திருமுறை 1 · 1.136 · 11

திருச்சிற்றம்பலம்

திருத்தருமபுரம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
யாழ்மூரி
தலம்
தருமபுரம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர் நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர் அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலேதாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.
சொற்பிரிப்பு
மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர்,பூத இனப்படை நின்று இசை பாடவும் ஆடுவர், அவர் படர் சடை நெடுமுடியது ஒர் புனலர்,வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ்கடல் வெண்திரை இரை நுரை கரை பொருது, விம்மி நின்று, அயலேதாது அவிழ் புன்னை தயங்கு மலர்ச் சிறைவண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே.
உரை

திருத்தருமபுரத்தைத்‌ தமது பதியாகக்‌ கொண்டு வீற்றிருக்கும்‌ சிவபெருமான்‌, இளம்‌ பெண்‌ யானையையும்‌ இள அன்னத்தையும்‌ போன்ற பெருமித, மென்மையான நடையினை உடைய மலைமகளான உமையம்மையைத்‌ தமது துணைவியாகக்‌ கொண்டு மகிழ்ந்திருப்பவர்‌. இவர்‌ பூதப்‌ படைகள்‌ நின்று இசைபாட திருநடனம்‌ ஆடுபவர்‌. விரிந்த சடைகளை உடைய நீண்ட முடிமீது கங்கையை அணிந்திருப்பவர்‌. வேதகீதங்களையும்‌ ஏழிசைகளையும்‌ பாடுபவர்‌. இந்தப்‌ பதியில்‌ ஆழ்கடலில்‌ வெண்மையான அலைகள்‌ ஆரவாரத்துடன்‌ நுரைகளோடு கரையில்‌ மோதுகின்றன. அந்தக்‌ கடற்கரையில்‌ வளர்ந்து நிற்கும்‌ புன்னை மரங்களில்‌ பூத்த மகரந்தம்‌ பொருந்திய மலர்களில்‌ வண்டுகள்‌ பாடுகின்றன. அழகிய பொழில்களில்‌ குயில்கள்‌ கூவுகின்றன.

2

பொங்கு நடைப்புக லில்விடை யாமவ ரூர்திவெண் பொடி யணி தடங் கொள்மார் புபூண நூல்புரளமங்குலி டைத்தவ ழும்மதி சூடுவ ராடுவர் வளங் கிளர் புன லரவம் வைகிய சடையர்சங்கு கடற்றிரை யாலுதை யுண்டுச ரிந்திரிந் தொசிந் தசைந் திசைந்து சேரும் வெண்மணற் குவைமேல்தங்கு கதிர்மணி நித்தில மெல்லிரு ளொல்கநின் றிலங் கொளிந் நலங் கெழிற் றருமபு ரம்பதியே.
சொற்பிரிப்பு
பொங்கும் நடைப் புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி, வெண்பொடி அணி தடம் கொள் மார்பு பூணநூல் புரள,மங்குல் இடைத் தவழும் மதி சூடுவர், ஆடுவர், வளம் கிளர்புனல் அரவம் வைகிய சடையர்சங்கு கடல்—திரையால் உதையுண்டு, சரிந்து இரிந்து, ஒசிந்து அசைந்து, இசைந்து சேரும் வெண்மணல் குவைமேல்தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று, இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே.
உரை

சிவபெருமானார்‌ தமது ஊர்தியாக,சினம்‌ பொங்கிய நடையும்‌ உவமை சொல்ல முடியாததாயும்‌ உள்ள விடையை வைத்திருப்பவர்‌. திருநீறு அணிந்த அகன்ற மார்பில்‌ பூணுநூல்‌ துலங்க, ஆகாயத்தில்‌ தவழும்‌ பிறைமதியைச்‌ சூடி ஆடுபவர்‌. வளமை தரும்‌ கங்கையும்‌ கிளர்ந்து எழும்‌ அரவமும்‌ தங்கும்‌ சடையை உடையவர்‌. இப்பெருமான்‌ எழுந்தருளி இருக்கும்‌ பதியானது திருத்தருமபுரம்‌ ஆகும்‌. இப்பதியில்‌, கடல்‌ அலைகளால்‌ அலைக்கப்பட்ட சங்குகள்‌, சரிந்தும்‌, இரிந்தும்‌, ஒருந்தும்‌, அசைந்தும்‌, இசைந்துமாக வெண்மையான மணல்‌ குவியல்கள்‌ மேல்‌ தங்குகின்றன. அங்கு அவை ஒளிமிகுந்த முத்துக்களை ஈனுகின்றன. அந்த ஒளியால்‌ மெல்லிய இருள்‌ அகன்று, இந்தப்‌ பதியானது ஒளியால்‌ மிளிர்கின்றது.

