திருமுறை 4 · 4.004 · 10

திருச்சிற்றம்பலம்

திருவாரூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
காந்தாரம்
தலம்
ஆரூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பாடிளம் பூதத்தி னானும் பவளச்செவ் வாய்வண்ணத் தானுங்கூடிள மென்முலை யாளைக் கூடிய கோலத்தி னானும்ஓடிள வெண்பிறை யானும் ஒளிதிகழ் சூலத்தி னானும்ஆடிளம் பாம்பசைத் தானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
சொற்பிரிப்பு
பாடு இளம் பூதத்தினானும், பவளச் செவ்வாய் வண்ணத்தானும்கூடு இள மென் முலையாளைக் கூடிய கோலத்தினானும்,ஓடு இள வெண் பிறையானும், ஒளி திகழ் சூலத்தினானும்,ஆடு இளம் பாம்பு அசைத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

நரியைக் குதிரைசெய் வானும் நரகரைத் தேவுசெய் வானும்விரதங்கொண் டாடவல் லானும் விச்சின்றி நாறுசெய் வானும்முரசதிர்ந் தானை முன்னோட முன்பணிந் தன்பர்கள் ஏத்தஅரவரைச் சாத்திநின் றானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
சொற்பிரிப்பு
நரியைக் குதிரை செய்வானும், நரகரைத் தேவு செய்வானும்,விரதம் கொண்டு ஆடவல்லானும், விச்சு இன்றி நாறு செய்வானும்,முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட, முன் பணிந்து அன்பர்கள் ஏத்த,அரவு அரைச் சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

நீறுமெய் பூசவல் லானும் நினைப்பவர் நெஞ்சத்து ளானும்ஏறுகந் தேறவல் லானும் எரிபுரை மேனியி னானும்நாறு கரந்தையி னானும் நான்மறைக் கண்டத்தி னானும்ஆறு சடைக்கரந் தானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
சொற்பிரிப்பு
நீறு மெய் பூசவல்லானும், நினைப்பவர் நெஞ்சத்து உளானும்,ஏறு உகந்து ஏறவல்லானும், எரி புரை மேனியினானும்,நாறு கரந்தையினானும், நால்மறைக் கண்டத்தினானும்,ஆறு சடைக் கரந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

கொம்புநல் வேனி லவனைக் குழைய முறுவல்செய் தானுஞ்செம்புனல் கொண்டெயில் மூன்றுந் தீயெழக் கண்சிவந் தானும்வம்புநற் கொன்றையி னானும் வாட்கண்ணி வாட்டம தெய்தஅம்பர ஈருரி யானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
சொற்பிரிப்பு
கொம்பு நல் வேனில் அவனைக் குழைய முறுவல் செய்தானும்,செம்பு நல் கொண்ட எயில் மூன்றும் தீ எழக் கண் சிவந்தானும்,வம்பு நல் கொன்றையினானும், வாள்கண்ணி வாட்டம் அது எய்தஅம்பர ஈர் உரியானும் ஆரூர் அமர்ந்த அம்மானே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

ஊழி யளக்கவல் லானும் உகப்பவர் உச்சியுள் ளானுந்தாழிளஞ் செஞ்சடை யானுந் தண்ணமர் திண்கொடி யானுந்தோழியர் தூதிடை யாடத் தொழுதடி யார்கள் வணங்கஆழி வளைக்கையி னானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
சொற்பிரிப்பு
ஊழி அளக்கவல்லானும், உகப்பவர் உச்சி உள்ளானும்,தாழ் இளஞ் செஞ்சடையானும், தண்ணமர் திண் கொடியானும்,தோழியர் தூது இடை ஆடத், தொழுது அடியார்கள் வணங்க,ஆழி வளைக் கையினானும் ஆரூர் அமர்ந்த அம்மானே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

ஊர்திரை வேலையுள் ளானும் உலகிறந் தொண்பொரு ளானுஞ்சீர்தரு பாடலுள் ளானுஞ் செங்கண் விடைக்கொடி யானும்வார்தரு பூங்குழ லாளை மருவி யுடன்வைத் தவனும்ஆர்திரை நாளுகந் தானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
சொற்பிரிப்பு
ஊர் திரை வேலை உள்ளானும், உலகு இறந்த ஒண் பொருளானும்,சீர்தரு பாடல் உள்ளானும், செங்கண் விடைக் கொடியானும்,வார் தரு பூங்குழலாளை மருவி உடன் வைத்தவனும்,ஆதிரை நாள் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

தொழற்கங்கை துன்னிநின் றார்க்குத் தோன்றி யருளவல் லானுங்கழற்கங்கை பன்மலர் கொண்டு காதல் கனற்றநின் றானுங்குழற்கங்கை யாளையுள் வைத்துக் கோலச் சடைக்கரந் தானும்அழற்கங்கை ஏந்தவல் லானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
சொற்பிரிப்பு
தொழற்கு அங்கை துன்னி நின்றார்க்குத் தோன்றி அருளவல்லானும்;கழற்கு அங்கை பல்மலர் கொண்டு காதல் கனற்ற நின்றானும்;குழல் கங்கையாளை உள் வைத்துக் கோலச் சடைக் கரந்தானும்;அழற்கு அம் கை ஏந்தவல்லானும் ஆரூர் அமர்ந்த அம்மானே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

ஆயிரந் தாமரை போலும் ஆயிரஞ் சேவடி யானும்ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரந் தோளுடை யானும்ஆயிர ஞாயிறு போலும் ஆயிர நீண்முடி யானும்ஆயிரம் பேருகந் தானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
சொற்பிரிப்பு
ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்,ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரம் தோள் உடையானும்,ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும்,ஆயிரம் பேர் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

வீடரங் காநிறுப் பானும் விசும்பினை வேதி தொடரஓடரங் காகவைத் தானும் ஓங்கியொ ரூழியுள் ளானுங்காடரங் காமகிழ்ந் தானுங் காரிகை யார்கள் மனத்துள்ஆடரங் கத்திடை யானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
சொற்பிரிப்பு
வீடு அரங்கா நிறுப்பானும், விசும்பினை வேதி தொடரஓடு அரங்கு ஆக வைத்தானும், ஓங்கி ஓர் ஊழி உள்ளானும்,காடு அரங்கா மகிழ்ந்தானும், காரிகையார்கள் மனத்துள்ஆடு அரங்கத்து இடை யானும் ஆரூர் அமர்ந்த அம்மானே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

பையஞ் சுடர்விடு நாகப் பள்ளிகொள் வானுள்ளத் தானுங்கையஞ்சு நான்குடை யானைக் கால்விர லாலடர்த் தானும்பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந் தார்க்கருள் செய்யும்ஐயஞ்சின் அப்புறத் தானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
சொற்பிரிப்பு
பை அம் சுடர் விடு நாகப் பள்ளி கொள்வான் உள்ளத்தானும்,கை அஞ்சு - நான்கு உடையானைக் கால் விரலால் அடர்த்தானும்,பொய் அஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ் புரிந்தார்க்குஅருள் செய்யும்ஐ-அஞ்சின் அப்புறத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்