால்விழித்த மங்கைபங்கன் மன்னுமூர்தெங்கினூடு போகிவாழை கொத்திறுத்து மாவின்மேல்அங்கண்மந்தி முந்தியேறும் அந்தணாரூ ரென்பதே.
சொற்பிரிப்பு
கங்கை பொங்கு செஞ்சடைக் கரந்த கண்டர் காமனைமங்க வெங்கணால் விழித்த மங்கை பங்கன் மன்னும் ஊர்தெங்கின் ஊடுபோகி வாழை கொத்து இறுத்து மாவின் மேல்அங்கண் மந்தி முந்தி ஏறும் அம்தண் ஆரூர் என்பதே.
உரை

கங்கைநீர் பொங்குஞ் செஞ்சடை, கங்கையைக்கரந்த அகண்டர். அகண்டர்- சருவவியாபகர். மந்தி - பெண் குரங்குகள். தெங்கினூடுபோய், வாழைக்குலையை ஒடித்து, மாமரத்தின் மேல் ஏறும் வளமுடைய.

8

வரைத்தலம் எடுத்தவன் முடித்தலம்உ ரத்தொடும்நெரித்தவன்பு ரத்தைமுன் னெரித்தவன்னி ருந்தவூர்நிரைத்தமாளி கைத்திருவின் நேரனார்கள் வெண்ணகைஅரத்தவாய்ம டந்தைமார்கள் ஆடுமாரூ ரென்பதே.
சொற்பிரிப்பு
வரைத்தலம் எடுத்தவன் முடித்தலம் முரத்தொடும்நெரித்தவன் புரத்தை முன் நெரித்தவன் இருந்த ஊர்நிரைத்த மாளிகைத் திருவின் நேரனார்கள் வெண்ணகைஅரத்த வாய் மடந்தை மார்கள் ஆடும் ஆரூர் என்பதே.
உரை

உரத்தொடும்- மார்போடும், வலியுடன், நிரைத்த - வரிசையுற்ற. திருவின் நேரனார்கள் - திருமகளை நேரொத்தவர்கள். அரத்தவாய் - செவ்வாய்.

9

இருந்தவன்கி டந்தவன்னி டந்துவிண் பறந்துமெய்வருந்தியும் அளப்பொணாத வானவன் மகிழ்ந்தவூர்செருந்திஞாழல் புன்னைவன்னி செண்பகஞ் செழுங்குராஅரும்புசோலை வாசநாறும் அந்தணாரூ ரென்பதே.
சொற்பிரிப்பு
இருந்தவன் கிடந்தவன் இடந்து விண் பறந்து மெய்வருந்தியும் அளப்பொணாதவன் ஆனாவன் மகிழ்ந்த ஊர்செருந்தி ஞாழல் புன்னை வன்னி செண்பகம் செழுங்குராஅரும்பு சோலை வாசநாறும் அம்தண் ஆரூர் என்பதே.
உரை

நான்முகன் திருமால் இடந்தும் பறந்தும் வருந்தியும் அளப்பதற்கு ஒன்றாத உம்பரான். செருந்தி - ஒருவகைமரம்.

10

பறித்தவெண் டலைக்கடுப் படுத்தமேனி யார்தவம்வெறித்தவேடன் வேலைநஞ்சம் உண்டகண்டன் மேவுமூர்மறித்துமண்டு வண்டல்வாரி மிண்டுநீர் வயற்செநெல்அறுத்தவா யசும்புபாயு மந்தணாரூ ரென்பதே.
சொற்பிரிப்பு
பறித்த வெண்தலைக் கடுப் படுத்த மேனியார் தவம்வெறித்த வேடன் வேலை நஞ்சம் உண்ட கண்டன் மேவும் ஊர்மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டுநீர் வயல் செநெல்அறுத்த வாயசும்பு பாயும் அம்தண் ஆரூர் என்பதே.
உரை

பறிகொள்தலையினாக கடுப்படுத்த மேனி. கடுப்பொடியுடற்கவசர். கடுவே நின்று மெய்ப்பொடியட்டி. வெறித்த வேடன்- அஞ்சிய சிவவேடமுடைய சிவபிரான். அச்சம் - நெறியல்லா நெறியிற் செல்வதுபற்றித் தோன்றுவது. மறித்து - தடுத்து. திருப்பி. அசும்பு - நீர்ப்பொசிவு.

11

வல்லிசோலை சூதநீடு மன்னுவீதி பொன்னுலாஅல்லிமா தமர்ந்திருந்த அந்தணாரூ ராதியைநல்லசொல்லும் ஞானசம் பந்தன்நாவின் இன்னுரைவல்லதொண்டர் வானமாள வல்லர்வாய்மை யாகவே.
சொற்பிரிப்பு
வல்லி சோலை சூதநீடு மன்னு வீதி பொன்னுலாஅல்லி மாது அமர்ந்து இருந்த அம்தண் ஆரூர் ஆதியைநல்ல சொல்லு ஞானசம் பந்தன் நாவின் இன்னுரைவல்ல தொண்டர் வானமாள வல்லர் வாய்மையாகவே.சுவாமி : புற்றிடங்கொண்டார்;அம்பாள் : அல்லியம்பூங்கோதை.
உரை

சூதம்- மாமரம். பொன்னுலாவல்லிமாது- அல்லியங்கோதை தேவியின் திருநாமம். நல்ல- ஞான நன்னெறியுணர்த்துஞ்சொற்களை. இன்னுரை- பேரின்பப்பாடல். வானம் - தேன் வந்த முதின்றெளிவி னொளிவந்தவான் (திருவாசகம் 178). வானுக்குள் ஈசனைத் தேடும் மதி இலீர் (திருமந்திரமாலை முத்தி நிச்சயம் பக். 139). வாய்மை- வாயின் (நாவின்) பொய்யாமொழி. வாய்மை எனப்படுவது யாதெனின் என்று ஒரு வினாவை ஏறிட்டுக் கொண்டு அதற்கு விடையிறுக்கும் ஆசிரியர், யாதொன்றும் தீமை இலாத(வற்றைச்) சொலல் என்றார். செயல் என்றோ எண்ணல்என்றோ உரைத்தாரல்லர், அதனால், வாய்மை சொற்களைப் பற்றியதாதல் விளங்கும். உள்-உள்ளம்.உள்ளத்தின் தன்மை உண்மை . உள்ளுதலின் பொய்யாமை குறித்து. உள்ளத்தாற் பொய்யாதொழுகின்உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். மெய்ம்மை- மெய்யாற் செய்யுஞ் செயலின் பொய்யாமை. உண்மையும் முறையே எண்ணம் செய்கை இரண்டனையும் பற்றிய காரணப் பெயர்களாம்.

திருச்சிற்றம்பலம்