3

விண்ணுறு மால்வரை போல்விடை யேறுவர் ஆறுசூ டுவர் விரி சுரி யொளிகொள் தோடுநின் றிலங்கக்கண்ணுற நின்றொளி ருங்கதிர் வெண்மதிக் கண்ணியர் கழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப்பெண்ணுற நின்றவர் தம்முரு வம்மயன் மால்தொழவ் வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார்தண்ணிதழ் முல்லையொ டெண்ணிதழ் மௌவல் மருங்கலர் கருங் கழிந் நெருங் குநற் றரும புரம்பதியே.
சொற்பிரிப்பு
விண் உறு மால்வரை போல் விடை ஏறுவர், ஆறு சூடுவர், விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்கக்கண் உற நின்று ஒளிரும் கதிர் வெண்மதிக் கண்ணியர், கழிந்தவர் இழிந்திடும் உடைதலை கலனாப்பெண் உற நின்றவர், தம் உருவம் அயன் மால் தொழ அரிவையைப் பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார்தண் இதழ் முல்லையொடு,எண்இதழ் மௌவல், மருங்கு அலர் கருங்கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே.
உரை

சிவபெருமான்‌ வானளாவி நிற்கும்‌ பெரிய மலை போன்ற விடை ஊர்தியில்‌ ஏறிவருபவர்‌. கங்கையை அணிந்தவர்‌. விரிந்தும்‌ மிளிர்ந்தும்‌ சுருண்டும்‌ ஒளியால்‌ விளங்கும்‌ தோடு காதில்‌ திகழ, கண்ணைக்‌ கவரும்‌ வெண்மையாக ஒளிரும்‌ பிறைமதியைத்‌ தலையில்‌ சூடியிருப்பவர்‌. முடைநாற்றம்‌ நாறும்‌ தலையோட்டை உண்கலனாகக்‌ கொண்டிருப்பவர்‌. பிரமனும்‌ திருமாலும்‌ தொழுமாறு விளங்குபவர்‌. உமையம்மையைக்‌ கூடிப்‌ பிணைந்தும்‌, இணைந்தும்‌, அணைத்தும்‌ தம்திருமேனியின்‌ ஒருகூறாகவும்‌ கொண்டிருப்பவர்‌. இப்பெருமான்‌ எழுந்தருளி இருக்கும்‌ பதியானது திருத்தருமபுரம்‌ ஆகும்‌. இத்தலத்தில்‌ கரிய உப்பங்கழிகள்‌ நிறைந்து இருக்கின்றன. குளிர்ந்த இதழ்களை உடைய முல்லை மலர்களும்‌, எட்டு இதழ்களை உடைய மல்லிகை மலர்களும்‌ மணம்‌ வீசுகின்றன.

4

வாருறு மென்முலை நன்னுதல் ஏழையொ டாடுவர் வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்காருற நின்றல ரும்மலர்க் கொன்றை யங்கண்ணியர் கடு விடை கொடி வெடிகொள் காடுறை பதியர்பாருற விண்ணுல கம்பர வப்படு வோரவர் படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார்தாருறு நல்லர வம்மலர் துன்னிய தாதுதிர் தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே.
சொற்பிரிப்பு
வார் உறு மென்முலை நன்நுதல் ஏழையொடு ஆடுவர், வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர்,கார் உற நின்று அலரும் மலர்க்கொன்றை அம் கண்ணியர், கடு விடை கொடி, வெடிகொள் காடு உறை பதியர்,பார் உற விண்ணுலகம் பரவப்படுவோர், அவர் படுதலைப் பலி கொளல் பரிபவம் நினையார்தார் உறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர் தழை பொழில் மழை நுழை தருமபுரம் பதியே.
உரை

சிவபெருமான்‌ கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மையுடன்‌ திருநடனம்‌ ஆடுபவர்‌. வளமையைக்‌ கொடுக்கும்‌ ஒளியை உடைய பிறைமதியைச்‌ சூடி யிருப்பவர்‌. கார்காலத்தே மலரும்‌ கொன்றை மாலையைச்‌ சூடியவர்‌. விரைந்து செல்லும்‌ விடையைக்‌ கொடியாகக்‌ கொண்டிருப்பவர்‌. அச்சந்தரும்‌ இடுகாட்டைத்‌ தமது இருப்பிடமாகக்‌ கொண்டிருப்பவர்‌. மண்ணுலகத்தாராலும்‌ விண்ணுலகத்தாராலும்‌ வணங்கப்படுபவர்‌. கபாலத்தில்‌ பலிகொள்வதைக்‌ கீழ்மையாகக்‌ கருதாதவர்‌. பாம்பை மாலையாக அணிந்திருப்பவர்‌.இப்பெருமான்‌ எழுந்தருளி இருக்கும்‌ பதியானது, மகரந்தங்களை மென்மையாக உதிர்க்கும்‌ மலர்கள்‌ நிறைந்த தழைகள்‌ செறிந்த மேகங்கள் தவழும்‌ பொழில்கள்‌ சூழ்ந்த இருத்தருமபுரம்‌ எனும்‌ நகரமாகும்‌.

5

நேரும வர்க்குண ரப்புகி லில்லைநெ டுஞ்சடைக் கடும் புனல் படர்ந் திடம் படுவதொர் நிலையர்பேரும வர்க்கெனை யாயிரம் முன்னைப்பி றப்பிறப் பிலா தவ ருடற் றடர்த்த பெற்றி யாரறிவார்ஆரம வர்க்கழல் வாயதொர் நாகம ழஃகுறவ் வெழுஃ கொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல்தாரம வர்க்கிம வான்மகள் ஊர்வது போர்விடை கடி படு செடி பொழிற் றருமபு ரம்பதியே.
சொற்பிரிப்பு
நேரும் அவர்க்கு உணரப் புகில் இல்லை; நெடுஞ்சடைக் கடும்புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர்;பேரும் அவர்க்கு எனை ஆயிரம்! முன்னைப் பிறப்பு, இறப்பு, இலாதவர்; உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார்?ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம்; அழகு உற எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல்;தாரம் அவர்க்கு இமவான் மகள்; ஊர்வது போர் விடை கடு படு செடி பொழில் தருமபுரம் பதியே.
உரை

ஆராயுமிடத்து, சிவபெருமானுக்கு உவமையாகச்‌ சொல்லத்தக்கவர்‌ எவருமே இல்லை. விரைவாக ஓடும்‌ கங்கைக்கு தமது நீண்ட சடையை இருப்பிடமாகக்‌ கொடுத்த நிலையினர்‌. அவருக்குப்‌ பெயர்களோ பல ஆயிரம்‌. அவருக்குப்‌ பிறப்பும்‌ இல்லை இறப்பும்‌ இல்லை. தம்மை எதிர்ப்பவர்களைச்‌ சினந்து அழிக்கும்‌ அவரின்‌ பெரு வலிமையை எவர்‌ அறிவார்‌? தீயைப்‌ போன்ற நஞ்சினை உடைய நாகமே அவருடைய ஆபரணம்‌! அழகுற விளங்கும்‌ பொன்நிறக்‌ கொன்றையே அவரது பூமாலை. இமவான்‌ மகளான பார்வதி தேவியே அவரது மனைவி. அவர்‌ ஊர்ந்து செல்வதோ போர்ப்‌ பயிற்சியுடைய இடபம்‌. மணம்‌ நிறைந்த ஒளிமிளிரும்‌ பொழில்களால்‌ சூழப்பட்ட திருத்தருமபுரமே அவரது பதி.

6

கூழையங் கோதைகு லாயவள் தம்பிணை புல்கமல் குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய்மாழையொண் கண்மட வாளையொர் பாகம கிழ்ந்தவர் வலம் மலி படை விடை கொடிகொ டும்மழுவாள்யாழையும் மெள்கிட வேழிசை வண்டுமு ரன்றினந் துவன் றிமென் சிறஃ கறை யுறந்நறவ் விரியும்நற்தாழையும் ஞாழலும் நீடிய கானலி னள்ளிசைப் புள் ளினந் துயில் பயில் தருமபு ரம்பதியே.
சொற்பிரிப்பு
கூழை அம் கோதை குலாயவள் தம் பிணை புல்க, மல்கு மென்முலை பொறி கொள் பொன் கொடிஇடை, துவர்வாய்மாழை ஒண்கண் மடவாளை ஓர் பாகம் மகிழ்ந்தவர்; வலம் மலி படை, விடை கொடி, கொடு மழுவாள்யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று, இனம் துவன்றி, மென்சிறகு அறை உற நற விரியும் நல்-தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம் பதியே.
உரை

மலர்‌ மாலை சூடிய கூந்தலும்‌, தழுவப்பெறும்‌ மெல்லிய தனங்களும்‌, மினுமினுக்கும்‌ மேனியும்‌, கொடிபோன்ற இடையும்‌, பவளம்‌ போன்ற சிவந்த வாயும்‌, ஒளி மிளிரும்‌ கண்களையும்‌ உடைய உமையம்மையை ஒரு பாகமாகக்‌ கொண்டு மகிழ்ந்திருப்பவர்‌ சிவபெருமான்‌ ஆவார்‌. இப்பெருமான்‌ வெற்றியைத்‌ தரும்‌ மழுவைத்‌ தமது படைக்கலமாக வைத்திருப்பவர்‌. விடையைக்‌ கொடியாகக்‌ கொண்டிருப்பவர்‌. இவர்‌ உறையும்‌ பதியானது திருத்தருமபுரம்‌ ஆகும்‌. இப்பதியில்‌ யாழ்‌ இசையையும்‌ வெல்லுமாறு வண்டுகள்‌ ஏழிசையும்‌ பாடி தமது மெல்லிய சிறகுகளால்‌ ஒலித்துச்‌ சூழும்‌ கடற்கரைச்‌ சோலைகளில்‌ தேன்‌ நிறைந்த நல்ல தாழை மரங்களும்‌, புலிநகக்‌ கொன்றையும்‌ நிறைந்துள்ளன. இச்சோலைகளில்‌ உள்ள சேற்று நிலங்களில்‌ இசைபாடும்‌ பறவைகள்‌ துயில்‌ கொள்ளுகின்றன. இத்தகைய தலம்‌ தருமபுரம்‌ ஆகும்‌.

7

தேமரு வார்குழல் அன்ன நடைப்பெடை மான்விழித் திருந் திழை பொருந்து மேனி செங்கதிர் விரியதூமரு செஞ்சடை யிற்றுதை வெண்மதி துன்றுகொன்றை தொல் புனல் சிரங் கரந் துரித்த தோலுடையர்காமரு தண்கழி நீடிய கானல கண்டகங் கடல் அடை கழி யிழிய முண்ட கத்தயலேதாமரை சேர்குவ ளைப்படு கிற்கழு நீர்மலர் வெறி கமழ் செறி வயற் றருமபு ரம்பதியே.
சொற்பிரிப்பு
தே மரு வார்குழல் அன்னநடைப் பெடைமான் விழித் திருந்திழை பொருந்து மேனி செங்கதிர் விரியத்தூ மரு செஞ்சடையில் துதை வெண்மதி, துன்று கொன்றை, தொல்புனல், சிரம், கரந்து, உரித்த தோல் உடையர்கா மரு தண்கழி நீடிய கானல கண்டகம் கடல் அடை கழி இழிய, முண்டகத்து அயலே,தாமரை சேர் குவளைப் படுகில் கழுநீர் மலர் வெறி கமழ் செறி வயல் தருமபுரம்பதியே.
உரை

இனிமையும்‌ மணமும்‌ உள்ள நீண்ட கூந்தல்‌, அன்னம்‌ போன்ற நடை, பெண்‌ மான்‌ போன்ற விழி, ஒளிரும்‌ அணிகலன்கள்‌ ஆயன பொருந்தும்‌ உமையம்மையை ‌ ஒரு பாகமாகக்‌ கொண்டிருப்பவர்‌ சிவபெருமான்‌ ஆவான்‌. இப்பெருமான்‌, சிவந்ததும்‌, ஒளியால்‌‌ விரிந்தும்‌ இருக்கும்‌ தூய சடையில்‌, வெண்மையான பிறைமதி, நிறைந்த கொன்றை மலர்‌, பழமையான கங்கை நீர்‌, தலைமாலை ஆகியவற்றை மறைத்துச்‌ சூடியிருப்பவர்‌. தமது‌ உடையாக உரித்த புலி, மான்‌ ஆகியவைகளின்‌ தோல்களை உடுத்தியிருப்பவர்‌. இப்பெருமான்‌ உறைந்திருக்கும்‌ பதி திருத்தருமபுரம்‌ ஆகும்‌. இப்பதியில்‌ அழகியதும்‌,‌ குளிர்ந்ததுமான உப்பங்கழிகள்‌ உள்ளன. அவற்றில்‌ நீர்‌ முள்ளிகள்‌ உள்ளன. இதனை அடுத்துள்ள கடற்கரைச்‌ சோலைகளில்‌, தாழை மரங்களும்‌ நிறைந்துள்ளன. இங்குள்ள நீர்நிலைகளில்‌ உள்ள தாமரை, குவளை, செங்கழுநீர்‌ ஆகிய மலர்கள்‌ நறுமணத்தைப்‌ பரப்புகின்றன. இத்தகைய வளமும்‌, வயல்களும்‌ செறிந்தது தருமபுரம்‌ ஆகும்‌.

8

தூவண நீறக லம்பொலி யவ்விரை புல்கமல் குமென் மலர் வரை புரை திரள்பு யம்மணிவர்கோவண மும்முழை யின்னத ளும்முடை யாடையர் கொலை மலி படையொர் சூல மேந்திய குழகர்பாவண மாவல றத்தலை பத்துடை யவ்வரக் கனவ் வலியொர் கவ்வை செய் தருள்புரி தலைவர்தாவண ஏறுடை யெம்மடி கட்கிடம் வன்றடங் கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே.
சொற்பிரிப்பு
தூ வணநீறு அகலம் பொலிய, விரை புல்க மல்கு மென்மலர் வரை புரை திரள்புயம் அணிவர்;கோவணமும் உழையின் அதளும் உடை ஆடையர்; கொலை மலி படை ஒர் சூலம் ஏந்திய குழகர்;பா வணமா அலறத் தலைபத்து உடை அவ் அரக்கனவ் வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர்;தாவண ஏறு உடை எம் அடிகட்கு இடம் வன் தடங் கடல் இடும் தடங்கரைத் தருமபுரம் பதியே.
உரை

சிவபெருமான்‌, தூய வெண்ணிறத்‌ திருநீறு துலங்கும்‌ மார்பினர்‌. மலை போன்று திரண்ட தோள்களில்‌ மணம்‌ நிறைந்த மலர்‌ மாலையை அணிந்தவர்‌. கோவணத்தையும்‌ மான்‌ தோலையும்‌ ஆடையாக உடையவர்‌. அழிக்கும்‌ தொழிலில்‌ வல்ல ஆயுதமான சூலத்தை ஏந்திய அழகர்‌. பத்துத்‌ தலைகளை உடைய அரக்கனான இராவணன்‌ சாமகீதங்கள்‌ பாடி அலறுமாறு அவனுடைய வலிமையை அழித்தவர்‌. பின்னர்‌ அவனுக்கு அருள்புரிந்த தலைவனும்‌ இவரே. தாவிச்‌ செல்லும்‌ இயல்புடைய ஆனேற்றைத்‌ தமது ஊர்தியாக உடையவர்‌. இப்பெருமைகளைக்‌ கொண்ட எம்‌ அடிகளின்‌ இடமானது, வலிமையான பெரிய கடல்‌ அலைகள்‌ சேர்ந்த பெரிய மணற்கரையில்‌ விளங்கும்‌ திருத்தருமபுரம்‌ ஆகும்‌.

9

வார்மலி மென்முலை மாதொரு பாகம தாகுவர் வளங் கிளர் மதி யரவம் வைகிய சடையர்கூர்மலி சூலமும் வெண்மழு வும்மவர் வெல்படை குனி சிலை தனிம் மலைய தேந்திய குழகர்ஆர்மலி ஆழிகொள் செல்வனும் அல்லி கொள்தாமரைம் மிசை யவன் அடிம் முடி யளவு தாமறியார்தார்மலி கொன்றைய லங்கலு கந்தவர் தங்கிடந் தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே.
சொற்பிரிப்பு
வார் மலி மென்முலை மாது ஒருபாகம் அது ஆகுவர்; வளம் கிளர் மதி, அரவம், வைகிய சடையர்;கூர் மலி சூலமும், வெண்மழுவும், அவர் வெல் படை; குனிசிலை தனி மலை அது ஏந்திய குழகர்;ஆர் மலி ஆழி கொள் செல்வனும், அல்லி கொள் தாமரை மிசை அவன், அடி முடி அளவு தாம் அறியார்;தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர்; தங்கு இடம் தடங்கல் இடும் திரைத் தருமபுரம் பதியே.
உரை

சிவபெருமான்‌ கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகக்‌ கொண்டவர்‌. பிறைமதி, பாம்பு ஆகியவை தங்கும்‌ சடையினர்‌. கூர்மையான சூலமும்‌, வெண்மையான மழுவும்‌ அவர்‌ வெற்றி கொள்ளுதற்குரிய படைக்கலன்கள்‌. ஒப்பற்ற மேரு மலையை வளைத்து வில்லாக ஏந்திய இளைஞர்‌. சக்கராயுதத்தைக்‌ கொண்ட திருமாலும்‌, அக இதழ்களை உடைய தாமரையில்‌ உறையும்‌ பிரம்மாவும்‌, அடிமுடிகளைக்‌ காணாதவாறு அயரச்‌ செய்தவர்‌. கொத்தாகப்‌ பூக்கும்‌ கொன்றை மலர்‌ மாலையை விரும்புபவர்‌. இப்பெருமான்‌ தங்கியிருக்கும்‌ இடம்‌ எதுவென்றால்‌, அது, பெரிய கடலின்‌ அலைகள்‌ வந்து தழுவிச்‌ செல்லும்‌ தருமபுரம்‌ என்னும்‌ பதியாகும்‌.

10

புத்தர் கடத்துவர் மொய்த்துறி புல்கிய கையர்பொய்ம் மொழிந் தழிவில் பெற்றி யுற்ற நற்றவர் புலவோர்பத்தர்கள் அத்தவ மெய்ப்பய னாகவு கந்தவர் நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்முத்தன வெண்ணகை யொண்மலை மாதுமை பொன்னணி புணர் முலை யிணை துணை யணைவ தும்பிரியார்தத்தரு வித்திர ளுந்திய மால்கட லோதம்வந் தடர்ந் திடும் தடம் பொழிற் றருமபு ரம்பதியே.
சொற்பிரிப்பு
புத்தர், கடத் துவர் மொய்த்து உறி புல்கிய கையர், பொய் மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல்—தவர், புலவோர்,பத்தர்கள், அத் தவம் மெய்ப் பயன் ஆக உகந்தவர்; நிகழ்ந்தவர்; சிவந்தவர்; சுடலைப் பொடி அணிவர்;முத்து அன வெண்நகை ஒண் மலைமாது உமை பொன் அணி புணர் முலை இணை துணை அணைவதும் பிரியார்தத்து அருவித்திரள் உந்திய மால்கடல் ஓதம் வந்து அடர்த்திடும் தடம் பொழில் தருமபுரம்பதியே.
உரை

புத்தர்களாகிய தத்துவவாதிகளும்‌, உறிகளைக்‌ கைகளில்‌ ஏந்தித்‌ திரியும்‌ சமணர்களும்‌ கூறுகின்ற பொய்யான உரைகளை நீக்கிய, நல்ல தவத்தை உடையவர்களும்‌, புலவர்கள்‌, பக்தர்கள்‌ ஆகியவர்களின்‌ மெய்த்தவத்தை விரும்புபவர்‌ சிவபெருமான்‌ ஆவான்‌, இப்பெருமான்‌அன்புக்கு நெகிழ்பவர்‌. வன்புக்கு சினப்பவர்‌. சுடலைப்‌ பொடியை அணிபவர்‌. முத்துப்‌ போன்ற பற்களை உடையவளும்‌, ஒளி பொருந்திய மலைமகளான உமையம்மையின்‌ தனங்களைத்‌ துணையாகக்‌ கொண்டு அவற்றைப்‌ பிரியாமல்‌ இருப்பவர்‌. இப்பெருமான்‌ உறைந்திருக்கும்‌ பதியானது, கடலின்‌ பெரிய அலைகள்‌ வந்து மோதுகின்ற பொழில்கள்‌ உடைய திருத்தருமபுரம்‌ ஆகும்‌.

11

பொன்னெடு நன்மணி மாளிகை சூழ்விழ வம்மலி பொரு புனல் திரு வமர் புகலியென் றுலகிற்தன்னொடு நேர்பிற வில்பதி ஞானசம் பந்தனஃ துசெந் தமிழ்த் தடங் கடற் றருமபு ரம்பதியைப்பின்னெடு வார்சடை யிற்பிறை யும்மர வும்முடை யவன் பிணை துணை கழல்கள் பேணுத லுரியார்இன்னெடு நன்னுல கெய்துவ ரெய்திய போகமும் உறு வர்க ளிடர் பிணி துயரணை விலரே.
சொற்பிரிப்பு
“பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மலீ பொரூஉ புனல் திரூஉ அமர் புகலி” என்று உலகில்தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது செந்தமிழ்த் தடங்கல் தருமபுரம்பதியைப்பின் நெடுவார் சடையில் பிறையும் அரவும் உடையவன் பிணைதுணை கழல்கள் பேணுதல் உரியார்,இன் நெடுநன் உலகு எய்துவர்; எய்திய போகமும் உறுவர்கள்; இடர், பிணி, துயர், அணைவு இலரே.
உரை

பொன்னால்‌ ஆன நல்ல மணிகளால்‌ இழைத்ததுமான உயர்ந்த மாளிகைகளால்‌ சூழ்ந்ததும்‌, திருவிழாக்கள்‌ நிறைந்ததும்‌, கரைகளில்‌ மோதும்‌ நீர்நிலைகள்‌ நிறைந்ததும்‌, திருமகள்‌ உறைவதும்‌, தனக்கு உவமை சொல்ல இயலாததுமான நகர்‌ புகலி என்னும்‌ நகரமாகும்‌. இப்பதியின்‌ மன்னன்‌ ஞானசம்பந்தன்‌ ஆவார்‌. அவர்‌ பாடிய கடல்‌ போன்று பரந்து விரிந்த செந்தமிழ்ப்‌ பாடல்களால்‌, பின்னியுள்ள நீண்ட சடைமுடியில்‌ பிறையையும்‌ பாம்பையும்‌ உடைய சிவபெருமானின்‌ திருவடிகளைப்‌ போற்றிப்‌ பாட வல்லவர்கள்‌ பெரிய நல்‌ உலகை எய்துவர்‌. நல்‌ போகங்களைப்‌ பெறுவர்‌. இடர்‌ செய்யும்‌ பிணிதுயர்‌ நீங்கப்‌ பெறுவர்‌. என்றும்‌ இன்பம்‌ உறுவர்‌.

திருச்சிற்றம்பலம்